கடவுள் இருக்கின்றாரா? இல்லையா?
பேசாலைதாஸ்
அன்பர்களே இந்த கேள்வி மனிதன் தோன்றிய காலம் முதல் அவன் மனதில் எழும்பிய கேள்வி? இதற்கு தெளிவான விளக்கம் இல்லை. இருக்கின்றார் என்ற நம்பிக்கை யில் காலம் நகர்கின்றது. எமக்கு எது கண்ணுக்கு புலப்படவில் லையோ அதன் மீது நம்பிக்கை மட்டுமே வைக்கமுடியும் வேறு என்ன தான் செய்ய முடியும். கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதற்கு புத்தர் கூட ஒழுங்கான பதிலை தரவில்லை. ஆனாலும் அவர் பரினிர்வானம் எய்தினார், ஞானத்தை காண்டார். ஒருவன் ஞானத்தை அடயும் போது அவனால் கடவுளை காண முடியாது. ஏனெனில் அவனே கடவுளாகின்றார். இதுதான் புத்தருக்கும் நடந்தது என்பது என் சிறுமதியின் விளக்கம். கண்டவர் விண்டிலர் என்பது இதுதான்! நீ கடவுளை சந்திக்கும்போது அங்கு கடவுளும் இருக்கமாட்டார், நீயும் இருக்கமாட்டாய்! இதன அழகாக விளக்குவது புத்தரிடம் நிகழ்ந்த ஒரு சம்பவம்
ஒரு நாள் காலை ஒரு மனிதன் கேட்டான், " கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் இருக்கிறரா?" அவர் மறுபடியும் அந்த மனிதனைப் பார்த்தார், அவன் கண்களைப் பார்த்தபடி சொன்னார், "இல்லை கடவுள் இல்லை". அந்த நாளின் மதியத்தில் இன்னொரு மனிதன் "கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். கடவுள் இருக்கிறாரா?" எனக் கேட்டான். அவர் அந்த மனிதனை பார்த்து அவன் கண்களைப் பார்த்து "ஆம் கடவுள் இருக்கிறார்" எனக் கூறினார். அவரின் சீடன் ஆனந்தா அவருடன் இருந்தார். மிகவும் குழம்பிப் போனார், ஆனால் அவர் எப்போதுமே எதிலும் தலையிட மாட்டார். எல்லோரும் போன பிறகு இரவில் அவருக்கு நேரம் இருந்தது. புத்தர் தூங்கப் போகிற நேரம். அவர் எதாவது கேட்க வேண்டுமானால் அப்போதுதான் கேட்பார். ஆனால் அந்த மாலை, சூரியன் அஸ்தமனம் ஆகிற நேரத்தில், ஒரு மூன்றாவது மனிதன் வந்தான் அதே போன்ற ஒரு கேள்வியுடன். ஆனால் அது வித்யாசமான முறையில் இருந்தது.
அவன் சொன்னான், "கடவுளை நம்புகிற மக்கள் இருக்கிறார்கள். கடவுளை நம்பாத மக்களும் இருக்கிறார்கள். நான் யார் பக்கம் நிற்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு உதவுங்கள்."
புத்தர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆனந்தா ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முற்றிலும் முரண்பட்ட இரண்டு பதில்களைச் சொல்லியிருந்தார். அதுவும் ஒரே நாளில். ஆனால் இப்போது மூன்றாவதாக ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ஆனால் மூன்றாவது கேள்விக்கு பதிலில்லை. ஆனால் புத்தர் மூன்றாவது பதிலையும் சொன்னார். அவர் பேசவில்லை. கண்களை மூடிக்கொண்டார். அது ஓர் அற்புதமான மாலை. பறவைகள் அதன் கூட்டுக்குள் வந்துவிட்டது. புத்தர் ஒரு மாந்தோப்பிலிருந்தார். சூரியன் அஸ்தமனமாகிவிட்டான். குளிர்ந்த காற்று வீசத் துவங்கிவிட்டது. புத்தர், கண்களை மூடியபடி இருந்ததை அந்த மனிதன் பார்த்தான். அநேகமாக அதுதான் பதில். அதனால் அவனும் கண்களை மூடியபடி அவர் அருகே அமர்ந்தான். ஒரு மணி நேரம் கழித்து, அந்த மனிதன் கண்களைத் திறந்தான், புத்தரின் கால்களைத் தொட்டுவிட்டுச் சொன்னான், "உங்கள் பரிவு என்பது மிகச் சிறந்தது.
