பின் தொடர்பவர்கள்

திங்கள், 9 டிசம்பர், 2024

பரிகாரம்(சிறுகதை)

 பரிகாரம் (சிறுகதை)

அவன் அன்னிக்கி பஸ்ல  வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தான் .....

பஸ் போறப்ப ரோட்டோரம் கூட்டமா இருந்துச்சு.  பஸ் வெலக முடியல.... எறங்கிப்பாத்தப்ப ஒரு வயசான அம்மா ரோட்டாரமா மயங்கிக்கெடந்துச்சு.....அதைச்சுத்தித்தான் கூட்டம் ... ஆளாலுக்கு உச்சு கொட்டிக்கிட்டு இருந்தாகலே ஒழிய யாரும் ஒண்ணும் பண்ணல இவன் பஸ்ல இருந்து எறங்கி போய் பாத்தான் அந்த அம்மா அரை மயக்கத்துல இருந்துச்சு..... 

அங்க ஒரு ஆட்டோவைப்பிடிச்சி ஆஸ்பத்திரிக்கிக்கொண்டுபோய் அட்மிட் பண்ணான்...... அவங்க செகபண்ணிப்பாத்துட்டு லோ சுகர்ன்னு ட்ரீட்மெண்ட் கொடுத்து பாத்துகிட்டு இருந்தாங்க

அவனுக்கு நெனப்பு பின்னாடி போச்சு

அவனோட அம்மா வெள்ளத்தாயி நெனப்பு வந்துச்சு. அப்ப அவன் பட்டணத்துல இருந்தான் அவனோட அம்மா கிராமத்துல இருந்தா. அவளுக்கு ஒடம்புக்கு முடியல ...ஒரே வயித்துவலின்னு சொல்லிட்டு இருந்தா..

அங்க அவன் அம்மாவெள்ளத்தாயிக்கி வயிறு வலிக்க ஆரம்பிச்சது. உசுறக்கவ்விப்பிடிச்சி இழுக்குறமாதிரி ஒரு வலி அது. கொஞ்சநாளாவே அப்புடித்தான் வலிக்குது, சாப்பிட இல்லாதகாலத்துல யெல்லாம் நல்லா பசிச்ச அந்தவயிறு சாப்பிட ஏதுமில்லாம பச்சத்தண்னியவும் நீராகார்த்தையும் குடிச்சபோது கொஞ்சநேரங்கழிச்சி ஜிவ்வுன்னு குடல சுண்டி இழுக்கும்..... அது பசினால

ஆனா இப்ப வேற மாதிரி இழுக்குது. உள்ளுக்குள்ள கொரண்டியவிட்டு கடகாவ கெணத்துக்குள்ள தேடி ப்பிடிச்சி மொரட்டுத்தனமா கொடல இழுக்குறமாதிரி ஒரு வலி..... தொடையிலயும் முதுகுலயும் யாரோ நெருப்ப அள்ளிக்கொட்டுறமாதிரி  ஒரு எரிச்சல்.... 

மகனுக்கு கடுதாசி போட்டப்ப அவன் 300 ரூ அனுப்பிச்சான். போய் பெரியாஸ்பத்திரில பாரு...மாத்திர மருந்து குடுப்பாக சரியாப்போகும்ன்னு மணியாடர்ல துண்டுச்சீட்டுல எழுதுனத போஸ்ட்மேன் வாசிச்சிக்காமிச்சாரு

 வெள்ளனாவே பெரியாஸ்பத்திரிக்கிபோய் டோக்கன் வாங்கிகாத்திருந்தாவெள்ளத்தாயி. அங்க ஒரே கூட்டமா இருந்துச்சு.  வலியையும் பொறுத்துக்கிட்டு சுருண்டு ஒக்காந்து காத்துக்கெடந்தா......

