Followers

Sunday, 27 June 2021

எல்லாம் விதிப்படியே

 எல்லாம் விதிப்படியே! பேசாலைதாஸ்

ஒரு முறை எமதர்மன், ஒரு மனிதடம் வந்தார், மனிதா இன்று உனக்கு கடைசி நாள், நான் உன் உயிரை எடுக்கப்போகின்றேன், என்று சொன்னான். அதற்கு மனிதான், நான் உன்னோடு வர முடியாது, எனக்கு எத்தனையொ கடமைகள் உண்டு, என்று சொன்னான், அதற்கு எமதர்ம ராஜா, இல்லை இல்லை, உனது பெயர் பட்டியலில் முதலாவதாக இருப்பதால் எனக்கு ஒன்றுமே செய்ய, உன் உயிரை எடுப்பதைதவிர எனக்கு வேறு வழி இல்லை என்றான். ஒருவாறு தன்னை சுதாகரித்துக்கொண்ட மனிதன், சரி எமதர்ம தலைவா, நீ அழைத்தபடியே வருகின்றேன், பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்ச நேரம் தேனீர் 

Tuesday, 22 June 2021

தற்பெருமை கொள்ளாதே

தற்பெருமை கொள்ளாதே   பேசாலைதாஸ் 

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று  நடப்பட்டது.  ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. 

வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, 

" நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே...??? " 

தென்னங்கன்று சொன்னது, 

" ஒரு வருஷம் "

"ஒரு வருஷம்னு சொல்றே 

ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே...??? எதாச்சும் வியாதியா...???"

கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது 

தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது

ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக  இருந்தது

இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது 

வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது  

தென்னங்கன்றோ எப்போதும் போல  சலனமில்லாமல் புன்னகைத்தது 

வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் 

தென்னங்கன்றைவிட  இருமடங்கு உயரமாகி விட்டது 

தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை 

"கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ..??? 

ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே.....!!!

நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன்

உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குது

ஆனா பாரு 

நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன்

உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " 

என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது 

தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை 

இன்னும் சிறிது காலம் சென்றது

அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது

அது பூவும்  காய்களுமாக அழகாக மாறியது

அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது

இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது 

நல்ல உயரம் 

பிளவுபடாத அழகிய இலைகள்

கம்பீரமான குலை 

வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது  

இப்போது காய்கள் முற்றின 

ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்

வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்  

வாழைக்காய்களைத் தட்டிப்  பார்த்தான் 

தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை 

இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்...???  

வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் 

திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான் 

முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள 

அதன் குலைகளை வெட்டி எடுத்தான்

வாழை மரம் கதறியது 

அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது

மரண பயம் வந்துவிட்டது

அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது

ஆம்...

வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது 

ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது

துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது 

தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது

அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது 

 செல்லமே.......

 ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல 

கவலைப்படாதே

வேகமாக வளர்வதெல்லாம் வேகமாகவே காணாமல் போகும்

புன்னகை செய்

" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது"

பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்

Sunday, 20 June 2021

நல்ல நட்பு

நல்ல நட்பு  பேசாலைதாஸ்

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , 

"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???"

என்று கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

 👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட, செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!*   

உண்மையான ஞானம் பேசாலைதாஸ் 


ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்

பல மாணவர்கள் படித்து வந்தனர்.

ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக

இருந்தனர் .

அதில் ஒரு மாணவன் எல்லோரையும்

விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான்.

ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும்

புதிய புதிய காரியங்களைக் கற்றுக்

கொண்டான் . இதனால் அங்கிருந்த

அனைத்து மாணவர்களிலும் அவனே

சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட

அன்பும் , கவனமும் செலுத்தினார்.

சிறிது காலம் சென்றது. அவனிடம்

பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன.

அவன் எல்லோரையும் ஏளனமாக

நோக்க ஆரம்பித்தான்.

 தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட

மதிப்பதில்லை 

பலருக்கு மத்தியில்

மூத்த மாணவர்களிடம் கடினமாகக்

கேள்வி கேட்டு, 

அவர்கள் விடை

தெரியாமல் 

விழிப்பதைப் பார்த்து

கைகொட்டிச் சிரித்து, 

அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி

செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த

விஷயம் எட்டிவிட்டது. இந்த

அகம்பாவம் அவனை அழித்து

விடும் என்பதை உணர்ந்தார்.

ஒரு நல்ல மாணவன் நாசமாவதை

அவர் விரும்பவில்லை.

