செல்லம்மாபாட்டி(சிறுகதை) பேசாலைதாஸ்
செல்லம்மாபாட்டிக்கு இருக்குறதெல்லாம் ஒரு ஓலைக்குடிசையும் கொஞ்ச தட்டுமுட்டு பாத்திரங்களும்தான். அதோட வயசக் கேட்டிங்கன்னா போன மாமாங்கம் வந்தப்போ எழுவத்தஞ்சுன்னு ஒருகணக்குச்சொல்லும் .
அதுக்கு வருமான முன்னா ஒண்ணே ஒண்ணுதான்.எம்.ஜி.யார் பணமுன்னு வயசான வங்க சொல்லுற முதியோர் பென்சன் தான். அதுக்காகவே போஸ்ட்டுமேனுக்கு வணக்கம் சார்ன்னுசொல்லும் , அவரும் அதைப்புரிஞ்சிகிட்டு காசுவந்தாகொண்டாந்து குடுக்கமாட்டனாம்பாரு அப்புறம் அது இருக்குற நெலமையப் பாத்துட்டு அஞ்சோ பத்தோ குடுப்பாரு அப்ப நீங்க காசு குடுக்குறப்பக் கழிச்சிக்கங்கன்னு சொல்லும் அவரும் கழிச்சத்தில்ல. பாவமுன்னு
மத்தபடி ஆராவது எறக்கப்பட்டுக்குடுத்தா காசு வாங்கிக்கிரும் அப்பவும் அதேதான் சொல்லும் காசுவந்தவன்ன குடுத்துடுறேன்னு. அவங்களும் என்னத்த இதுக்கிட்ட்ப்போயி கேட்டுக்கிட்டுன்னு விட்டுருவாக
அன்னிக்கி செல்லம்மாவுக்கு மீன்கொழம்பு
சாப்புடனுமுன்னு நாக்கு கேட்டுருச்சு மூலையில கெடக்குற சுருக்குப் பையத் தேடிப்புடிச்சிப் பாத்தா காஞ்சுபோன வெத்தல தான் இருந்துச்சு
ஆருகிட்டகாசுகேக்கலாமுன்னு ரோசன பண்ணிட்டு இருந்தப்ப கண்கண்ட தெயவம் போஸ்ட்டுமேன் வந்தாரு வழக்கம்போல கையத்தூக்கவும் அவரு அதெல்லாம் வரல. இது ஏப்ரல்மாசம் கொஞ்சம் லேட்டாத்தான் வருமுன்னாரு
அது மொகத்தைப் பாத்துத் தெரிஞ்சிக் கிட்டாரு. பையத்துளாவிப் பாத்தா அன்னிக்கி டீக்குடிக்க வைச்சிருந்த காசு அஞ்சுரூவா இருந்துச்சு. இந்தா வைச்சிக்கன்னு குடுத்துட்டு மறக்காம சபளத்துல எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டுக்கெளம்புனாரு .
அப்ப செல்லம்மா சொல்லிச்சி மத்தியானம் வாரப்போ சாப்புட்டுபோப்பா இன்னிக்கி மீன்கொழம்புன்னுச்சுஅவருசிரிச்சிக்கிட்டே வாரன்னு சொல்லிட்டுப்போனாரு பக்கத்து வீட்டு இருளாயிகிட்ட கொஞ்சம் அரிசி கேப்பமுன்னு போச்சு செல்லம்மா
இருளாயி இதப்பாத்ததும் இங்கயே கவுந்துகெடக்குப்பானன்னு சொன்னவன்ன
இந்தா அஞ்சுரூவா வைச்சிக்கன்னு குடுத்துச்சு. இருளாயிக்கு பாவமாப்போச்சு இரு வாரேன்ன்னு உள்ளபோயிட்டு ஒருடம்ளர் அரிசிகொண்டாந்துச்சு ரேசன் அரிசிதான்.
செல்லம்மாவுக்கு கண்ணு கலங்குச்சு. திரும்பிவாரப்ப மீனு மீனுன்னு கத்திட்டு சின்னப்பொண்ணு வந்துச்சு
செல்லம்மா கூப்புட்டவன்ன ஓங்கூட யாவாரம் செய்யமுடியாதம்மா அஞ்சுரூவாக்கி மீனு கேப்பன்னு சொல்லிட்டு வேகமாப்போயிடுச்சு
செல்லம்மாவுக்கு புசுக்குன்னு போச்சு வீட்டுல போயி ஒக்காந்துருச்சு கொஞ்சநேரத்துல சின்னப் பொண்ணு திரும்பி வந்து நாலு காரப்பொடி மீனகுடுத்துட்டு காசுவேணாம் எங்க ஆத்தாளுக்குக்குடுத்ததா நெனச்சிக் கிறேன்னு சொல்லிட்டு போயிடுச்சு
செல்லம்மா அடுப்பபத்தவைச்சி ஒலைய போட்டுட்டு மீன அரிய ஆரம்பிச்சிச்சி. மீனு வாசம்முன்னவன்ன அங்க திரியிற கெழட்டுப்பூனை வந்துருச்சு.