நீங்கள் எனக்குப் பதிலச் சொல்லிவிட்டீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்". என்றான்.
ஆனந்தா திகைத்துப்போனார், ஆனந்தாவினால் இதை நம்பவே முடியவில்லை. காரணம் புத்தர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அந்த மனிதன் சென்றுவிட்டான், முற்றிலும் திருப்தியோடு, நிறைவோடு.
ஆனந்தா புத்தரிடம் கேட்டார். இது மிகவும் அதிகம், நீங்கள் என்னைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். நீங்கள் என்னைப் பைத்தியமாக்கி விடுவீர்கள். எனக்கு நரம்புக் கோளாறே வந்துவிடும் போல் இருக்கிறது. ஒருவரிடம் நீங்கள் கடவுளே இல்லை என்று சொன்னீர்கள். அடுத்தவரிடம் கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள். மூன்றாவதற்கு நீங்களே பதிலே சொல்லவில்லை. ஆனால் அந்த வினோத மனிதன் பதிலைப் பெற்று விட்டதாகவும், அவன் திருப்தியடைந்த, நன்றியோடு இருப்பேன். என்றானே என்றார் ஆனந்தா
புத்தர் சொன்னார், "ஆனந்தா, முதலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவை உன்னுடைய கேள்விகள் அல்ல. அதனால் அந்தப் பதில்கள் உனக்குக் கொடுக்கப்பட்டவையல்ல. நீ ஏன் தேவையில்லாமல் அடுத்தவர் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? முதலில் உன் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்". ஆனந்தா சொன்னார், " அது உண்மைதான், அவை என்னுடைய கேள்விகளும் அல்ல; அந்தப் பதில்களும் எனக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் என்ன செய்வது? எனக்குக் காதுகளும் கண்களும் இருக்கின்றனவே. நான் கேட்டேன், நான் பார்த்தேன், இப்போது நான் முழுவதும் குழம்பியிருக்கிறேன். என்று அங்கலாய்த்தான் ஆனந்தா
புத்தர் சொன்னார், முதலில் வந்தவன் ஓர் ஆஸ்திகன். அவனுக்கு என்னுடைய ஆதரவு தேவை. அவனுக்கு ஏற்கனவே கடவுள் நம்பிக்கை உண்டு. அவன் ஒரு பதிலோடு வந்திருக்கிறான். தயார் நிலையில். என் ஆதரவை நாடி. அதன் மூலம் வெளியே போய், "நான் சரிதான், புத்தர் கூட அப்படிதான் நினைக்கிறார் என்பான்
அவனுக்கு நான் இல்லை என்று சொல்ல வேண்டியதாயிற்று. அவனுடைய நம்பிக்கையைக் குலைப்பதற்காக, காரணம் நம்பிக்கை என்பது தெரியாதது.
