பின் தொடர்பவர்கள்

திங்கள், 30 டிசம்பர், 2024

நம்மை நோக்கி நீளும் கரம்

நம்மை நோக்கி நீளும் கரம்  பேசாலைதாஸ்


ஒரு நாள் பாதிரியார் ஒருவர் லியோ டால்ஸ்டாயை நாடி வந்தார். நீண்ட காலமாக நான் உங்களை வாசித்து வருகிறேன். நீங்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லிலும் இயேசு கிறிஸ்துவைத் தரிசிக்கிறேன். உங்களைவிட உன்னதமான கிறிஸ்தவர் ஒருவர் இருந்துவிட முடியாது. மகிழ்ச்சி. அதே நேரம் ஒரு சின்ன மனக்குறையும் உண்டு. உங்களை இதுவரை ஒருநாள்கூட நான் தேவாலயத்தில் கண்டதில்லையே ஏன்?”

ஏனென்றால் நான் கடவுளை நம்புவதில்லை” என்றார் டால்ஸ்டாய். பாதிரியார் திகைத்தார். 

ஆனால், நீங்கள் கிறிஸ்துவைப் பெயர் சொல்லியே அழைத்து எழுதியிருக்கிறீர்களே. நான் ஒரு கிறிஸ்தவன் என்றல்லவா நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்? பிறகு எப்படி நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்க முடியும்?”

இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமானால் ஒரு குட்டி சொற்பொழிவையே நிகழ்த்த வேண்டியிருக்கும் பரவாயில்லையா?” என்று புன்னகை செய்தபடி விளக்கத் தொடங்கினார் டால்ஸ்டாய்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் நான் உங்கள் தேவாலயத்துக்கு வந்தேன். பரிசுத்தமான அந்தப் பளிங்கு கட்டிடம் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. 

அங்கே நான் கண்ட தேவ குமாரன் எனக்கு அந்நியமானவராகத் தோன்றினார். அவர் உதடுகள் அழுத்தமாக மூடிக்கிடந்தன. என்னால் அவரை நெருங்கிச் செல்ல முடியவில்லை என்பதோடு அவராலும் என்னை நெருங்கிவர இயலவில்லை. 

ஒரு வகையான இறுக்கத்தை அங்கே என்னால் உணர முடிந்தது. அந்த இறுக்கம் மெல்ல மெல்லப் பரவி தேவ குமாரனின் முகத்தை அடைந்து அங்கேயே உறைந்து நின்றுவிட்டதை உணர்ந்தேன்.

இந்தத் தேவ குமாரன் நான் படித்த கிறிஸ்து அல்ல என்று ஏனோ எனக்குத் தோன்றியது. அவரால் எப்படி இறுக்கமான, பரிசுத்தமான, அமைதியான இடத்தில் அடைபட்டுக் கிடக்க முடியும்? 

அவர் வனாந்திரத்திலும் பள்ளம் மேடுகளிலும் அலைந்து திரிந்தவர் அல்லவா? நம் உள்ளேயும் நமக்கு வெளியிலும் பரவிக்கிடக்கும் அழுக்கைச் சுத்தம் செய்த அவர் கரங்கள் எப்படிப் பளிங்கு போல் சுத்தமாக இருக்க முடியும்?

என் கிறிஸ்து ஒரு மனித குமாரன். தினம் தினம் சாலையில் கடந்து செல்லும் சாமானிய மனிதரைப் போன்றவர் அவர். எந்தப் பளபளப்புகளும் அவர் மீது ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. 

பிரகாசமான ஒளி எதுவும் அவர் தலைக்குப் பின்னாலிருந்து புறப்பட்டு வரவில்லை. தூய வெள்ளை அங்கி எதுவும் அணிந்திருக்கவில்லை அவர். இன்ன நிறம் என்று சொல்ல முடியாத, கசங்கிய ஆடை ஒன்றைத் தன்னுடலின் மீது எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் என்னை நெருங்கி வந்து நேரடியாகப் பேசுகிறார். அவர் சொற்கள் எனக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.

எனவே அவர் எனக்கு நெருக்கமானவர். அவர் என் தோழர். கிறிஸ்துவின் தோழராக வாழ்வது எளிதல்ல. 

குறை சொல்லாமல் முள் கிரீடத்தை வாங்கி அணிந்துகொள்ளும் வலு கொண்டவரே அவருடைய தோழராக இருக்க முடியும். தன் அங்கியைக் கழற்றி முகமறியாதவருக்கு அளித்துவிட்டு, குளிரில் நடுங்கியபடி வீட்டுக்கு நடந்து செல்பவரால்தான் அவர் தோழராக இருக்க முடியும். 

பாவி என்று உலகமே தூற்றுபவரை ஒரு மனிதனாக மட்டும் காணும் கண்களைக் கொண்டிருப்பவரே அவர் தோழராக இருக்க முடியும். 

உங்களை நோக்கி வெறுப்பை உமிழ்பவரை அமர வைத்து கோப்பை நிறைய, நுரை ததும்பத் ததும்ப அன்பை நிரப்பிக் கொடுப்பவரே அவர் தோழராக இருக்க முடியும்

எனவே அவர் ஒரு தேவ குமாரனாக மாற்றப்பட்டிருக்கிறார். இது ஒரு சுலபமான ஏற்பாடு. ஒரு மனிதனை கடவுளாக மாற்றுவதில் உள்ள மிகப் பெரும் வசதி அவரை இனிமேல் நீங்கள் வழிபட்டால் மட்டும் போதும் என்பதுதான். 

ஒரு கடவுளைத் திருக்கோயிலுக்குள் உங்களால் பத்திரப்படுத்திவிட முடியும். அவர் சொற்களை ஓர் ஏட்டுக்குள் புதைத்து அதைப் புனித நூலாக அறிவித்துவிடவும் முடியும்.

கௌதமர் என்றொரு மனிதர் இருந்தார். செயலால் மட்டுமல்ல சிந்தனையாலும் ஓர் உயிரையும் வதைக்காதீர்கள். வேறுபாடின்றி ஒட்டுமொத்த உலகையும் அள்ளி அணைத்துக்கொள்ளுங்கள் என்றார் அவர். 

எளிய செய்திதான். ஆனால், அதன் கனம் அதிகம் என்பதால் கௌதமரை நாம் புத்தராக மாற்றிவிட்டோம். அவருடைய அன்பும் அகிம்சையும் புனித உபதேசங்களாகச் சுருங்கிவிட்டன.

அந்த உபதேசங்களை மீண்டும் சொற்களாக மாற்ற வேண்டியிருக்கிறது. அதற்குத் தேவ குமாரனை மனித குமாரனாக மாற்ற வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். 

இது அனைவருக்கும் சாத்தியமா என்று நீங்கள் கேட்பீர்கள். இந்தியாவிலிருந்து காந்தி எனக்கு எழுதிய ஒரு கடிதத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அன்புள்ள டால்ஸ்டாய், உங்கள் வழியில் நானும் என் ராமனை ஒரு மனித குமாரனாக மாற்றியிருக்கிறேன். அவனுடைய இன்னொரு பெயர் ரஹீம். அவன் புத்தரின் நீட்சி. கோயில் கோயிலாக அல்ல, வீதி வீதியாகத் திரிந்து அவனை நான் கண்டடைந்திருக்கிறேன். 

எனக்கு அவன் அளித்த ஒரே சொல், அகிம்சை. வன்முறையும் வெறுப்பும் எங்கெல்லாம் செழித்திருக்கிறதோ அங்கெல்லாம் அகிம்சையை நான் நிரப்பிக் கொண்டிருக்கிறேன். 

எங்களை அடிமைப்படுத்தியிருக்கும் பிரிட்டனை இதே அகிம்சையைக் கொண்டு வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.’

காந்தி நிச்சயம் வெல்வார். எதிரி என்றொருவரை அன்பு உருவாக்குவதே இல்லை என்பதால் அது வெல்ல முடியாததாக இருக்கிறது. 

புத்தரிடமிருந்து நீண்டுவந்திருக்கும் 

கரம் அது. அதைத்தான் கிறிஸ்து பற்றிக்கொண்டார். அதே கரத்தை ரஷ்யாவிலிருந்து நானும் இந்தியாவிலிருந்து காந்தியும் பற்றிக்கொண்டு நிற்கிறோம். 

நான் ஒரு பௌத்தன் என்றால் காந்தியும் ஒரு பௌத்தர். நான் கிறிஸ்தவன் என்றால் காந்தியும் கிறிஸ்தவர். அவருடைய ராம் ரஹீமாகவும் இருப்பதால் நாங்கள் இருவருமே இஸ்லாமியர்களாகவும் இருக்கிறோம்.

நம்மை நோக்கி நீளும் கரம் ஒன்றுதான் என்பதால் அதைப் பற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒன்று என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என் எழுத்து. அதுதான் என் வாழ்க்கை. அதுதான் என் உயிர் மூச்சு.”   

நம்மை நோக்கி நீளும் கரம் ஒன்றுதான்   டால்ஸ்டாய்..

அசாத்தியமான நம்பிக்கை

அசாத்தியமான நம்பிக்கை  பேசாலைதாஸ்

சமீபத்தில்தான் அவனுக்குத் திருமணமாகியிருந்தது. 

அவன் தனது புது மனைவியுடன் படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். 

அவன் பயணித்த ஏரியில் திடீரென்று பெரும் புயல் அடிக்கத் தொடங்கியது. 

அவன் வீரன். 

அவனது இளம் மனைவியோ புயலைப் பார்த்து மிகவும் அஞ்சினாள். 

படகோ சிறியது; கடும் புயலில் படகு மூழ்கிவிடும் என்று அவள் அஞ்சினாள்.

 ஆனால் அவனோ அமைதியாக, எதுவுமே நடவாதது போல அமர்ந்திருந்தான்.

“உனக்குப் பயமேயில்லையா? 

நமது வாழ்க்கையின் கடைசித் தருணமாக இந்தப் பயணம் அமைந்துவிடலாம். மறு கரையை அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 

ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய, மரணம் நிச்சயம். 

நீ என்ன கல்லா, ஜடமா?” என்று கேட்டாள்

அவன் சிரித்தான். 

தன்னுடைய இடுப்பு உறையிலிருந்து வாளை எடுத்தான். 

அவளுக்கோ கூடுதலான ஆச்சரியம்- இவன் என்ன செய்கிறான்?

தன் வாளை அவளது கழுத்திற்கு நெருக்கமாக வைத்தான். 