மீனச்சுத்தம்பண்ணி கழுவுறதுன்னா மண்சட்டில கல்லு மஞ்சள் அப்புறம் உப்பப்போட்டு அதுக்குள்ள மீனப்போட்டு கழுவும். கழுவி வாரதண்ணில மொகம்கழுவுறமாதிரி தெளிவாஇருக்கனும் திரும்ப உப்புப்போட்டு வைச்சிட்டு புளிய ஊறப்போட்டு நல்லா தூக்கலா கரைச்சி வைச்சிட்டு
மண்சட்டிய அடுப்புல போட்டு வீட்டுல இருந்த வெங்காயம் காஞ்சிகெடந்த பச்சமொளகா கறிவேப்புல போட்டு வதக்கி அத எடுத்து அம்மிமில வைச்சி மையா அரைச்சி மொளகாத்தூள் சேத்து கொதிக்கவைச்சி அதுல ஒரு வ வாசம் வாரப்ப த்தான் மீன் போடனும். அப்புறம் ஒரு கொதிதேன் அம்புட்டுத்தேன் குடிசபூராம் வாசம் தூக்குச்சு பூனை மிய்யா மிய்யான்னு சுத்திவந்துச்சு அதுக்குள்ள சோத்த வடிச்சி எறக்கி தட்டுல போட்டுட்டு அதுமேல கொளம்ப ஊத்தி மீன மேல எடுத்துவைச்சிட்டு சாப்புட ஒக்காந்துச்சு
அந்த மீன் கொளம்பு வாசம் தெருவில போறவுகளைக்கூட சுண்டி இழுத்து நாக்குல எச்சி ஊறவைச்சிப்புடும். கொஞ்சம் மான ரோசம்பாக்காதவுகன்னா கைய நீட்டி ஆத்தா ஒரு துளி உள்ளங்கையில காட்டு நு வாங்கி நக்கிப்பாத்து நாக்கைச்சொட்டு விட்டுட்டுப்போவாக....
செல்லம்மாவும் மொதல்ல உள்ளங்கையில ஒரு சொட்ட விட்டுப்பாத்து அத நாக்குல வைச்சிட்டு தலைய ஆட்டிக்கிடுச்சு வசமாத்தேன் கொழம்பு வந்திருக்கு சுள்ளுன்னு தொண்டையில எறங்கும்போது கண்ண மூடி ரசிச்சிச்சி....அப்புறம் சோத்தப்பெசஞ்சி உருண்டை உருட்டி பொக்கைவாய்க்குள்ள தள்ளுச்சு....
ஒருவாயிஉள்ளபோனதும் அதுகண்ண மூடி ரசிச்சிச்சு மீன் கொளம்பு மீன் கொளம்புதான் அது தொண்டக்குள்ள போறது செத்துப் போறசொகம்தான்னு சொல்லிக்கிச்சு
அப்ப பூன பாட்டியப் பரிதாபமாப்பாத்துச்சு அதுக்கு ஒரு மீனக்குடுத்து சாப்புடுசாப்புடு நீயும் கெழம்தான ஒனக்கு யாரு குடுப்பா எனக்காவது குடுப்பாகன்னு சொல்லிச்சு
அப்ப மீன திண்ணு புட்டு செல்லம்மாவ வந்து பூனை ஒரசி மிய்யாவ் மிய்யாவுன்னு சுத்துச்சு.........
அதப்பாக்குறப்போ சின்ன வயசுலயே செத்துப் போன மக நெனப்பு வந்து மீனு செல்லம்மா வுக்கு தொண்டக்குழிய விட்டு எறங்கல கண்ணுல கண்ணீர் வழிஞ்சிச்சு.....
இந்த எழவெடுத்த நெனப்பு வந்துருச்சுன்னா செல்லம்மா தொண்டைய அடைச்சிப்புடும். திங்கிற நேரத்துல பத்தியம் நெனப்புக்கு வந்தா தின்னமாதிரிதான் ... நீயாவது திண்ணுன்னு சொல்லி பூனைக்கிக் கொடுத்துச்சு....
பூனை நாக்கச் சொழட்டிச் சொலட்டி டிங்கிறதப்பாத்து.... லேசான சந்தோசம் வர மீதமிருந்த சோத்த கொழம்பு சட்டில போட்டு பெறட்டி உருட்டி வாய்க்குள்ள தள்ளுச்சு அப்ப கண்ணு சொருக சொல்லுச்சு... சோத்துக்குள்ள இருக்காண்டா சொக்கன்னு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக