அந்நியமாதல்
அன்பர்களே அந்நியமாதல் அதாவது Alienation என்பது Existentialism இருத்தல் வாதத்தின் இன்னொரு அம்சமாகின்றது. இந்த இருத்தல் வாதம் என்கின்ற தத்துவத்தை இங்கே விளக்க முயன்றால் இது கதையல்ல நீண்ட கட்டுரையாகி விடும். இருத்தல் என்பது சுயமாக இருப்பது ஆனால் அந்னியமாதல் என்பது ஒன்றில் இருந்து தனியே பிரிந்து தனிமைப்படுத்தப்படுவது என்று விளங்கிக்கொள்ளமுடியும். உழைப்பவன் உற்பத்திக்கு அன்னியமாகின்றான் ஆனால் உழைப்பவன் உற்பத்தியை முதலாளி அனுபவிக்கின்றான். உழைப்பவனுக்கு இந்த உலகம் சொந்தம் என்றான் கார்ல்மார்க்ஸ் . அப்படியா நடக்கின்றது உலகத்தில்? எதிலும் அந்நியம், எங்கும் அந்நியம்! ஆம் மனித உறவிலும் அந்நியம். உறவு வைத்துக்கொண்டால் கொடுக்கவேண்டிவருமே, உதவி செய்யவேண்டி வருமே என்று உறவுகளை ஒதுக்கி அந்நியப்பட்டு நிற்கின்றோம்.. இப்படி நாம் எல்லாவிடயங்களிலும் அந்நியப்பட்டு மனிதன் தனித்தீவாக புலம்பெயர் உலகத்தில் வாழ்கின்றான். இது ஆரோக்கியமான அம்சம் அல்ல, அழிவின் ஆரம்பம், உறவுகளை சரியாக நாம் பேணிப்பாதுகாக்காவிடால் நாம் ஒருவர் ஒருவரை அழிக்க தயங்கமாட்டோம். எனது இந்த கருத்தை வலுவூட்ட ஒரு உண்மை ஆய்வு, கதையாகின்றது.இரண்டாம் உலகப் போரில் பல நகரங்களின் மீது குண்டுமழை பொழிந்ததற்காக பல பாராட்டுகள், பல பதக்கங்கள் பெற்ற போர் விமானி அவர். இங்கிலாந்தில் மனநல மருத்துவர் ஒருவர், அந்தப் போர் விமானியை வைத்து ஒரு பரிசோதனை நடத்த விரும்பினார். அதனால் அவரைப் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த விமானியின் கண்களைக் கட்டி ஒரு நாற்காலியில் அமர வைத்து பரிசோதனையை ஆரம்பித்தார் மருத்துவர். உன்னுடைய போர்த்திறமைகளையெல்லாம் பாராட்டுகிறேன் என்றார் மருத்துவர். ஏற்றுக் கொள்கிறேன் என்றார் போர் விமானி. பின்னர் அவரிடம் ஒரு குழந்தைப் பொம்மையைக் கொடுத்தார். அதைச் சிறிதுநேரம் தடவிப்பார்த்துக்கொண்டே இருந்தார் விமானி. பின்னர் இது ரொம்ப நல்ல, அழகான பொம்மை என்றார். பின்னர் அந்த மருத்துவர் பெட்ரோலை அவரிடம் கொடுத்து, இதை ஊற்றி இந்தப் பொம்மையை எரித்துவிடு என்றார். இவ்வளவுதானே என்று அலட்சியமாகப் பெட்ரோலை வாங்கினார் விமானி. ஆனால் பெட்ரோலை ஊற்றத் தொடங்கியபோது போர் விமானியின் கை நடுங்கத் தொடங்கியது. என்னால் முடியவில்லை என்று பெட்ரோலை திருப்பிக் கொடுத்த விமானி அழ ஆரம்பித்தார். குண்டு மழை பொழிந்தவருக்கு குழந்தைப் பொம்மையை எரிக்க மனம் வரவில்லை. ஏனென்றால் இந்தக் குழந்தைப் பொம்மையோடு அவர் சிறிது நேரம் விளையாடிவிட்டார். பொம்மைக்கும் அந்த விமானிக்கும் இடையில் ஒரு உறவு ஏற்பட்டதால் அந்த பொம்மையை அழிக்க அவருக்கு மனம் வரவில்லை, உண்மையான உறவு மனிதமனதில் ஏற்பட்டால் போர் ஏது அழிவு ஏது? எனவே உறவைக்காப்போம் என்பதில் கருத்தாய் என்றும் இருப்போம் என்றும் அன்புடன் பேசாலைதாஸ்