அவனது பிழையை அவனுக்கு

உணர்த்த விரும்பினார். நேரடியாக

அறிவுரை சொன்னால் அவன் கண்ணை

மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே

கூட எதிர்த்துப் பேசக் கூடும்.

வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார்.

"மகனே ! இன்று அதிகாலையில்,

பக்கத்து கிராமத்தில் உள்ள என்

நண்பர் ஒருவர் இறந்து விட்டார்.

அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக்

குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட

நூல்களை எழுதியவர்.

பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த

அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் .

பல அயல் நாடுகளிலும் கூட இவரது

மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத்

தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய்

விவரத்தைச் சொல்லி ஒரு தரமான

சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல் .

இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத்

தேவைப் படுகிறது. இதை உன்னால்

மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் "

என்றார் . 

கடைசியாக அவர் அவனை

உயர்த்திச் சொன்ன வார்த்தைகள்

அவனை மிகவும் உற்சாகப்படுத்தி

விட்டன.

''இதோ உடனே செய்து முடிக்கிறேன்

ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி

வீட்டுக்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன்

வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும்

மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி

வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.

ஆசாரி இறந்து போனவரைக் குறித்த

விபரங்களைக் கேட்டார்.

அவனும் ஆசிரியர் சொன்னபடியே

" அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக்

குடித்தவர். 

இரு நூறுக்கு மேற்பட்ட

நூல்களை எழுதியவர். 

பத்து முறை

அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான

விருதினைப் பெற்றவர். 

பல அயல்

நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள்

உண்டு."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி

சூடாகி விட்டார். 

"ஏன்டா ! இன்னிக்கு நீ

பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா ?

செத்த பிணத்தோட விவரம் சொல்லாம

வேறென்னமோ உளர்றியே! நீ

படிச்சவன்தானா ? " என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர

மூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு

சொல்லியும் புரியலைன்னு சொன்னா

நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே !

என்னதான் படிச்சிருந்தாலும்,

விருதெல்லாம் வாங்கி இருந்தாலும்

எனக்கு அது பிணந்தான்.

 எனக்கு

வேண்டியது அதோட உயர, அகலந்தான்.

நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல

உசிரு இருக்கிற 

வரைக்கும் தான்.

 உனக்குப்

பெட்டி வேணும்னா மரியாதையா

போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்

எங்கோ பளீரென்று அடி விழுந்தது

அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ?

இதுக்காகவா இத்தனை பேரை

அவமானப்படுத்தினேன் ? "

அவமானம் பொங்கியது .

கூனிக் குறுகியபடியே ஆசியரின்

முன்னால் போய் நின்றான் .

ஆசிரியர் சிரித்துக் கொண்டே

கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி

அடிச்சாச்சா " .

அவன் பதில் சொன்னான்.

"அடிச்சாச்சு. என்னோட தலை

கனத்துக்கு ".

ஆசிரியர் சொன்னார்:

செல்லமே ! என்னதான் படித்தாலும்

இது அழியப் போகிற சரீரந்தான்.

இதை உணர்ந்து மனத்தாழ்மையாய்

நடப்பதே உண்மையான ஞானம   அன்பின் பேசாலைதாஸ்

நாவடக்கம்

 நாவை அடக்குங்கள் ..பேசாலைதாஸ்

முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் பண்டிதர்..

அவரும் .. *முடிவெட்ட  நாலணா.. சவரம் பண்ண  ஒரணா சாமி !* என்று பணிவுடன் கூறினார்..

 பண்டிதர் சிரித்தபடியே,

*அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு* என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் பண்டிதர்..

வயதில் _*பெரியவர்*_ என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

 வேலையை ஆரம்பித்தார் நாவிதர்..

_*நாவிதர் கோபப்படுவார்*_ என்று எதிர்பார்த்திருந்த

பண்டிதருக்கு.. சற்று ஏமாற்றந்தான்..

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்..

*ஏன்டாப்பா.. உன் வேலையோ..!  முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம..* *உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி  "நாவிதன்னு" சொல்றாங்க..?*

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் பண்டிதர்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை..

*நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான்..!  நாங்க நாவிதர்கள்..*

*எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..?*

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது..

அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. *இதென்னப்பா, கத்தரிக்கோல்னு  சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..?*

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து..

*சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..* என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்..

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்..

*எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..?.!*

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது..

அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்..

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்..

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்..

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்..

பண்டிதரின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்..

*சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..?*

பண்டிதர் உடனே, *ஆமாம்* என்றார்..