“உனக்கு அச்சமாக இருக்கிறதா?” என்று கேட்டான்.

அவள் களுகளுவென்று சிரித்து, “உனது கைகளில் வாள் இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்? 😏😏😏

நீ என்னை நேசிப்பவன் என்று எனக்குத் தெரியும்.😁😁

” அவன் தனது வாளைத் திரும்பத் தனது உறையில் செருகினான்.

“உன்னுடைய கேள்விக்கு என்னுடைய பதிலும் இதுதான். 

கடவுள் நம்மை நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். 

அவரது கைகளில்தான் வாள் உள்ளது. 

இந்தப் புயலும் அவர் கைகளில் தான் உள்ளது. 

அதனால் எது நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

 நாம் பிழைத்தாலும் நல்லது. நாம் பிழைக்காவிட்டாலும் நல்லது. 

ஏனெனில் எல்லாம் அவர் கைகளில் உள்ளது. 

அவரால் தவறிழைக்க இயலாது.”

இந்த நம்பிக்கையைத் தான் ஒருவர் பின்பற்ற வேண்டும்.

 அப்படிப்பட்ட அசாத்தியமான நம்பிக்கை, ஒருவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடக்கூடியது. 

அதற்குக் குறைவான எதனாலும் 

எதையும் மாற்ற முடியாது. 

செல்லம்மாபாட்டி(சிறுகதை)

 செல்லம்மாபாட்டி(சிறுகதை) பேசாலைதாஸ்


செல்லம்மாபாட்டிக்கு  இருக்குறதெல்லாம் ஒரு ஓலைக்குடிசையும் கொஞ்ச தட்டுமுட்டு பாத்திரங்களும்தான். அதோட வயசக் கேட்டிங்கன்னா போன மாமாங்கம் வந்தப்போ எழுவத்தஞ்சுன்னு ஒருகணக்குச்சொல்லும் . 

அதுக்கு வருமான முன்னா ஒண்ணே ஒண்ணுதான்.எம்.ஜி.யார் பணமுன்னு வயசான வங்க சொல்லுற முதியோர் பென்சன் தான். அதுக்காகவே போஸ்ட்டுமேனுக்கு வணக்கம் சார்ன்னுசொல்லும் , அவரும் அதைப்புரிஞ்சிகிட்டு காசுவந்தாகொண்டாந்து குடுக்கமாட்டனாம்பாரு அப்புறம் அது இருக்குற நெலமையப் பாத்துட்டு அஞ்சோ பத்தோ குடுப்பாரு அப்ப நீங்க காசு குடுக்குறப்பக் கழிச்சிக்கங்கன்னு சொல்லும் அவரும் கழிச்சத்தில்ல. பாவமுன்னு

மத்தபடி ஆராவது எறக்கப்பட்டுக்குடுத்தா காசு வாங்கிக்கிரும் அப்பவும் அதேதான் சொல்லும் காசுவந்தவன்ன குடுத்துடுறேன்னு. அவங்களும் என்னத்த இதுக்கிட்ட்ப்போயி கேட்டுக்கிட்டுன்னு விட்டுருவாக 

அன்னிக்கி செல்லம்மாவுக்கு மீன்கொழம்பு 

 சாப்புடனுமுன்னு நாக்கு கேட்டுருச்சு மூலையில கெடக்குற சுருக்குப் பையத் தேடிப்புடிச்சிப் பாத்தா காஞ்சுபோன வெத்தல தான் இருந்துச்சு 

ஆருகிட்டகாசுகேக்கலாமுன்னு ரோசன பண்ணிட்டு இருந்தப்ப கண்கண்ட தெயவம் போஸ்ட்டுமேன் வந்தாரு வழக்கம்போல கையத்தூக்கவும் அவரு அதெல்லாம் வரல. இது ஏப்ரல்மாசம் கொஞ்சம் லேட்டாத்தான் வருமுன்னாரு

அது மொகத்தைப் பாத்துத் தெரிஞ்சிக் கிட்டாரு. பையத்துளாவிப் பாத்தா அன்னிக்கி டீக்குடிக்க வைச்சிருந்த காசு அஞ்சுரூவா இருந்துச்சு. இந்தா வைச்சிக்கன்னு குடுத்துட்டு மறக்காம சபளத்துல எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டுக்கெளம்புனாரு .

அப்ப செல்லம்மா சொல்லிச்சி மத்தியானம் வாரப்போ சாப்புட்டுபோப்பா இன்னிக்கி மீன்கொழம்புன்னுச்சுஅவருசிரிச்சிக்கிட்டே வாரன்னு சொல்லிட்டுப்போனாரு  பக்கத்து வீட்டு இருளாயிகிட்ட கொஞ்சம் அரிசி கேப்பமுன்னு போச்சு செல்லம்மா 

இருளாயி இதப்பாத்ததும் இங்கயே கவுந்துகெடக்குப்பானன்னு சொன்னவன்ன 

இந்தா அஞ்சுரூவா வைச்சிக்கன்னு குடுத்துச்சு. இருளாயிக்கு பாவமாப்போச்சு  இரு வாரேன்ன்னு உள்ளபோயிட்டு ஒருடம்ளர் அரிசிகொண்டாந்துச்சு ரேசன் அரிசிதான். 

செல்லம்மாவுக்கு கண்ணு கலங்குச்சு. திரும்பிவாரப்ப மீனு மீனுன்னு கத்திட்டு சின்னப்பொண்ணு வந்துச்சு

செல்லம்மா கூப்புட்டவன்ன ஓங்கூட யாவாரம் செய்யமுடியாதம்மா அஞ்சுரூவாக்கி மீனு கேப்பன்னு சொல்லிட்டு வேகமாப்போயிடுச்சு

செல்லம்மாவுக்கு புசுக்குன்னு போச்சு வீட்டுல போயி ஒக்காந்துருச்சு கொஞ்சநேரத்துல சின்னப் பொண்ணு திரும்பி வந்து நாலு காரப்பொடி மீனகுடுத்துட்டு காசுவேணாம் எங்க ஆத்தாளுக்குக்குடுத்ததா நெனச்சிக் கிறேன்னு சொல்லிட்டு போயிடுச்சு 

செல்லம்மா அடுப்பபத்தவைச்சி ஒலைய போட்டுட்டு மீன அரிய ஆரம்பிச்சிச்சி. மீனு வாசம்முன்னவன்ன அங்க திரியிற கெழட்டுப்பூனை வந்துருச்சு.

மீனச்சுத்தம்பண்ணி கழுவுறதுன்னா மண்சட்டில கல்லு மஞ்சள் அப்புறம் உப்பப்போட்டு அதுக்குள்ள மீனப்போட்டு கழுவும். கழுவி வாரதண்ணில  மொகம்கழுவுறமாதிரி தெளிவாஇருக்கனும் திரும்ப உப்புப்போட்டு வைச்சிட்டு புளிய ஊறப்போட்டு  நல்லா தூக்கலா கரைச்சி வைச்சிட்டு

 மண்சட்டிய அடுப்புல போட்டு வீட்டுல இருந்த வெங்காயம் காஞ்சிகெடந்த பச்சமொளகா கறிவேப்புல போட்டு வதக்கி அத எடுத்து அம்மிமில வைச்சி மையா அரைச்சி மொளகாத்தூள் சேத்து கொதிக்கவைச்சி அதுல ஒரு வ வாசம் வாரப்ப த்தான் மீன் போடனும். அப்புறம் ஒரு கொதிதேன் அம்புட்டுத்தேன் குடிசபூராம் வாசம் தூக்குச்சு பூனை மிய்யா மிய்யான்னு சுத்திவந்துச்சு அதுக்குள்ள சோத்த வடிச்சி எறக்கி தட்டுல போட்டுட்டு அதுமேல கொளம்ப ஊத்தி மீன மேல எடுத்துவைச்சிட்டு சாப்புட ஒக்காந்துச்சு

அந்த மீன் கொளம்பு வாசம் தெருவில போறவுகளைக்கூட  சுண்டி இழுத்து நாக்குல எச்சி ஊறவைச்சிப்புடும். கொஞ்சம் மான ரோசம்பாக்காதவுகன்னா கைய நீட்டி ஆத்தா ஒரு துளி உள்ளங்கையில காட்டு நு வாங்கி நக்கிப்பாத்து நாக்கைச்சொட்டு விட்டுட்டுப்போவாக....

செல்லம்மாவும் மொதல்ல உள்ளங்கையில ஒரு சொட்ட விட்டுப்பாத்து அத நாக்குல வைச்சிட்டு தலைய ஆட்டிக்கிடுச்சு வசமாத்தேன் கொழம்பு வந்திருக்கு சுள்ளுன்னு தொண்டையில எறங்கும்போது கண்ண மூடி ரசிச்சிச்சி....அப்புறம் சோத்தப்பெசஞ்சி உருண்டை உருட்டி பொக்கைவாய்க்குள்ள தள்ளுச்சு....

ஒருவாயிஉள்ளபோனதும் அதுகண்ண மூடி ரசிச்சிச்சு மீன் கொளம்பு மீன் கொளம்புதான் அது தொண்டக்குள்ள போறது செத்துப் போறசொகம்தான்னு சொல்லிக்கிச்சு

அப்ப பூன பாட்டியப் பரிதாபமாப்பாத்துச்சு அதுக்கு ஒரு மீனக்குடுத்து சாப்புடுசாப்புடு நீயும் கெழம்தான ஒனக்கு யாரு குடுப்பா எனக்காவது குடுப்பாகன்னு சொல்லிச்சு

அப்ப மீன திண்ணு புட்டு செல்லம்மாவ வந்து பூனை  ஒரசி மிய்யாவ் மிய்யாவுன்னு சுத்துச்சு.........

அதப்பாக்குறப்போ சின்ன வயசுலயே செத்துப் போன மக நெனப்பு வந்து மீனு செல்லம்மா வுக்கு தொண்டக்குழிய விட்டு எறங்கல கண்ணுல கண்ணீர் வழிஞ்சிச்சு.....

இந்த எழவெடுத்த நெனப்பு வந்துருச்சுன்னா செல்லம்மா தொண்டைய அடைச்சிப்புடும். திங்கிற நேரத்துல பத்தியம் நெனப்புக்கு வந்தா தின்னமாதிரிதான் ... நீயாவது திண்ணுன்னு சொல்லி  பூனைக்கிக் கொடுத்துச்சு.... 

பூனை நாக்கச் சொழட்டிச் சொலட்டி டிங்கிறதப்பாத்து.... லேசான சந்தோசம் வர மீதமிருந்த சோத்த கொழம்பு சட்டில போட்டு பெறட்டி உருட்டி வாய்க்குள்ள தள்ளுச்சு அப்ப கண்ணு சொருக சொல்லுச்சு... சோத்துக்குள்ள இருக்காண்டா சொக்கன்னு....

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்  பேசாலைதாஸ் 


ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு...!!!

ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்த

குருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு

பொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு...!!!

ஆனா அந்த மரம் அதெல்லாம் முடியாதுனு கண்டிஷனா சொல்லிருச்சு...!!!

சரின்னு அடுத்த இரண்டாவது மரத்துக்கிட்டே போய் அந்தக்குருவி கேட்டுச்சு...!!!

இடம்தானே தாராளமா இருந்துக்கோனு பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்...!!!

ஒரே மாசம்தான் ஆத்துல வெள்ளம்

பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது...!!!

ஆனால் குருவிக்கு இடம் கொடுத்த இரண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது...!!!

முதல் ஆலமரத்தைப் பார்த்த குருவி அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்னு

எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது...!!!

ஆனால் வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா...!!!

என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும் நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்...!!!

ஏய் குருவியே நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும் என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது...!!!

இப்படி தான் உண்மையான தியாகிகள் வெளி உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை...!!!

நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு...!!!

நம் மகிழ்ச்சிக்காக தம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு...!!!

மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்...!!!

மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்

சீர் செய்யும் பெற்றோர்களும்

சகோதரர்களும் கூட தியாகிகள்தான்...!!

சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத் தோன்றினாலும்

அது நம் நன்மைக்காகவே இருக்கும்

ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது...!!!

கற்றுக்கொடுக்கும் காயங்கள்!

கற்றுக்கொடுக்கும் காயங்கள்! பேசாலைதாஸ் 


தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .

மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். 

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். 

வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. 

மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். 

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “

இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. 

காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். 

இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். 

எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான். 

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். 

ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. 

இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். 

இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். 

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். 

அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. 

திங்கள், 9 டிசம்பர், 2024

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது.

அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்.

அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்.

அந்த இளைஞன்... மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி

வெடவெடவென நின்றான்.

பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில்

கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான்.

1 : முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,

உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.)

2 : உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்

உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே... (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..)

3 : சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,

நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்.

4 : சிலருக்கு... இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)

கடை த்தெரு அறிவு

கடை த்தெரு அறிவு 

ஒரு இளைஞன்  தன்-நுன்(யூசுப் நபி)

இடம் வந்து சூபி -களை (சித்தர்கள்) பற்றி குறை கூறினார்..

சூபி கள் தவறானவர்கள்,அவர்களை கட்டுபடுத்த வேண்டும் ,ஒடுக்க வேண்டும் என்ற குறைகளாக

கூறினான்.

அதற்கு யூசுப்-நபி அவர்கள்,கையில்

இருந்த மோதிரத்தை கழட்டி கொடுத்து

எப்படியாவது ஒரு தங்க நாணயத்திற்கு

விற்று விட்டு வா என்றார்.

அந்த இளைஞனும் கடை தெரு முழுவதும் ஏறி இறங்கினான்.ஒருவரும்

ஒரு வெள்ளி நாணயத்துக்கு மேல்

கொடுக்க முன்வரவில்லை.

அவன் திரும்பி சென்று

யூசுப்-நபி இடம் இது வெறும் ஒரு வெள்ளி நாணயம் தான் பெறும்

என்றான்.

மறுபடியும் இதை எடுக்கொண்டு ஜீவல்லரி கடைக்கு சென்று கேள்

என்றார்.

ஜீவல்லரிக்கு சென்று விசாரித்தால்

,கடைக்காரன் 1100 தங்க நாணயம் வரும் என்றார்.

இளைஞன் திரும்பி யூசுப்-நபி யிடம்

சென்று 1100 தங்க காசு வரும்

என்றான்.

அதற்கு யூசுப்-நபி(தன்-நுன்) ,அந்த இளைஞனிடம் ,உன்னுடைய சூபி(சித்தர்கள்) பற்றிய அறிவு

கடை த்தெருவில் உள்ளவர்களின்

அறிவை போன்றது.சூபிகள்  விலைமதிப்பற்றவர்கள்‌.

தங்கம்,வைர, வைடூரியங்களை

எடைபோட வேண்டும் என்றால்

நீ ஜீவல்லரி expert ஆக மாற வேண்டும்.

என்று அனுப்பி வைத்தார். 

துரதிர்ஷ்டசாலி

துரதிர்ஷ்டசாலி

 பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். 

தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. 

கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். 

தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த தேநீர் சட்டியில் இருந்து குளிர்ச்சியான நீரைக் குடித்து கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவான். 

அவன் மிக அமைதியாக உணரும் தருணங்கள் அவை. அவன் தொடர்ந்து வேலை செய்யத் தேவையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தருணங்கள் அவை. அவன் வாழ்க்கை இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்தது. 

ஒரு நாள் அவன் அப்படி அந்தத் தேனீர் சட்டியில் இருந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கையில் ஒரு வழிப்போக்கன் அவனையே உற்றுப் பார்த்தான். 

கொல்லன் அவனிடம் கேட்டான். “ஐயா என்ன பார்க்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” ”உங்களின் தேனீர் சட்டியைப் பார்த்தேன். மிக வித்தியாசமாக இருக்கிறது” கொல்லன் சொன்னான்.

 இந்த தேனீர் சட்டி மிகப் பழையது. என் தந்தை இருக்கும் வரை இதில் தான் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து குடிப்பார். அவருக்குப் பின் நான் இதை உபயோகித்து வருகிறேன். களைப்பும் தாகமும் ஏற்பட்டால் நான் இதிலிருக்கும் தண்ணீரைக் குடித்து சற்று இளைப்பாறுவேன்”

அதை நான் சற்று ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டான் அந்த வழிப்போக்கன். இந்த பழைய சட்டியை ஆராய என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக கொல்லன் அந்த தேனீர் சட்டியை அந்த வழிப்போக்கனிடம் தந்தான்.

வழிப்போக்கன் அந்தத் தேனீர் சட்டியைக் கையில் பிடித்து அதனை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தான். பின் சொன்னான். “ஐயா, இந்த தேனீர் சட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு புராதனப் பொருள்” 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லாம் அங்கு கூடி விட்டார்கள். அவர்களில் ஒருவன் ஏளனமாகச் சொன்னான். “இந்தப் பழைய சட்டியைப் போய் இப்படிச் சொல்கிறீர்களே. பார்த்தால் சாதாரணமானதாகத் தானே இருக்கிறது” வழிப்போக்கன் சொன்னான். 

இதற்கு முந்தைய மன்னர் பரம்பரையினர் காலத்தில் இது போன்ற ஒரே மாதிரியான மூன்று தேனீர் சட்டிகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டன. 

இரண்டு தேனீர் சட்டிகள் இன்றும் நம் அரசவையில் இருக்கிறது. மூன்றாவது தொலைந்து போய் விட்டதாகக் கருதப்பட்டு வந்தது. இதைப் பார்த்த பின்பு தான் இது இன்னமும் இருப்பது புரிந்தது. இந்தச் சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பார்த்தால் இதன் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.” 

இதைக் கேட்ட அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். உடனடியாக கொல்லன் அந்தச் சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தான். 

பின் பார்த்த போது வழிப்போக்கன் சொன்னது போல அந்த சட்டியின் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருந்தது. இது வரை யாரும் அப்படிப்பட்ட முத்திரை உள்ள பாண்டங்களைப் பார்த்ததில்லை. வழிப்போக்கன் கேட்டான். 

ஐயா இந்த அபூர்வ சட்டியை நீங்கள் விற்க விரும்பினால் நானே வாங்கிக் கொள்கிறேன். நூறு பொற்காசுகள் வரை தர நான் தயாராக இருக்கிறேன்” கொல்லனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. 

அக்காலத்தில் நூறு பொற்காசுகள் என்பது மிகப் பெரிய செல்வம். கொல்லன் தன் வாழ்நாள் எல்லாம் கடுமையாக உழைத்தாலும் அந்த அளவு செல்வத்தை சம்பாதிக்க முடியாது. கொல்லன் சம்மதித்தான். 

வழிப்போக்கன் இன்னும் சில நாட்களில் பொற்காசுகளுடன் வந்து அந்தத் தேனீர் சட்டியை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டுச் சென்றான். 

கூடியிருந்தவர்களுக்கும் நடந்ததெல்லாம் மிக ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரும் அந்த தேனீர் சட்டியைக் கையில் எடுத்துப் பார்க்க விரும்பினார்கள். அந்த அரச முத்திரையைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். 

ஆனால் அந்தச் சட்டியின் மதிப்பை இப்போது உணர்ந்திருந்த கொல்லன் எல்லோரையும் எட்ட நின்றே பார்க்கச் சொன்னான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே மாறி விட்டது. 

அந்தத் தேனீர் சட்டியை முன்பு போல வெளியே வைக்க முடியவில்லை. மேசை, நாற்காலி, தேனீர் சட்டி மூன்றையும் வீட்டுக்குள்ளே வைத்தான். வேலை முடிந்த பின் முன்பு போல நிம்மதியாக வெளியில் காற்றாட அமர்ந்து குளிர்ந்த நீரை அந்தச் சட்டியில் குடிக்க முடியவில்லை. 

உள்ளே அமர்ந்து குடித்தால் புழுக்கமாக இருந்தது. அந்தச் சட்டியைத் தூக்கி அப்படியே அதிலிருந்து தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. சட்டியை உயரத் தூக்கும் போது கை தவறி விழுந்து உடைந்து விடுமோ என்ற பயம் வந்தது. 

அவனிடம் அந்த அபூர்வ சட்டி இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள். அதற்கு அந்த வழிப்போக

என்ன விலை கேட்டான் என்பதை கொல்லன் வாய் வழியாகவே அறிந்து கொள்ள பலரும் ஆசைப்பட்டார்கள். 

இந்தக் கொல்லன் எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன்’ என்று அவர்கள் அவன் முன்னாலேயே வியந்தார்கள். 

