எனக்காக நீ அழலாம்...பேசாலைதாஸ்
மாணவன் ஒருவனுக்கு ஞானம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஓர் ஆவல்! அதை தெரிந்து கொள்ள தகுந்த குரு ஒருவரைத் தேடி நாடெ ங்கும் அலைந்து திரிந்தான். இறுதியில் பலரும் உயர்வாகக் கூறிய ஒரு மடாலயத்தை அடைந்தான். அவன் அங்கே சென்று சேர்ந்தபோது மடாலயத்தின் குரு கட்டிலில் ஓய்வாகப் படுத்த படி, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மரக்கிளை ஒன்றில் பின்ன ங்கால்களில் அமர்ந்திருந்த அணில் ஒன்று, ஒரு கொட்டையை உடைத்து வெகு சுவாரசியமாக உண்டு கொண்டிருந்ததைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். குருவை நெருங்கிய அந்த மாணவன், “ஐயா.. எனக்கொரு ஐயம். அதைத் தாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்..” என்று பணிவுடன் கூறினான். அவனது வருகையால் கவனம் கலைந்த குரு “கேள்” என்று கேட்டார். அந்த மாணவனும் மகிழ்ச்சியுடன், “குருவே, ஞானம் என்றால் என்ன?” என்று அவரிடம் கேட்டான். “சொல்கிறேன். ஆனால் அவசரமாக எனக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த அற்ப வேலையை மட்டும் எனக்காக நீ செய்து விட்டு வந்து விடேன்…” என்றார் அந்த குரு. அன்பர்களே இப்போது உங்களுக்கு இலகுவாக புரியும் என்று நினைக்கின்றேன். உங்கள் உள் மனதை நீங்களே தோண்டுங்கள்! தயவு செய்து என்னிடம் வந்துவிடாதீர்கள் அன்புடன் பேசாலைதாஸ்