இரண்டாவது மனிதன் ஒரு நாத்திகவாதி. அவனும் கடவுள் இல்லை எனும் தயார் செய்யப்பட்ட பதிலோடு வந்திருந்தான். அவனுக்கு அவனது நம்பிக்கையின்மைக்கு என் ஆதரவு தேவை. அதனால் அவன் வெளியே போய் நான் அவனுடன் ஒத்துப் போகிறேன் என்பான். அதனால் அவனிடம் நான் "ஆமாம், கடவுள் இருக்கிறார்" என்றேன். ஆனால் என் நோக்கம் அதே தான். அவர்களது நம்பிக்கையை தகர்ப்பது நீ என் நோக்கத்தைப் பார்த்தால் அதில் எந்த முரண்பாடுமில்லை. நான் அந்த முதல் மனிதனின் முன்பே தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கையைக் கலைத்தேன். நான் அந்த இரண்டாவது மனிதனின் முன் தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கையைக் கலைத்தேன். நம்பிக்கை என்பது நேரானது, அவநம்பிக்கை என்பது எதிரானது. ஆனால் இரண்டுமே ஒன்றேதான். இருவருக்குமே எதுவுமே தெரியாது. இருவருமே பணிவாகத் தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள்; ஏற்கனவே தவறான எண்ணத்தை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாவது மனிதன்தான் தேடுகிறான். அவனுக்கு இந்தத் தவறான எண்ணமுமில்லை. அவனுக்கு ஒரு திறந்த மனம் இருந்தது. எனக்கே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. நான் அவனுக்கு செய்ய முடிந்த ஒரே உதவி என்பது மௌன விழிப்பை போதிக்க முடிந்ததுதான். வார்த்தைகள் அங்கு பயனற்றவை. நான் என் கண்களை மூடிக்கொண்டேன். அவன் அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டான். அவன் ஒரு குறிப்பட்ட புத்திசாலித்தனத்தோடு இருந்தான். வெளிப்படை, வளையக்கூடியவன். அவனும் கண்களை மூடினான்.
"நான் ஆழ்ந்த மௌனத்திற்கு நகர்ந்தபோது, அவன் என் களத்தின் ஒரு பகுதியான என் மௌனத்திலும், என் முன்பும் இருந்தான். அவனும் மௌனத்தை நோக்கி நகர்ந்தான். விழிப்பை நோக்கி நகர்ந்தான். ஒரு மணி நேரம் கழிந்ததும், ஏதோ ஒரு சில நிமிடங்கள்தான் கழிந்ததைப் போல. அவன் வார்த்தைகளில் எந்தப் பதிலையும் பெறவில்லை. ஆனால் மௌனத்தில் அவன் ஓர் ஆதாரப்பூர்வமான ஒரு பதிலைப் பெற்றான்.
கடவுளைப் பற்றிக் கவலைப்படாதே, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்சனையேயில்லை. மௌனம், விழிப்புணர்வு இருக்கிறதா என்பதுதான் பிரச்னை. நீ மௌனமாக இருந்து, விழிப்போடு இருந்தால், நீங்களே ஒரு கடவுள்தான். கடவுள் என்பது உங்களைவிட்டு எங்கோ தொலைதூரத்தில் இல்லை. நீங்கள் மனம் அல்லது கடவுள். மௌனத்திலும், விழிப்புணர்விலும் மனம் கரைந்து காணாமல் போகிறது. உங்களிடமுள்ள தெய்வீகத் தன்மையை உனக்கு வெளிக் காட்டுகிறது. நான் அவனிடம் எதுவும் சொல்லாதபோதும், அவன் பதிலைப் பெற்றுவிட்டான். அது சரியான வழியில் பெற்றுவிட்டான்.
விழிப்புணர்வு உங்களை ஒரு மையத்திற்குக் கொண்டுவந்து அங்கிருந்து உங்கள் கண்களாலேயே நீங்கள் உங்களுடைய உச்ச கட்ட யதார்த்தத்தையும் பிரபஞ்சத்தையும் பார்க்கிறீர்கள். நீங்களும் பிரபஞ்சமும் வேறல்ல என்பது ஓர் அற்புதமான அனுபவம். அந்த முழுமையும் நீங்கள் ஒரு பகுத்து. எனக்கு இதுதான் புனிதத்தின் அர்த்தம். அதுவே கடவுளை காணும் வழி அன்புடன் பேசாலைதாஸ்