இப்படி அவனுடைய தேனீர்சட்டி பிரபலமடைந்த பின் இன்னொரு பயமும் கொல்லனை ஆட்கொண்டது. யாராவது இதைத் திருடிக் கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. 

பகல் முழுவதும் எப்போதும் அதன் மேல் ஒரு கண் வைத்திருந்தான். அவனுடைய வழக்கமான வேலைகள் எதுவும் சரியாக நடக்கவில்லை. இரவும் திருட்டு பயம் காரணமாக அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இப்படியே நாட்கள் சென்றன. 

சில நாட்களில் வருவதாகச் சொன்ன வழிப்போக்கன் மூன்று மாத காலமாகியும் வரவில்லை. ஆனால் ஆட்களோ அந்த தேனீர் சட்டியைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள். அவனிடம் அது பற்றி கேட்ட வண்ணம் இருந்தார்கள். 

ஒரு நாள் வெளியூர்களில் இருந்தும் ஆட்கள் அதனைப் பார்க்க வந்து விட்டார்கள். அவனிடம் “நீ உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி தான்” என்றார்கள். அவனோ பொறுக்க முடியாமல் சொன்னான்.

உண்மையில் நான் துரதிர்ஷ்டசாலி தான். ஒரு காலத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தபடி நிம்மதியாக நான் இருந்தேன். இந்த மூன்று மாதங்களாக இந்த தேனீர் சட்டி என் நிம்மதியைக் குலைத்து விட்டது. பகலில் நிம்மதியாக வெளியே உட்கார்ந்து இதில் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஒரு கணம் கூட என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. இதை யாராவது திருடிச் சென்று விடுவார்களா என்ற பயத்தில் இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை.” 

அவர்கள் சொன்னார்கள். “அப்படிச் சொல்ல வேண்டாம். அந்த வழிப்போக்கன் கண்டிப்பாக வருவான். அதை விற்று நூறு பொற்காசுகளோடு நீ நிம்மதியாக இருக்கலாம்”

அவன் சொன்னான். “இத்தனை நாட்கள் வராதவன் இனி வருவானா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது நூறு பொற்காசுகள் தேவையில்லை. என் பழைய நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைத்தால் போதும். அதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்” 

மற்றவர்கள் அவனைத் தடுப்பதற்குள் அந்த சட்டியை சுத்தியலால் ஒரே போடாகக் கொல்லன் போட்டுடைத்தான். அந்த தேனீர் சட்டி பல துண்டுகளாக சிதறியது. 

மற்றவர்கள் திகைத்துப் போய் நிற்க கொல்லனோ மாபெரும் நிம்மதியை உணர்ந்தான். 

இந்தக் கதையில் கொல்லன் முன்பு வாழ்ந்த வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. அவனுக்குக் கிடைத்த வருமானம் அவன் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருந்தது. அவனுக்குப் பெரிய கவலைகளோ, பயமோ இருக்கவில்லை. 

ஆனால் அந்த தேனீர் சட்டி மிக அதிக விலை மதிப்புடையது என்று ஊரார் அறிந்தவுடன் எல்லாமே அவனுக்குத் தலைகீழாக மாறி விட்டது. அவன் அது திருட்டுப் போய் விடுமோ என்ற பயத்தை உணர்ந்தான். 

பழைய வாழ்க்கையின் கவலையற்ற தன்மையை இழந்தான். அவனுக்காக அவனை மதிப்பது போய் அந்த தேனீர்சட்டிக்காக அவனை மனிதர்கள் மதித்தார்கள். 

மற்றவர்களுக்கு அவனை விட தேனீர் சட்டி மிகவும் மதிக்கத்தக்க விஷயமாக மாறி விட்டது. எல்லோரும் அவனை அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் மட்டுமே உள்ளுக்குள்ளே ஒரு துரதிர்ஷ்டசாலியாக இருந்தான்

பரிகாரம்(சிறுகதை)

 பரிகாரம் (சிறுகதை)

அவன் அன்னிக்கி பஸ்ல  வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தான் .....

பஸ் போறப்ப ரோட்டோரம் கூட்டமா இருந்துச்சு.  பஸ் வெலக முடியல.... எறங்கிப்பாத்தப்ப ஒரு வயசான அம்மா ரோட்டாரமா மயங்கிக்கெடந்துச்சு.....அதைச்சுத்தித்தான் கூட்டம் ... ஆளாலுக்கு உச்சு கொட்டிக்கிட்டு இருந்தாகலே ஒழிய யாரும் ஒண்ணும் பண்ணல இவன் பஸ்ல இருந்து எறங்கி போய் பாத்தான் அந்த அம்மா அரை மயக்கத்துல இருந்துச்சு..... 

அங்க ஒரு ஆட்டோவைப்பிடிச்சி ஆஸ்பத்திரிக்கிக்கொண்டுபோய் அட்மிட் பண்ணான்...... அவங்க செகபண்ணிப்பாத்துட்டு லோ சுகர்ன்னு ட்ரீட்மெண்ட் கொடுத்து பாத்துகிட்டு இருந்தாங்க

அவனுக்கு நெனப்பு பின்னாடி போச்சு

அவனோட அம்மா வெள்ளத்தாயி நெனப்பு வந்துச்சு. அப்ப அவன் பட்டணத்துல இருந்தான் அவனோட அம்மா கிராமத்துல இருந்தா. அவளுக்கு ஒடம்புக்கு முடியல ...ஒரே வயித்துவலின்னு சொல்லிட்டு இருந்தா..

அங்க அவன் அம்மாவெள்ளத்தாயிக்கி வயிறு வலிக்க ஆரம்பிச்சது. உசுறக்கவ்விப்பிடிச்சி இழுக்குறமாதிரி ஒரு வலி அது. கொஞ்சநாளாவே அப்புடித்தான் வலிக்குது, சாப்பிட இல்லாதகாலத்துல யெல்லாம் நல்லா பசிச்ச அந்தவயிறு சாப்பிட ஏதுமில்லாம பச்சத்தண்னியவும் நீராகார்த்தையும் குடிச்சபோது கொஞ்சநேரங்கழிச்சி ஜிவ்வுன்னு குடல சுண்டி இழுக்கும்..... அது பசினால

ஆனா இப்ப வேற மாதிரி இழுக்குது. உள்ளுக்குள்ள கொரண்டியவிட்டு கடகாவ கெணத்துக்குள்ள தேடி ப்பிடிச்சி மொரட்டுத்தனமா கொடல இழுக்குறமாதிரி ஒரு வலி..... தொடையிலயும் முதுகுலயும் யாரோ நெருப்ப அள்ளிக்கொட்டுறமாதிரி  ஒரு எரிச்சல்.... 

மகனுக்கு கடுதாசி போட்டப்ப அவன் 300 ரூ அனுப்பிச்சான். போய் பெரியாஸ்பத்திரில பாரு...மாத்திர மருந்து குடுப்பாக சரியாப்போகும்ன்னு மணியாடர்ல துண்டுச்சீட்டுல எழுதுனத போஸ்ட்மேன் வாசிச்சிக்காமிச்சாரு

 வெள்ளனாவே பெரியாஸ்பத்திரிக்கிபோய் டோக்கன் வாங்கிகாத்திருந்தாவெள்ளத்தாயி. அங்க ஒரே கூட்டமா இருந்துச்சு.  வலியையும் பொறுத்துக்கிட்டு சுருண்டு ஒக்காந்து காத்துக்கெடந்தா......

பத்துமணிக்கி மேல டாக்டர்ரைப்பாத்தப்போ அவரு கேட்ட வெவரம் எல்லாம் சொன்னா. அப்ப அவரு ஸ்கேன் பண்ணிப்பாக்கனுமே.....ன்னாரு 

எம்புட்டு ஆகுமுயான்னு கேட்டப்ப இந்த சீட்டக்கொண்டுபோய் காமி பாப்பாக காசெல்லாம் கேக்கமாட்டாகன்னாரு

 அங்குணக்குள்ள போனா அங்கயும் வரிசதான் ஒரு வழியா ஒருமணிக்கி முடிஞ்சது. போய்சாப்புட்டுட்டு வாத்தா...ரிப்போர்ட் ரெடியாயிடும்ன்னு அங்குணக்குள்ள இருந்த  வெள்ள சேலை கட்டுன அம்மா சொல்லிச்சி...

வெளிய வந்து டீக்கடையில டீயும் பன்னும் வாங்கிச்சாப்புட்டப்ப வயிறு வலிச்சிச்சி. திங்க முடியல..... அதை காக்காவுக்குப்போட்டுட்டு திரும்ப அங்க போனா. அங்க ஆரும் இன்னும் வரல.....சொவத்துல சாஞ்சி காத்திருந்தப்ப  அசந்துட்டா,,,,,, பழைய நெனப்பு ஓட ஆரம்பிச்சது

அவ புருசன் சாமிக்கண்ணுவ கலியாணம் முடிச்சப்ப அவளுக்கு ஒரே சந்தோசம். ஏன்னா அவன் அவளைக்கையில வைச்சித்தாங்குனான். பெருசா வருமானம் இல்லாட்டினாக்கூட அவள கலங்க விடமாட்டான்.... 

வந்த நாளாவதுமாசத்துலயே அவ உண்டாயிருக்குறது தெரிஞ்சி.... கூத்தாடினான். அவளை எந்தவேலையும் செய்ய விடல. கண்ணுக்குள்ள வைச்சிப்பாக்குறதுன்னு சொல்லுவாங்களே அதுமாதிரிதான் பாத்தான் 

நெறமாசம் பிரசவம் சிக்கலானமாதிரி இருந்தப்ப இதே பெரியாஸ்பத்திரிலதாப் கொண்டாந்து சேத்தான். இவ பிரசவத்துக்கு உள்ளாற துடிச்சிக்கிட்டு இருந்தப்ப ஆயா வெள்ளத்துணி கேட்டுச்சுன்னு வாங்கப்போனவன் வரல..... ஒத்தாசைக்கும் ஆருமில்ல.  அதுக்குள்ள மகன் பொறக்க  இவ சந்தோசமாயிட்டா.....

ஆனா போனவன் திரும்ப வரல. அப்பூறம்தான் தெரிஞ்சது அவன் ஆக்ஸிடெண்டுல ஆஸ்பத்திரி வாசல்லயே போய்சேந்தது...

கைப்பிள்ளையோட வெளியவந்து மறுமாசமே கஞ்சிக்கி வழியில்லாம வீட்டு வேலைக்கிப்போனா. அதுல வார வருமானத்துல வயத்தை கழுவிக்கிட்டு மகனையும் கவன்மெண்ட் பள்ளிக்கூடத்துல படிக்கவைச்சா. அவன தான் பட்டினியா இருந்தாலும்  கஸ்ட்டப்பட்டு கஞ்சி ஊத்தி ப்பாத்துக்கிட்டா.

அவனும் நல்லாத்தான் படிச்சான். ஒடனே பட்டனத்துல வேலையும் கெடச்சது. வேலைசெய்யிற வீடுகள்ல கடன வாங்கி அனுப்பிவைச்சா பட்டணத்துக்கு. 

போய் கொஞ்சநாள் பணமெல்லாம் அனுப்பிச்சான். அப்புறம் அங்கயே ஒரு பொண்ணப்பாத்துகலியாணமும் பண்ணிக்கிட்டான்... ஆனா மாசா மாசம் பணம் மட்டும் அனுப்பிச்சிடுவான்  ...கூட வந்து இருன்னு ஒரு வார்த்தை அவன் வாயில இருந்து கடசிவர வரவே இல்லை....

பாவம் வெள்ளத்தாயிக்கி மகன பேரம்பேத்திகளைப்பாக்கனும்ன்னு ஆசை. கண்னுல கொண்டாந்து காமியான்னு கெஞ்சுனா மகன் கிட்ட ...ஆனா அவன்  சாக்குப்போக்குச்சொல்லிக்கிட்டு இருந்தான்... வராம

இப்ப ஸ்கேனிங்கல ஆளு வந்துட்டாக. இந்தாம்மா யாரு வெள்ளத்தாயின்னு கூப்புட்டாக .... திடுக்குன்னு முழிச்சி போனா. அவங்க ஒரு பைல கையில குடுத்து  போய் அந்த சர்ஜனப்பாருன்னு சொன்னாக.....

அவரைப்போய் பாத்தா வெள்ளத்தாயி.... அவர் ரிப்போர்ட் எல்லாம் வாங்கிப்பாத்துட்டு லேட்டா வந்துருக்கம்மா..... இப்ப எதுவும் சொல்ல முடியாது... நீ வீட்டுக்குப்போயிட்டு தொணக்கி ஆளகூப்புட்டுட்டு நாளைக்கி வந்து  அட்மிட் ஆயிடும்மா. ஒடனடியாப்பாக்கனும்.... கூட ஆளு கட்டாயமா வேணும்..... ஆளோட வந்துருன்னு சொன்னாக....

இவளுக்கு அழுகையா வந்துச்சு. அய்யா என் மகன் பட்டனத்துல இருக்கான். வரமுடியாது  எனக்கு வேற ஆளுக ஆருமில்லன்னா..... 

அதுக்கு நான் என்னம்மா பண்ணமுடியும் ....ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வாம்மான்னாரு

வெள்ளத்தாயி ஆஸ்பத்திரிக்கி வெளிய வந்து பஸ் ஏறி  வீட்டுக்குத்திருமபுனா.  

மெயின் ரோட்டுல எறங்கி ஊருக்கு நடந்துபோகனும்... 2 கி.மீ அப்புடி நடந்து போகையில சாயங்காலமாயிடுச்சு.  கொஞ்சதூரம் நடந்தவன்ன கண்ணக்கட்டிட்டு வந்துச்சு. கண்ணு இருண்டுச்சு..... மயக்கமா வந்து  விழுந்துட்டா......இருட்டு வேற யாருக்கும் தெரியல மறுநா காலையிலதான் சனங்க பாத்து  அவனுக்குத்தகவல் சொன்னாங்க.....  

அவன் அடிச்சிப்பிடிச்சி ஓடிவந்து அம்மாவப்பொணமாத்தான் பாத்தான். அன்னிக்கி அழுதுபொலம்புனான் ... அம்மா அம்மான்னு ஆனா போன உசிறு திரும்பவா போகுது......கண்ணத்தொடச்சிக்கிட்டான்...

கொஞ்சநேரத்துல அந்தம்மா கண்ணு முழிச்சது... அங்க இருந்தவங்க வெவரம் சொல்லவும் அந்த அம்மா கண்ணுல நீர் வழிய கையெடுத்துக்கும்புட்டுச்சு ஆர் பெத்தபுள்ளயோ நீ நல்லாருக்கனும்ன்னு......உன்னப்ப்த்தவ கொடுத்து வைச்சவ. நீ நல்லா இருக்கணும்ன்னு அந்தம்மா சொன்னப்ப 

அவன் கேவி அழுக ஆரம்பிச்சான்..... அனாதையாச்செத்த அம்மாவை நெனச்சி....அவன ஆராலயும் தேத்த முடியல........

மனித ரூபம்

மனித ரூபம் 

வேனுவுக்கு எட்டு வயது, சின்னஞ்சிறு சிறுமி, அவளுக்கு இரண்டு தம்பிகள், அவளுடைய அப்பா ஒரு விபத்தில் இறந்து இரண்டு வருடமாகின்றது, வேனுவின் அம்மா மிகவும் கஸ்டப்பட்டு, கூலி வேலை செய்து, தன் குடும்பத்தை நடத்தி வந்தாள், தான் எப்படியாவது நன்றாக படித்து, வேலை எடுத்து, தன் அம்மாவுக்கு உதவவேண்டும் என்ற இலட்சியம் வேனுவின்  பிஞ்சு மனசின் ஆசை. வேனு தன் கடைசித்தம்பி மீது அளவிலாபாசம் வைத்திருந்தாள். வேனுவின் கடைசித்தம்பி மில்லன், கொஞ்ச நாட்களாக திறாத நெஞ்சு வலியால் அவதிப்பட்டான், ஒரு நாள்; தன் தாய்மாமன் வீட்டுக்கு வந்து, தன் அம்மாவோடு மெல்லிய குரலில் அழுது கொண்டே பேசுவதை, பக்கத்து அறையில் இருந்து கேட்கிறாள்.

அவளுடைய இரண்டு வயது தம்பி உடல் நிலை மோசமாக இருப்பதால், மருத்துவ செலவு அதிகரிக்கிறது. 

அதிக செலவுள்ள ஒரு அறுவை சிகிச்சை அவள் தம்பிக்க தேவைப்படுகிறது. அந்த அளவு கடன் கொடுக்க யாரும் இல்லை.

அழும் தன் தாய்க்கு, மாமா ஆறுதல் கூறியது அவள் மனதில் பதிந்தது.

ஏதேனும் அதிசயம் நடந்தால்தான், 

இவன் குணமாவான் என்று மாமா கூறினார். இதைக்கேட்ட

வேனு, தன்னுடைய உண்டியலை சத்தமில்லாமல் உடைத்தாள்.

1௦௦ ரூபாவும் 50 சதமும் இருந்தன.

மெல்ல பின்பக்க கதவு வழியாக தெருவிற்கு வந்து, அங்கே இருந்த புகழ் பெற்ற மருந்து கடைக்கு சென்றாள்.

என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது. என் மாமா, தம்பியை பிழைக்க வைக்க அதிசயம் வேண்டும் என்றார். அதிசயம் என்ன விலை ? இன்னும் பணம் வேண்டும் என்றாலும் முயற்சிக்கிறேன் என்றாள்.

மருந்துக்கடைக்காரர் வருத்தத்துடன், இங்கே அதிசயம் கிடைக்காது  என்று கூறினார்.

நன்றாக உடையணிந்த, அருகில் நின்று கேட்டு கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர், எவ்வளவு பணம் வைத்து இருக்கிறாய் 

என்று வேனுவிடம் கேட்டார்.

௧௦௦ ருபாவும், 50 சதமும் என்று வேனு கூறினாள்.

அவர் புன்னகையோடு அதிசயம் சரியான விலை நீ வைத்திருக்கும் பணம். பணத்தை கொடு என்று வாங்கி கொண்டு,

வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டு  அவளூடன் அவள் அம்மாவை சந்தித்தார். சிறுவனையும் பரிசோதித்தார்.

அவர்தான் புகழ் பெற்ற Neuro surgeon Dr.Carlton.

பிறகு நடந்தது ஆச்சரியம். ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது.

டாக்டர் சிகிச்சைக்கு எந்த கட்டணமும் வாங்காமல், வேனுவை அணைத்து கொண்டு கூறினார். 100 ரூபா 50 சதத்தில் அதிசயம் வாங்கி தம்பியை குணப்படுத்தி விட்டாய். Good girl.

வீட்டிற்கு குணமான தம்பியை அழைத்து வந்த பிறகு, தாய் "இது அதிசயம். என்ன செலவானது என்று தெரியவில்லை என்றார்.

வேனு  தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்  

சொல்லி கொண்டாள். அதிசயங்கள் எந்த மனித ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம்.

எப்பொழுதும் மனம் தளராதீர்கள் என தென்னங்கீற்றூ மெதுவாக சொன்னது. யாவும் கற்பனை

திங்கள், 14 அக்டோபர், 2024

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும் 

பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்..

அப்போது அங்கு வந்தான் மன்மதன்..

"இக்குழந்தைக்கு பேரழகைத் தருகிறேன் , என்றான்..

தேவையில்லை என்றார் பிரம்மா..

"லட்சுமி வந்து பெருஞ்செல்வத்தை தருகிறேன் என்றாள்..

தேவையில்லை என்றார்.

"சரஸ்வதி வந்தாள் , தேவையில்லை உன் கல்வி என்றார் பிரம்மா....

"இவ்வுளவும் இல்லாமல் பிறகு எதற்காக இந்தக்குழந்தையை உருவாக்குகிறீர்கள்??

என்று கேட்டபோது..

"பேரழகும் இல்லாமல்.

பெருஞ்செல்வமும் இல்லாமல்

பெரிய கல்விச் செல்வமும் இல்லாமல் ஒருவனால் உலகப்புகழ் பெறமுடியும் என்று காட்டுவதற்கு இந்தக்குழந்தையை உருவாக்குகின்றேன் என்றாராம்.....

அந்தக்குழந்தை_தான்.........

பிணவறை

பிணவறை 

தோல்வி கண்ட மனிதருக்கு ஒரு குடும்பம் எப்படி உதவ முடியும்?

வியட்நாம் போர் முடிந்ததும் ஒரு சிப்பாய் தனது பெற்றோரை அழைத்தார். “அம்மா அப்பா, நான் வீட்டுக்கு வருகிறேன், ஆனால் நான் ஒரு உதவி கேட்கிறேன். என்னுடன் வீட்டிற்கு அழைத்து வர விரும்பும் ஒரு நண்பர் என்னிடம் இருக்கிறார்.

