காமம் எனும் நாயை அடக்குவது எப்படி?
ஒரு பக்தன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை எப்படி ஜெயிப்பது? என்று கேட்டான். தன் மனத்தில் அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான். அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது :ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான், விளையாடுவான், அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக் கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன் இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும் கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான். தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால் அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது.நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும் என்றார்!
அன்புடன் பேசாலைதஸ்