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து..

*மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க..* என்றார்

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்..

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்..

நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்..

அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார்,

*சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..?*

இப்போது பண்டிதர் சுதாரித்தார்..

_வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்..

*இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..* என்றார் பண்டிதர்..

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்..

*சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்..*

*சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..* என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்..

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்..

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது..

கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்..

*நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் -  அந்தஸ்தும் - பொருளும் -  மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல..*

*இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும்..*

பொய்யாமை

பொய்யாமை பேசாலைதாஸ் 

ரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.

சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.

மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.

அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.

இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.

அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.

அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.

திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!

புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்

அன்பின் பேசாலைதாஸ்

Wednesday, 2 June 2021

செவிட்டுத்தவளை

செவிட்டுத்தவளை   பேசாலைதாஸ்

தவளைகளைக்கொண்டு ஆராய்ச்சி செய்யும் ஒருவன் "தாவு"என்று சொன்னால் தாவும்படி ஒரு தவளைக்குபழக்கியிருந்தான். அந்த ஆராய்ச்சியாளனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஒரு நாள், தாவு என்று சொன்னால், தாவக்கூடிய அந்த தவளையின். ஓர் காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது. இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.

நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு" என்றான். நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது.

மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான். அதனிடமிருந்து அசைவேயில்லை!

ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்- "நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது".

இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.

Saturday, 29 May 2021

 சலிப்பு  பேசாலைதாஸ்

ஒருவன் தன்னுடைய தொழிலில், படுதோல்வியடைந்த நிலையில் சலித்தவாறே நடந்து வந்தான். தெரு முனையில் போவோர்,

வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது எதிரில் உள்ள  குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார்.

சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைதொட்டியில் தனக்கு தேவையான  பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார்.

மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார்.

அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.

கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டது.

இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த

அந்த நபர் புத்துணர்ச்சி பெற்றார்.

ஒரு சிறிய குப்பை தொட்டி மூலம் இத்தனை பேர் வாழ வாய்ப்பு கிடைக்கிறதெனில்,இந்த பரந்து  விரிந்து கிடக்கும் இவ்வுலகில் எத்தனையெத்தனையோ வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தி நாம் அனைவரும் எப்படியெப்படியெல்லாமோ  பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக்கொண்டு, மனதில்

ஒரு சங்கற்பம் செய்து கொண்டார்.

இனி தனக்கு தோல்வியே கிடையாது,

இனி வரும் காலங்கள் பொற்காலமே,

எனக்கு இனி மிக பெரிய வெற்றியே

என  தன்னம்பிக்கையுடன்

தன் பழைய தொழிலில் எங்கே

தவறு என ஆராய்ந்து மீண்டும்

தொடங்கச்  சென்றார்.

இந்த பரந்து விரிந்துள்ள உலகில்

நாம் அனைவரும் "ஜெயிக்கப்  பிறந்தவர்களே!

எப்பொழுது எல்லாம் நாம்

சிரமப்படுகிறோமோ, அப்போது

அதற்காக யாரையும் குறை

சொல்வதை தவிர்க்கலாம்.

அதற்கு பதிலாக அந்த

பிரச்னையை எல்லா

கோணங்களிலும்

அலசி ஆராய்லாம்.

அதை தன்னார்வத்துடன்

ஒரு களமாக, சவாலாக

மாற்றி பாருங்கள்.

என்ன நிகழும்?

*நிச்சயமாக சரியான*

*ஒரு விடை* *கிடைக்கும்.*

வயிற்றிலே நெருப்பு


வயிற்றிலே நெருப்பு   பேசாலைதாஸ் 


முல்லா வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்றிருந்தார் . அங்குள்ள விடுதியில் இரவுப் பொழுதைக் கழிப்பதற்காகத்தங்கினார் சாதாரண மாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்க வில்லை , உபசரிக்க வில்லை . இரவில் முல்லாவுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது . வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார் . வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை . 


திடீரென முல்லா " நெருப்பு ! நெருப்பு ! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது " எனக் கூக்குரல் போட்டார் . இதைக்கேட்ட வேலைக் காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார்கள் . 

முல்லாவைப் பார்த்து எங்கே தீப்பற்றிக் கொண்டது ? " என்று பரபரப்புடன் கேட்டார்கள் . 

முல்லா அமைதியாக , ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார் . அவர் தாகம் அடங்கியது . 

" நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே ? " என்று விடுதியின் வேலைக் காரர்கள் கேட்டார்கள் . அடேடே , " நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது . இப்போது நீங்கள் கொண்டுவந்த தண்ணீரை விட்டு அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா .

 வேலைக்காரர்கள் தங்களின் தவறை உணர்ந்து முல்லாவிடம் மன்னிப்பு கேட்டனர் . 

Wednesday, 19 May 2021

இவன் என் நண்பன் ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை

 இவன் என் நண்பன் ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை

❤
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழைவிவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்யபிராயத்து நண்பன் அவனை காண வந்தான்.
விவசாயி,“வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன். வந்தபின் நாம் பேசலாம்.” என்றான்.
அந்த நண்பன்,“இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்,’’ என்றான்.
பல நாட்களுக்கு முன், அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான்.
நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான்.
அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது.
ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான்.
இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான்.
அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான்.
தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான்.
`நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?’ என நினைத்தான்.
ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின.
அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான்.
தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன.
போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். “இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்.’’ என்றவன் திடீரென,“ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை’’ என்றான்
.
நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான்.
அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், “நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்’’ எனக் கேட்டான்.
விவசாயி,“மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்.’’ என்றான்.
ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது.
விவசாயி, “என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை’’ என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும்.
மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான்.
ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்.’ என்றான்.
யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது.
ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான்.
எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான்.
ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.
அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். “இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல”
எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை
. “உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல.”
அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!’ என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான்.
‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?’
நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,“இனி நான் உன்னுடன் வரவில்லை” என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, “அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்.” என்றான்.
அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான்
அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான்.
மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘
இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்.’
ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.
அவன் சத்தமாக,“இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!” 😃 😃
இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது.
ஏனெனில் கட்டுப்படுத்தப் படும் எதுவென்றாலும் அதுஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிடும் . அது விஷமாகி விடும் .
-- ஓஷோ --

Sunday, 16 May 2021

தங்க மீன்

தங்க மீன்  பேசாலைதாஸ் 


அன்பர்களே! நம்மில் பலர், எந்த இடத்தில், யாரோடு எப்படி பேசுவது என்று தெரிராமல் உளறித்தள்ளி வீண் பொல்லாப்புக்குள் மாட்டிக்கொள்வார்கள். பிரச்சனைகள் வரும் போது, அந்த பிரச்சனைகள் யாரால் வந்ததோ, அவர்களே அதில் வசமாக சிக்கவைக்க பொருத்தமான விடயங்களை பொருத்தம்மான் இடத்தில் பொருத்தமான ஆட்களோடு புத்திசாலித்தனமாக பேசுவதினால் இரட்டிப்பு லாபத்தையும் நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ளலாம், இதை அழகாக விளக்குகின்றது இந்த கதை!

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் "அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்" என்றான்

மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்
மகாராணி கொதித்து விட்டார்
'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா...???'
அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்
'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்
'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள்
ஆண் மீன் என்று அவன் சொன்னால்
பெண் மீன்தான் வேண்டும் என்றும்
பெண் மீன் என்று சொன்னால்
ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்
எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி
மீனவன் திருப்பி அழைக்கபட்டான்
கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள்
அவன் உஷாராக பதில் சொன்னான் '
இது ஆணுமில்லை பெண்ணுமில்லை'
இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்
அதனால் தான் அதைமன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்
இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர்
மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்
அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது
மீனவன் அதை தேடி எடுத்தான்.
மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்
'பேராசைக்காரன்...
கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்
அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...
'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி
அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது
யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது'
இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்
இப்பொழுது மஹாராணி தனது வாயை மூடிக் கொண்டாள் 🐟
🐬 நீதி: 🐬
🐋 யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்

Tuesday, 11 May 2021

காரியம் ஆகனும் என்றால்,,,,,

காரியம் ஆகனும் என்றால்,,,,, பேசாலைதாஸ் 

கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்.....

இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டிவைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.

கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர்பிறக்கிறார் ..

உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்..கழுதையும் கத்தவில்லை..கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது

எனவேதான் காரியம் ஆகணும்னாகழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது....

உலகம் இது தான்...

 உலகம் இது தான்... பேசாலைதாஸ்


பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது. 