"நிச்சயமாக," அவர்கள் பதிலளித்தனர், "நாங்கள் அவரை சந்திக்க விரும்புகிறோம்."என்றனர்.

"நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது," மகன் தொடர்ந்தான், "சண்டையில் அவர் மிகவும் மோசமாக காயமடைந்தார். நிலத்தில் புதைத்து வைத்திருந்த வெடியை மிதித்து ஒரு கையையும் காலையும் இழந்தான். அவனுக்கு வேறு எங்கும் செல்ல முடியாது, அவன் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அதைக் கேட்ட பெற்றோர்கள்.. வருந்துகிறேன் மகனே. அவர் எங்கேனும் நலமுடன் வாழ நாம் உதவலாம்.

"இல்லை, அம்மா அவன் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

"மகனே," தந்தை கூறினார், "நீ என்ன கேட்கிறாய் என்று உனக்குத் தெரியாது. அத்தகைய ஊனமுற்ற ஒருவர் நமக்கு ஒரு பயங்கரமான சுமையாக இருப்பார். நாம் வாழ நமக்கு சொந்த வாழ்க்கை உள்ளது, மேலும் இதுபோன்ற ஒன்றை நம் வாழ்க்கையில் குறுக்கிட அனுமதிக்க முடியாது. நீ வீட்டிற்கு வந்துவிடு .உன் நண்பனை குறித்து மறந்துவிடு. அவர் சொந்தமாக வாழ ஒரு வழியைக் கண்டுபிடிப்பார் என்றார்.

மகன் போனை வைத்தான். அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. இருப்பினும்,

சில நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு காவல்துறையில் இருந்து அழைப்பு வந்தது. அவர்களது மகன் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இது தற்கொலை என போலீசார் கருதினர்.

சோகத்தில் மூழ்கிய பெற்றோர்கள் தங்கள் மகனின் உடலை அடையாளம் காண நகர பிணவறைக்கு சென்றனர். அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குளாக்கியது. அவர்களின் மகனுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் மட்டுமே இருந்தது.

இந்தக் கதையில் வரும் பெற்றோர்கள் போல் நம்மில் பலர் உண்டு.ஆரோக்கியமாகவோ, அழகாகவோ, புத்திசாலியாகவோ இருப்பவர்களை நாம் விரும்புகிறோம்.நம்மை அசௌகரியப்படுத்துபவர்களை நாம் விரும்புவதில்லை.

எந்த நிபந்தனையும் இல்லாமல் , நாம் எப்படி இருந்தாலும் முழுமையாக அன்பு காட்ட, நமக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்த ஓர் உறவு இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

அப்படி ஓர் உறவு கூட இல்லாத சூழ்நிலையில் தான் தற்கொலை முடிவை கூட ஒர் மனம் எடுத்துக்கிறது என்பது பரிதாபமான உண்மை ..!!

வெள்ளி, 11 அக்டோபர், 2024

என்ன விலையழகே?

என்ன விலையழகே? 

''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..''  

பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.

ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.

விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.

வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.

பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..

"அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"

அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்......

"அன்பே என்னை மன்னித்துக் கொள்..இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.. நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் ஸ்கார்ப்பியோவை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)பேசாலைதாஸ்


நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்துக்கொள்கின்றது. நான் மிக அவதானமாக கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.பயணிகள் யாருமில்லை.

செல்போன் சிணுங்கியது. யார் என்று திரை பார்த்தேன்.மகள் மேரியிடம் இருந்து அழைப்பு. 

                                     முதலில் இந்த மேரியைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவரச வேலைக்காக நான் நாட்டுக்கு சென்றிருந்தேன், அப்போதுதான் நான் அவளை பார்த்தேன், ரெம்ப சுட்டியான, சமர்த்தான பொன்னு. ஆனால் கண்களில் ஒரு சோகம், அவளிடம் மனம்விட்டு கதைத்தேன், அப்போதுதான் கண்களின் சோகத்துக்கான காரனம் புரிந்தது, அவள் அப்பாவின் பாசத்துக்காக ஏங்கியவள், அவளது அப்பாவும்  ஓராண்டுக்கு முன்னர் விபத்தொன்றில் அகால மரணமானார். அவள் தன் ஏக்கங்களை சொல்ல சொல்ல, என் மனம் கசிந்துருகியது. " இனிமேல் அப்பா இல்லை என்ற கவலையை விடு, அப்பாவாக நான் இருக்கின்றேன் என ஆறுதல் சொன்னேன், அந்த வார்த்தைகளை அவள் மலை போல நம்பிவிட்டாள்!

                                                        காரை ஓரம்கட்டி விட்டு, என்னம்மா என்றேன். போனிலே மகள் படபடவெனப் பொரிந்தாள். "அப்பா 28 - ம் தேதியோடு பப்ளிக் எக்ஸாம் முடிகிறது. ஒரு மாதத்துக்குள்ளே பரீட்டை முடிவுகள் வந்ததுவிடம்,  அத்தோடு எனக்கு பிறந்த நாளும் வருகின்றது. எனக்கு புதிய உடை வேண்டும் " என்றாள்.

                                                     "பிறந்தநாள் வருவதற்கு, இன்னும் 26 நாட்கள் இருக்கின்றன, மேலும் இப்போது என்னிடம்பணமும் இல்லை. உன் பிறந்த நாளில் நான் அங்கு நிற்பேன் " என்றேன்."அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்கள் வந்தே ஆகவேண்டும், எனக்கு புது ஆடை வாங்கித்தரவேண்டும் இல்லை என்றால் இனிமேல் பேசவே மாட்டேன் " என்றபடி அலைபேசியை அணைக்கிறாள். அவள் சொன்னபடியே அங்கே சென்றேன், என் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, என் வங்கி அட்டை ஏனோ இலங்கையில் இயங்க மறுத்துவிட்டது. 

                                                     மேரியின் அம்மாவை தனியே அழைத்து " வங்கி அட்டை விடயத்தை சொன்னேன். உன்னிடம் ஏதாவது இருக்கிறதா " என்றேன். அவள் உதடு சுழித்து கைகளை விரித்த போது பரிதாபமாக இருந்தது. நான்  கொடுத்தால்தானே அவளிடம் இருப்பதற்கு ! சட்டியில் இல்லாமல் அகப்பை யில் எப்படி வரும்?

                                                     மறுநாள் துணிக்கடைக்குப்போகும் வழியில் மகளி டம் சொன்னேன்  -"இம்முறை சிம்பிளாக எடு அடுத்த முறை காஸ்ட்லியாய் வாங்கித் தருகிறேன் " என்று. "ம்ம்.....பார்க்கலாம்" என்றாள். கடைக்குள் நுழை ந்ததும் விலையுயர்ந்த பகுதிக்கு சென்று வேலைப்பாடுகள் மிகுந்த ஆகாய நீல வண்ண உடையை எடுத்து வருகிறாள் விலை பார்த்து அதிர்ந்தேன்,

                                                    இரண்டாயிரம் என்றிருந்தது. "இத்தனை பணம் இல்லையே "என்று நான் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாமல் காசாளரை நோக்கி நடக்கிறாள். பதைபதைத்தபடி பின்னாலேயே ஓடினேன். தன் சுடிதார் ஜேப்பிலிருந்து ஐந்து பத்து ஐம்பது நூறென்று இரண்டாயிரத் தையும் எண்ணிக் கொடுத்தவள் உடையை வாங்கித் திரும்புகிறாள். நானோ விக்கித்து நிற்கிறேன்.

                                                    வீடு திரும்பும் வழியில் கேட்டேன்  - "ஏது இத்தனை பணம் " என்று."அப்பா நான் பள்ளி முடிந்ததும், சைக்கிலிலே பேப்பர் போடு வேன், அதில் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்தேன் அப்பா. நம் குடும்ப நிலைமைக்கு புதிய உடை எடுக்க இஷ்டமில்லைதான் எனக்கு. ஆனால் என் தோழிகள் பிறந்த நாளின் போது புதிய உடை போட்டு வந்து என் அம்மா வாங்கித் தந்தது என் அப்பா வாங்கித் தந்ததென்று பெருமையாய் சொல்லும் போது அந்தப் பெருமை உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத் தேன். எங்களுக்காக காலமெல்லாம் கஷ்டப்படும் உங்களுக்காக இந்த உதவி யைக் கூட செய்யாட்டி எப்படி அப்பா  ! நான் செய்தது தப்பா !? " என்றாள் அப்பாவியாய்.

                                                     "இல்லை மகளே "  என்று அவள் தலையை மெல்ல வருடி என் தோள் சாய்த்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டேன், முட்டி வரும் கண்ணீர்  -  வெளியே கொட்டி விடாதபடி.........

                                                    மாலையில் தன் வீட்டிற்கு வந்த தோழிகளிடம் புதிய உடையைக் காட்ட பிரமிப்புடன் பார்த்து "ஐயோ செம சூப்பர்டி "  என்றனர். "என் அப்பா வாங்கித் தந்தது, அப்பா உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியும் இருக்கு அப்பா நான் பரீட்ச்சையில் பாஸாகி, சட்டக்கல்லூரிக்கும் இடம் கிடைச்சிருக்கு அப்பா " என்றபடியே ஓடோடி வந்து அன்பாய் என் கை பற்றுகிறாள்.ஏனோ தெரியவில்லை  -இறந்து போன என் தாயின் வாஞ்சை யான ஸ்பரிசத்தை உணர்கிறேன் நான்  !!  அன்புடன் பேசாலைதாஸ்👍

மந்திரம் யார் கூறினால் சித்தியாகும்

 மந்திரம் யார் கூறினால் சித்தியாகும்

"ஒரு அரசவைக்கு சித்த முனிவர் ஒருவர் பாடி பொருள் பெற வந்திருந்தார். அவர் எந்த மந்திரங்களை கூறினாலும் அது அப்படியே பலித்தாகும்.

