நக்குவது ஒரு நல்ல பாடமா? அன்பர்களே சரியாக புரிந்து கொள்வது, சரியாக புரிய வைப்பது இவை இரண்டும் மிக மிக முக்கியமானது. எதையும் நாம் சரியாக, மற்றவர்களுக்கு புரியும் படியாக சொன்னால் அல்லது செய்தால் எல்லோரும் சரிவர புரிந்து கொள்வார்கள். இவை இரண்டும் சரிவர நடந்துவிட்டது என்றால் பிரச்சினைகள் எழ வாய்ப்பே இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுஅதன் படி நடந்தால் மனக்கசப்புகள் பிரிவினைகள் எதற்காக வரவேண்டும்? இதை அழகாக சித்தரிக்க இதோ என் எண்ணத்தில் உதித்த ஒரு கதை!,,,,,,,, அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடம் எதுவுமே மாணவர்களுக்கு விளங்கவில்லை. வகுப்பு முடியும் நேரத்திற்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டு காத்திருந்தனர் மாணவர்கள் . பாடத்தை முடித்து ஆசிரியர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். பதில் தெரியாத மாணவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார். அந்நேரம் பார்த்து அப்பக்கமாக வந்த பெரியவர் ஒருவர் மாணவர்கள் பரிதாபமாக நிற்பதைக் கவனித்தார். அந்தப் பெரியவர் ஆசிரியரிடம், இன்று மாலை என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டுச் சென்றார். ஆசிரியரும் அந்தப் பெரியவர் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்தப் பெரியவர் ஆசிரியரிடம், மீன் எண்ணெய் நாய்களுக்கு நல்லது என்று கேள்விப்பட்டேன். இந்த மீன் எண்ணெய்யை இந்த நாய்க்கு ஊற்ற வேண்டும், கொஞ்சம் கை கொடுங்கள் என்றார். ஆசிரியர் நாயைப் பிடித்தார். தனது கால்களுக்கு இடையே நிறுத்தி அதன் தலையைப் பிடித்து உயர்த்தினார். அதன் வாயைத் திறந்தார். பெரியவர் நாயின் வாயில் எண்ணெய்யை ஊற்றினார். நாய் திமிறியது. எண்ணெய் பூராவும் தரையில் கொட்டிவிட்டது. இப்போது அந்த நாய் தரையில் கொட்டிய எண்ணெய்யை நக்கியது. ஆசிரியர் வியப்போடு அதைக் கவனித்தார். அந்தப் பெரியவர் ஆசிரியரைப் பார்த்தார். ஆசிரியருக்கு ஓர் உண்மை புரிந்தது. நாய்க்கு எண்ணெய் பிடித்திருக்கிறது. ஆனால் அதை நாய்க்கு கொடுத்த விதம் தான் தவறு என்று புரிந்துகொண்டார் ஆசிரியர். என்ன அன்பர்களே உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா? அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்