பத்துமணிக்கி மேல டாக்டர்ரைப்பாத்தப்போ அவரு கேட்ட வெவரம் எல்லாம் சொன்னா. அப்ப அவரு ஸ்கேன் பண்ணிப்பாக்கனுமே.....ன்னாரு 

எம்புட்டு ஆகுமுயான்னு கேட்டப்ப இந்த சீட்டக்கொண்டுபோய் காமி பாப்பாக காசெல்லாம் கேக்கமாட்டாகன்னாரு

 அங்குணக்குள்ள போனா அங்கயும் வரிசதான் ஒரு வழியா ஒருமணிக்கி முடிஞ்சது. போய்சாப்புட்டுட்டு வாத்தா...ரிப்போர்ட் ரெடியாயிடும்ன்னு அங்குணக்குள்ள இருந்த  வெள்ள சேலை கட்டுன அம்மா சொல்லிச்சி...

வெளிய வந்து டீக்கடையில டீயும் பன்னும் வாங்கிச்சாப்புட்டப்ப வயிறு வலிச்சிச்சி. திங்க முடியல..... அதை காக்காவுக்குப்போட்டுட்டு திரும்ப அங்க போனா. அங்க ஆரும் இன்னும் வரல.....சொவத்துல சாஞ்சி காத்திருந்தப்ப  அசந்துட்டா,,,,,, பழைய நெனப்பு ஓட ஆரம்பிச்சது

அவ புருசன் சாமிக்கண்ணுவ கலியாணம் முடிச்சப்ப அவளுக்கு ஒரே சந்தோசம். ஏன்னா அவன் அவளைக்கையில வைச்சித்தாங்குனான். பெருசா வருமானம் இல்லாட்டினாக்கூட அவள கலங்க விடமாட்டான்.... 

வந்த நாளாவதுமாசத்துலயே அவ உண்டாயிருக்குறது தெரிஞ்சி.... கூத்தாடினான். அவளை எந்தவேலையும் செய்ய விடல. கண்ணுக்குள்ள வைச்சிப்பாக்குறதுன்னு சொல்லுவாங்களே அதுமாதிரிதான் பாத்தான் 

நெறமாசம் பிரசவம் சிக்கலானமாதிரி இருந்தப்ப இதே பெரியாஸ்பத்திரிலதாப் கொண்டாந்து சேத்தான். இவ பிரசவத்துக்கு உள்ளாற துடிச்சிக்கிட்டு இருந்தப்ப ஆயா வெள்ளத்துணி கேட்டுச்சுன்னு வாங்கப்போனவன் வரல..... ஒத்தாசைக்கும் ஆருமில்ல.  அதுக்குள்ள மகன் பொறக்க  இவ சந்தோசமாயிட்டா.....

ஆனா போனவன் திரும்ப வரல. அப்பூறம்தான் தெரிஞ்சது அவன் ஆக்ஸிடெண்டுல ஆஸ்பத்திரி வாசல்லயே போய்சேந்தது...

கைப்பிள்ளையோட வெளியவந்து மறுமாசமே கஞ்சிக்கி வழியில்லாம வீட்டு வேலைக்கிப்போனா. அதுல வார வருமானத்துல வயத்தை கழுவிக்கிட்டு மகனையும் கவன்மெண்ட் பள்ளிக்கூடத்துல படிக்கவைச்சா. அவன தான் பட்டினியா இருந்தாலும்  கஸ்ட்டப்பட்டு கஞ்சி ஊத்தி ப்பாத்துக்கிட்டா.

அவனும் நல்லாத்தான் படிச்சான். ஒடனே பட்டனத்துல வேலையும் கெடச்சது. வேலைசெய்யிற வீடுகள்ல கடன வாங்கி அனுப்பிவைச்சா பட்டணத்துக்கு. 