அவரிடம் அரசர் எனக்கும் சில மந்திரங்களை சொல்லித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த முனிவர் மறுத்துவிட்டார். அரசர் மேலும் மேலும் கட்டாயப்படுத்தவே முனிவரோ அரசருக்கு சில மந்திரங்களை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

மீண்டும் சில காலம் கழித்து அந்த முனிவர் அரசவைக்கு வந்தார். அப்போது அரசர், ‘தாங்கள் கற்று கொடுத்த மந்திரம் ஏதும் பலிக்கவில்லை. என்னை நன்கு ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று முனிவரிடம் கூறினார். உடனே அந்த முனிவரோ அரசரின் தலையை துண்டியுங்கள் என அங்கிருந்த காவலாளிகளிடம் கூறினார். அனைவரும் வியப்புக்குள்ளாகினர்.

அரசர், ‘என் தலையைவா துண்டிக்க சொன்னீர்’ என்று கோபத்துடன் முனிவரை தூக்கி சிறையில் அடையுங்கள் என்றார். உடனே காவலாளிகள் முனிவரை சிறையில் அடைக்க முயன்றனர்.

அப்போது முனிவர், ‘அரசே! நான் கூறிய போது அசையாமல் நின்ற காவலர்கள் நீர் சொன்னதும் என்னை சிறையில் அடைக்க முற்பட்டனர். 

இப்போது புரிகின்றதா யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அந்த சொற்களை கூறவேண்டியவர்கள் கூறினால் தான் அது பலித்தாகும்’ என்று கூறினார்...

ஞாயிறு, 30 ஜூன், 2024

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ் 


ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,அதில் அரசியல்வாதிகள் அதிகம், அது வும் தமிழ் தேசியம் என்ற உணர் ச்சித்தூண்டலை வீசி வாக்குகள் சேகரிக்கும் அரசியல்வாதிகள் மன்னாரிலும் இலங்கையிலும் அதிகம்! வெற்றி பெற்றதும் மக்களை கண்டு கொள்வதி ல்லை. கரும்பு தோட்டம் செய் வதும். பெற்றோல் செட் போடுவதுகம், காணி கொள் வனவு செய்வதும் இப்படியாக பல நல்ல காரியங்களை தம் சுய நலனுக்காக செய்வார்கள், மக்கள் தேவைகளை தெரிந்து கொள்வதில்லை. சேவை செய்வ தற்கு பாராளமன்ற பதவி தேவயற்றது. நான் தைப்பெண்கள் என்ற அமைப்பை உருவாக்கி கிட்டதட்ட எழுபது வறிய பெண்களுக்கு வாழ்வாதார உதவி செய்கின்றேன். ஏன் இவர்களால் அப்படி செய்ய முடியவில்லை? மக்களே நீங்கள் விழிப்பாக இருந்தால் தூண்டலில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள், அதற்காக இந்த கதையை சொல்கின்றேன்.

                                             ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும். அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான். 

அவனின் பேச்சு மக்களை ஈர்த்தது. மக்கள் அதில் மதி மயங்கினர். அதனால் அவனை அமோகமாக ஆதரித்தனர். அவனும் அந்நாட்டின் மன்னனானான்.

ஆனால் அவன் மன்னனான பின் அவன் கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. 

இதனால் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். மக்களின் சார்பாக மன்னரிடம் மெய்க்காப்பாளனாக வேலை பார்த்த ஒருவன் அவரிடம் கேட்டான்,

"மன்னா! உங்கள் வார்த்தைகளை நம்பித்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன சலுகைகள் ஒன்றைக்கூட செய்யவில்லையே! ஏன் மன்னா?"

மன்னன் பதிலேதும் பேசவில்லை. சில நாட்கள் கழித்து அந்த மெய்க்காப்பாளனை அழைத்துக் கொண்டு நதிக்கு மீன் பிடிக்கச் சென்றான்.

மெய்க்காப்பாளன் தூண்டிலில் புழுவை மாட்டிக் கொடுக்க கொடுக்க அதை வாங்கிய மன்னன் நதியில் மீன் பிடித்தான். நிறைய மீன்கள் சிக்கின. 

மன்னன் மீண்டும் அரண்மனைக்கு கிளம்பும் முன் மெய்க்காப்பாளனிடம் கேட்டான்,

" வீரனே! நான் மீன் பிடிப்பதற்கு முன்பாக மீனுக்கு விருப்ப உணவாக இருக்கும் புழுக்களை தூண்டிலில் மாட்டி என்னிடம் கொடுத்தாயே! 

இப்பொழுது இரண்டு கூடை நிறைய மீன்கள் பசியால்  துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு ஏன் நீ புழுவை இப்பொழுது உணவாக வழங்கவில்லை?"

வீரன் சட்டென பதில் சொன்னான், 

"மன்னா! நமது நோக்கம் புழுவைக் காட்டி மீன்களை பிடிப்பது தானே தவிர மீன்களைப் பிடித்து அதற்கு புழுக்களை உணவாக அளிப்பது அல்ல"

மன்னன் சிரித்துக் கொண்டே கேட்டான்,

"இப்பொழுது புரிகிறதா? நான் ஏன் மன்னனாகும் முன் மக்களிடம் சொன்னவைகளை மன்னான பின் செய்யவில்லை என்று..!" 

நீங்க எதையோ கற்பனை செய்தால் கம்பெனி பொறுப்பில்லை!! 

நண்பர்களே இப்போது புரிகின்றதா? மீண்டும் அடுத்து சிந்தனை கதைகளுடன்  உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

அலுவலக நடைமுறை

நடைமுறை 

ஒரு அரசு அலுவலகத்தின் பூட்டி வைக்கப்பட்டு இருந்த பதிவு அறைக்குள்  (Record Room) ஒரு சின்ன இடைவெளி வழியாக ஒரு பாம்பு புகுந்தது. 

அதனை, அவ்வலுவலக ஊழியர் ஒருவர் பார்த்து விட்டு, தனது கண்காணிப்பாளரிடம் இவ்வாறு நமது அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்து விட்டது என்று தெரியப்படுத்தினார். கண்காணிப்பாளரும், தனது மேல் அதிகாரியுடன் கலந்து ஆலோசிக்க நினைத்தால் அவர் அலுவல் விஷயமாக ஒரு வாரம் வெளியூர் சென்று இருந்தார். 

ஒரு வாரம் கழித்து  மேல் அதிகாரி வந்தவுடன், கண்காணிப்பாளர் அவரிடம், கடந்த வாரம் தாங்கள் இல்லாத பொழுது நமது அலுவலகத்திற்குள் ஒரு பாம்பு புகுந்து விட்டது, அதனைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார். 

மேலதிகாரியும், "சரி, அந்தப் பாம்பினைப் பிடிக்க வனத்துறைக்கு கடிதம் எழுதுங்கள்" என்று கூறிவிட்டார். 

கண்காணிப்பாளரும், பாம்பினைப் பிடித்து தர வனத்துறைக்கு கடிதம் எழுத, அங்கு இருந்து ஒரு வாரம் கழித்து பதில் வந்தது. 

"பாம்பினைப் பிடிக்கும் எங்கள் அலுவலக ஊழியர்கள் தற்சமயம் இல்லை, அவர்கள் ஒரு மாதம் பயிற்சிக்காக சென்று உள்ளனர். நீங்கள் ஒரு தனியார் பாம்பு பிடிப்பவரை வைத்து பிடித்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்து இருந்தார்கள். 

உடனே, கண்காணிப்பளாரும், அடுத்து ஒரு கடிதத்தை  வனத்துறைக்கு எழுதினார், அதில் "அவ்வாறு நாங்கள் தனியாரை வைத்து பாம்பு பிடித்தால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் வனத்துறை மூலம் எங்களுக்கு தரப்படுமா?" என்று கேட்டு இருந்தார். அதற்க்கு, "இல்லை, அவ்வாறு கொடுக்கப்பட மாட்டாது, நீங்களே அதற்க்கு உண்டான ஊதியத்தினை அரசிடம் இருந்து பெற்று கொடுங்கள்" என்று பதில் வந்தது.

உடனே, கண்காணிப்பாளர் வனத்துறையினர் அறிவுரையை மேற்கோள் காட்டி தலைமை செயலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.  

அதில் இவ்வாறு பாம்பு புகுந்து விட்டது, அதனை பிடிப்பதற்கு உண்டான ஊதிய தொகையை தனி அரசு ஆணை மூலம் பட்ஜெட்டில் போட்டு தர வேண்டும் என்று கோரி இருந்தார். 

அதற்க்கு, தலைமை செயலகத்தில் இருந்து இருவரங்களில் ஒரு பதில் வந்தது, உங்கள் அலுவலகத்தில் இதற்க்கு முன்னர் இது போன்ற பாம்பு புகுந்த சம்பவம் நடந்து இருக்கிறதா? என்று கேட்டு இருந்தார்கள். கண்காணிப்பாளரும், இல்லை, இதுதான் முதல் தடவை என்று பதில் எழுதினார். 

பின்னர் மேலும் இரு வாரங்கள் கழித்து தலைமை செயலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உங்களது பக்கத்துக்கு அலுவலங்களில், அல்லது உங்கள் துறை சார்ந்த வேறு அலுவலகங்களில் இது போன்ற சம்பவம் நடந்து உள்ளதா? என கேட்டு இருந்தார்கள். அதற்க்கும் கண்காணிப்பாளர் "இல்லை" என்று பதில் அனுப்பினார்.   

பின்னர், தலைமை செயலகத்தில் இருந்து பிற துறைகளில் இது போன்று நடந்து இருந்தால் அதனை விசாரித்து அனுப்ப கேட்டு இருந்தார்கள். கண்காணிப்பாளரும், அவ்வாறு தனக்குத் தெரியவில்லை, நீங்களே விசாரித்து பாம்பினைப் பிடிப்பதற்கு உண்டான கூலி தொகையை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர், சில நாட்கள் கழித்து, தலைமை செயலகத்தில் இருந்து, பாம்பு என்றால் எத்தனை பாம்பு ?என்று தங்கள் கடிதத்தில் தெரியப்படுத்த வில்லை. அதனை தெளிவு படுத்துமாறு கூறி கடிதம் வந்தது. 

கண்காணிப்பளாரும் ஒரு பாம்பு என்று பதில் அனுப்பினார். 

பின்னர் அங்கிருந்து, அந்த ஒருபாம்பினைப் பிடிக்க 200-ரூபாய் அரசு மூலம் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்படுவதாக அரசு ஆணை வந்தது. 

கண்காணிப்பாளரும், ஒரு பாம்பு பிடிப்பவரைக் கூப்பிட்டு அந்த பாம்பினைப் பிடியுங்கள், ரூ-200 தருகிறேன் என்று கூற, அவரோ பணம் கையில் வந்தால் மட்டுமே பாம்பு பிடித்து தருவேன் என்று கூறி விட்டார்.