நீதி: 

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

மஹா கவி காளிதாஸ்

மஹா கவி காளிதாஸ் பேசாலைதாஸ் 


ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*

*சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*
காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் *சந்திரன்* !
ஒருவர் *சூரியன்* !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!
சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!
உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
ஒன்று *செல்வம்!*
இரண்டு *இளமை!*
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!
சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....
உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
ஒன்று *பூமி* !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்* !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!
சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!
அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
ஒன்று *முடி* !
மற்றொன்று *நகம்* !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....
தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!
உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்!
ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்*
மற்றவன் அவனுக்குத் *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...
காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!
உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!
சாட்சாத் *சரஸ்வதி தேவி* யே அவர் முன் நின்றாள்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,
தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!
*"நீ மனிதனாகவே இரு"* என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...! அன்புடன் பேசாலைதாஸ்

பாசக்கரங்கள்

பாசக்கரங்கள்  பேசாலைதாஸ் 


இரானுவ வீரர்.... ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன்...

அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம்.

யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை.

அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன்.

ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார்.

புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன்.

முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள்.

நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன.

நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன.

யாராக இருக்கும் என்று மனது.....

ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்தி கொண்டே இருந்தது...

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து....

ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார்...

ஆச்சர்யமாக இருந்தது.

"எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன.

என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன.

அம்மாவின் முகத்தைவிட,

அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்.

இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை.

ஆனால், இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்

கிறேன்.

என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 42 வயதில் செத்துப் போனார்.

அம்மாதான் எங்களை வளர்த்தார்.

நாங்கள் மூன்று பிள்ளைகள்.

அம்மா படிக்காதவர்.

ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார்.

பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள்.

மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான்.

எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து...

உறங்கச்செய்துவிட்டு...

அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள்.

சமையல் அறையில்தான் உறக்கம்.

அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும்.

எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில்...

யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம்,

நம்பிக்கை கிடைக்கும்.

அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி....

நெற்றியைத் தடவியபடியே இருக்கும்.

அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை...

தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார்....

மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று...

அடி வாங்குவதைப் பார்த்தேன்.

அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார்.

அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல்,....

விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள்....

வழியில் பேசவே இல்லை.

அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவ

ோ இல்லை.

அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை...

வீட்டில் சாமி கும்பிடவோ,

கோயிலுக்குப் போய் வழிபடவோ,

அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை.

வேலை... வேலை...

அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை.

ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன்.

கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன்.

கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன்.

மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டி இருக்கிறேன்.

அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.

அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும்.....

யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது....

கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும்,

புதுப் புது ஆடைகள் வாங்கவும்

குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன்.

என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள்.

ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா.

அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது.

அதன் பிறகு, என்னைத் திருத்தி கொண்டேன்..

தீவிரமாகப் படிக்கத் துவங்கி,

ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து.

.

கடுமையாக உழைத்துப் பதவி-உயர்வு பெற்றேன்.

அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன்.

நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும்,..

அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை....

நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து,....

தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும்.

சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால், அது நடக்கவே இல்லை.

அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம்....

ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது.

அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன்.

இப்போது வயதாகிவிட்டது.

சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கி விடுகிறேன்.

இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன்.

ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?'

என்று கேட்டார்.....

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன்.

ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக.....

அம்மா எல்லோரிடமும் காட்டினாள்.

அதை அணிந்து கொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது.

அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார்.

டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

நான் கூடவே இருந்தேன்.

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லையே..?' என்று கேட்டேன்.

அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது.

ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன்.

அது எவ்வளவு உழைத்திருக்கிறது.

எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது.

எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது.

அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன்....

இன்று அம்மா என்னோடு இல்லை....

ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன....

ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகி

ன்றன.

இதை வணங்குவதைத் தவிர,

வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன்.

அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை....

உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள்.....

யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன.

அவை எதையும் யாசிக்கவில்லை.....

அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன.

அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம்.

அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கிறேன்.

எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன்.

அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன்.

ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது....

இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்து கொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன்.

அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை.

நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்...??

முடிவு நம்மிடமே இருக்கிறது...! அன்புடன் பேசாலைதாஸ்

எல்லாம் விதிப்படியே

 எல்லாம் விதிப்படியே! பேசாலைதாஸ் ஒரு முறை எமதர்மன், ஒரு மனிதடம் வந்தார், மனிதா இன்று உனக்கு கடைசி நாள், நான் உன் உயிரை எடுக்கப்போகின்றேன், எ...