போய் கொஞ்சநாள் பணமெல்லாம் அனுப்பிச்சான். அப்புறம் அங்கயே ஒரு பொண்ணப்பாத்துகலியாணமும் பண்ணிக்கிட்டான்... ஆனா மாசா மாசம் பணம் மட்டும் அனுப்பிச்சிடுவான்  ...கூட வந்து இருன்னு ஒரு வார்த்தை அவன் வாயில இருந்து கடசிவர வரவே இல்லை....

பாவம் வெள்ளத்தாயிக்கி மகன பேரம்பேத்திகளைப்பாக்கனும்ன்னு ஆசை. கண்னுல கொண்டாந்து காமியான்னு கெஞ்சுனா மகன் கிட்ட ...ஆனா அவன்  சாக்குப்போக்குச்சொல்லிக்கிட்டு இருந்தான்... வராம

இப்ப ஸ்கேனிங்கல ஆளு வந்துட்டாக. இந்தாம்மா யாரு வெள்ளத்தாயின்னு கூப்புட்டாக .... திடுக்குன்னு முழிச்சி போனா. அவங்க ஒரு பைல கையில குடுத்து  போய் அந்த சர்ஜனப்பாருன்னு சொன்னாக.....

அவரைப்போய் பாத்தா வெள்ளத்தாயி.... அவர் ரிப்போர்ட் எல்லாம் வாங்கிப்பாத்துட்டு லேட்டா வந்துருக்கம்மா..... இப்ப எதுவும் சொல்ல முடியாது... நீ வீட்டுக்குப்போயிட்டு தொணக்கி ஆளகூப்புட்டுட்டு நாளைக்கி வந்து  அட்மிட் ஆயிடும்மா. ஒடனடியாப்பாக்கனும்.... கூட ஆளு கட்டாயமா வேணும்..... ஆளோட வந்துருன்னு சொன்னாக....

இவளுக்கு அழுகையா வந்துச்சு. அய்யா என் மகன் பட்டனத்துல இருக்கான். வரமுடியாது  எனக்கு வேற ஆளுக ஆருமில்லன்னா..... 

அதுக்கு நான் என்னம்மா பண்ணமுடியும் ....ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வாம்மான்னாரு

வெள்ளத்தாயி ஆஸ்பத்திரிக்கி வெளிய வந்து பஸ் ஏறி  வீட்டுக்குத்திருமபுனா.  

மெயின் ரோட்டுல எறங்கி ஊருக்கு நடந்துபோகனும்... 2 கி.மீ அப்புடி நடந்து போகையில சாயங்காலமாயிடுச்சு.  கொஞ்சதூரம் நடந்தவன்ன கண்ணக்கட்டிட்டு வந்துச்சு. கண்ணு இருண்டுச்சு..... மயக்கமா வந்து  விழுந்துட்டா......இருட்டு வேற யாருக்கும் தெரியல மறுநா காலையிலதான் சனங்க பாத்து  அவனுக்குத்தகவல் சொன்னாங்க.....  

அவன் அடிச்சிப்பிடிச்சி ஓடிவந்து அம்மாவப்பொணமாத்தான் பாத்தான். அன்னிக்கி அழுதுபொலம்புனான் ... அம்மா அம்மான்னு ஆனா போன உசிறு திரும்பவா போகுது......கண்ணத்தொடச்சிக்கிட்டான்...

கொஞ்சநேரத்துல அந்தம்மா கண்ணு முழிச்சது... அங்க இருந்தவங்க வெவரம் சொல்லவும் அந்த அம்மா கண்ணுல நீர் வழிய கையெடுத்துக்கும்புட்டுச்சு ஆர் பெத்தபுள்ளயோ நீ நல்லாருக்கனும்ன்னு......உன்னப்ப்த்தவ கொடுத்து வைச்சவ. நீ நல்லா இருக்கணும்ன்னு அந்தம்மா சொன்னப்ப 

அவன் கேவி அழுக ஆரம்பிச்சான்..... அனாதையாச்செத்த அம்மாவை நெனச்சி....அவன ஆராலயும் தேத்த முடியல........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...