உடனே, கண்காணிப்பளாரும், சரி ரூ-200 க்கான பட்டியல் தாருங்கள், நான் கருவூலத்தில் அதனை வாங்கிய பின்னர் தங்களை அழைக்கிறேன் என்று பட்டியலை வாங்கி தனது ஊழியர் மூலம் கருவூலத்தில் சமர்ப்பித்தார். 

ஆனால், கருவூலத்தில் ஒரு வாரம் கழித்து தங்கள் இணைத்துள்ள அரசு ஆணையில் Section Officer கையெழுத்து உள்ளது. எங்களுக்கு Under Secretary கையொப்பம் போட்ட பிரதி வேண்டும் என்று பட்டியலை திருப்பி அனுப்பினார்கள்.

பின்னர், கண்காணிப்பாளரும், மீண்டும் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதி தங்களுக்கு Under Secretary கையொப்பம் போட்ட பிரதி வேண்டும் என்று கேட்டு வாங்கி இணைத்து அனுப்பினார். 

பின்னர் கருவூலத்தில், பட்டியலில் தனியாருக்கான GST விபரம் இல்லை, என்று இரண்டாம் முறையாக திருப்பி அனுப்பினர். கண்காணிப்பாளரும், GST-யுடன் கூடிய பில்லினை வாங்கி மூன்றாம் முறையாக சமர்ப்பித்தார். 

பின்னர், கருவூலத்தில், இந்த மாத சம்பளம் உங்களது அலுவலகத்தில் இன்னும் IFHRMS மென்பொருளில் சமர்ப்பிக்க வில்லை என்று கூறி அந்தப் பட்டியலை வாங்க மறுத்தனர். IFHRMS-ல் போடலாம் என்று நினைக்க, சர்வர் வேலை செய்ய வில்லை, உடனே விப்ரோ வை தொடர்பு கொண்டு கேட்க, அவர்கள் சர்வர் இரண்டு நாட்களுக்கு SHUT DOWN என்று கூறி விட்டார்கள்.

பின்னர் இரு நாட்கள் கழித்து கண்காணிப்பாளரும், உதவியாளர் உதவியுடன் அந்த மாத சம்பள பட்டியலை தயார் செய்து கருவூலத்தில் நான்காம் முறையாகக் சமர்ப்பித்தார்.

பின்னர், கருவூலத்தில், இந்த பாம்பு பில்லினை IFHRMS-ல் போட்டீர்கள் என்று கேட்க கண்காணிப்பளார் இல்லை என்று கூற, இதனையும் நீங்கள் கண்டிப்பாக IFHRMS-ல் போட வேண்டும் என திருப்பி அனுப்பினர். 

பின்னர் கண்காணிப்பளார் அதனையும் IFHRMSல் போட்டு பில்லினை சமர்ப்பிக்க, இறுதியாக கருவூலத்தில் வாங்கிக் கொண்டனர். 

பத்து நாட்கள் கழித்து, கருவூலம் மூலமாக பணம் பாம்பு பிடிப்பவர் அக்கௌண்டில் Rs.200/- வர, அவர் பாம்பு பிடிக்க கிளம்பி வந்தார். 

வந்ததும் கண்காணிப்பாளரிடம், எந்த ரூம்? என்று கேட்க, அவரும் பதிவறையை கை காட்டினார்.

உள்ளே பாம்பு பிடிக்க சென்றவர், இந்தப் பாம்பினையும் பிடிக்காமல் வெறும் கையுடன் திரும்பி வந்தார், அவரிடம் அனைவரும் என்னாச்சு? என்று வினவ, அவரோ, நீங்கள் ஒரு பாம்பு பிடிப்பதற்கு தான் ரூ.200 கொடுத்தீர்கள், ஆனால் உள்ளே சென்ற பாம்பு குட்டி போட்டு பின்னர் அந்த குட்டிகளும் வளர்ந்து குட்டி போட்டு இப்போ 100 பாம்புகளுக்கு மேல் உள்ள இருக்கின்றன என்று கூற, கண்காணிப்பாளர் மயக்கம் போட்டு விழுந்தார்.

//அலுவலக நடைமுறை //

செவ்வாய், 12 டிசம்பர், 2023

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். 

அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். 

அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். 

ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்து விட்டான்

“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 

அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.

 “ஆஹா! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்!” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். 

இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!” என்றார்.

 “அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன். 

“நேரம் வரும் போது சொல்கிறேன்!” என்றார் வியாசர்.

பல ஆண்டுகள் கழிந்தன.

மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். 

“அர்ஜுனா! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். 

அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடை பெற்ற அர்ஜுனன், தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். 

வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். 

அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன்.

ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை.

பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்தமுடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்தி விட்டார்கள்.

தன் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன். அதுவும் சாதாரணத் திருடர்களிடம்!

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன்.

 அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். “அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. 

இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது!” என்று கூறினார் வியாசர்.

 “கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். 

ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது! இதுவரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. 

என்னால் அதைத் தூக்க முடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. 

கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். 

அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.

இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார். 

மேலும், “சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? 

கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கி விட்டாய். 

ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்!” என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப் படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது. 

இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்” (பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல:’ என்றழைக்கப்படுகிறார்.

அழகு என்பது மனதில் உள்ளது..

அழகு என்பது மனதில் உள்ளது..பேசாலைதாஸ்

 


ஒரு அழகான பெண்.......பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க.... ஒரு விமானத்தில் ஏறினாங்க... ஏறி தனது சீட்டை தேடினாங்க.... அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கு அடுத்த சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார்... 

இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரியா அசூசையா இருந்திச்சு....இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது...அப்டின்னு யோசிச்சு, விமான பணிப்பெண்ணை கூப்பிட்டு, "எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க.."ன்னு கேட்டாங்க.. அதுக்கு விமான பணிப்பெண், "ஏன் என்னாச்சு உங்க சீட்டுக்கு..?"ன்னு கேட்டதுக்கு, "எனக்கு அவர் பக்கத்தில உக்கார்ந்திட்டு வர அருவருப்பா இருக்கு.... அதான்..." அப்டின்னதும், விமான பணிப்பெண்ணுக்கு தூக்கி வாரிபோட்ருச்சு...

பார்க்க இவ்ளோ டீசென்ட்டா இருக்காங்க... ஆனா இவ்ளோ நாகரீகம் இல்லாம பேசுறாங்களேன்னு சங்கடப்பட்டாலும், ஏதும் பண்ண முடியாதே... அவங்க பயணியாச்சே.... வேற வழி.... "இருங்க மேடம் நான் பாக்குறேன்...."ன்னு சொல்லிட்டு செக் பண்ணி பாக்குறாங்க.. எங்கயும் சீட் காலி இல்லை... அந்த பெண்கிட்ட திரும்பவும், "மேடம்... எந்த சீட்டும் காலி இல்லை... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... நான் கேப்டன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டு வரேன். அதுவரை பொறுத்திருங்க... ப்ளீஸ்... "ன்னு சொல்லிட்டு கேப்டன் ரூம்க்கு போனாங்க..

கொஞ்ச நேரத்தில திரும்பி வந்து, "மேடம்...நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ்... ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு  ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை.  முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு... ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பிரயாணி.. உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே.. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம்.... கொஞ்சம் பொறுங்க.."அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல...   விமானப்பணிப்பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காம, முதல்வகுப்புக்கு போக தயாரானாங்க... 

ஆனா அங்க நடந்ததே வேற.  விமான பணிப்பெண் நேரா அந்த இரண்டு கைகளையும் இழந்தவர்கிட்ட போய், "சார்.... தயவுசெய்து மன்னிச்சிடுங்க.. உங்க லக்கேஜ் எல்லாம் நான் எடுத்திட்டு வரேன்.... நீங்க முதல் வகுப்புக்கு வாங்க சார்... உங்க பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உக்காரவைக்க எங்களுக்கு மனமில்லை.. " அப்டின்னு பணிவா சொன்னதும் விமானத்தில் இருந்த எல்லாரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்தாங்க.... 

அந்த அழகான பெண்ணுக்கு ரொம்ப அவமானமா போச்சு... சங்கடத்தோட நெளிஞ்சுக்கிட்டே நின்னாங்க... 

அப்போ அந்த கைகளை இழந்த அந்த நபர் எழுந்து, "நான் ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி மேன்... கார்கில் போரில் என்னோட இரண்டு கைகளையும் இழந்திட்டேன்... முதல்முறையா இந்த பெண் சொன்னதை கேட்டதும், இவங்கள மாதிரி ஆட்களுக்காகவா நாம அவ்ளோ கஷ்டப்பட்டு போரில் ஈடுபட்டோம்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு... ஆனா இப்போ நீங்க எல்லாரும் கை தட்டி ஆராவாரம் செய்றதை கேட்டதும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது... உங்களை போன்ற இவ்ளோ நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக சந்தோசப்படுறேன்..." அப்டின்னு சொல்லிகிட்டே முதல்வகுப்பை நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சார்...

அந்த பெண்மணியோ அவமானத்தின் உச்சத்தில் இருந்தாங்க... யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையை குனிஞ்சு உட்கார்ந்துக்கிட்டாங்க...

அழகு என்பது நாம பாக்குற வெளித்தோற்றத்தில் இல்லை... .

மனதில் உள்ளது..

கர்மா பேசாலைதாஸ்

 கர்மா  பேசாலைதாஸ்


ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டு இருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சிறு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அந்த உணவை ஓர் அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். 

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பம் வந்தது. கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? 

-கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது, அது அதன் தவறு இல்லை. 

-விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது, அது பாம்பின் குற்றம் இல்லை. 

-அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. 

அது அவனும் அறியாமல் நடந்த விஷயம். 

....இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான். 

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, 'இதற்கான விடை விரைவில் கிடைக்கும். அது வரை பொறுமையாக இரு' என அறிவுறுத்தினான். ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல், 'இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள்' என்றும் கூறினாள். 

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது, அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று. காரணம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும். உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும். 

இவ்வாறு, நாம் செய்யும் கர்மவினைகள் ஒரு பக்கம் என்றால் நாம் மற்றவர்கள் செய்வதைப் பற்றி பேசி சேர்த்துக் கொள்ளும் கர்மவினைகள் ஏராளம் ஏராளம். எனவே, நாவடக்கம் தேவை.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...