அந்த இளைஞன் காலையில் எழுந்ததும், அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த பெரியவர் ஒருவர், எதைத் தேடுகிறாய்? என்றார். பல்துலக்கும் பிரஷ் என்றான் இளைஞன். தேடு கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் அவர். சிறிது நேரம் சென்று மீண்டும் அங்கு வந்தார் அந்தப் பெரியவர். அப்பொழுதும் அந்த இளைஞன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். இன்னமும் கிடைக்கவில்லையா? என்று பெரியவர் கேட்டதற்கு, அது கிடைத்துவிட்டது, இது வேறு, இப்பொழுது நான் அலுவலகம் புறப்பட வேண்டும், சட்டையை எங்கே மாட்டி வைத்தேன் என்பது மறந்து விட்டது என்றான். நன்றாகத் தேடிப்பார் என்று சொல்லிவிட்டுப் போன பெரியவர், மாலையில் மீண்டும் அங்கு வந்தார். அப்போது அந்த இளைஞன் வீட்டு வாசலில் குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தான். பெரியவர் அவனிடம், இப்பொழுது என்ன குழப்பம்? என்றார். தலையைச் சொரிந்துகொண்டே, வீட்டுச் சாவியைத் தொலைத்துவிட்டேன் என்றான். பெரியவர் யோசித்தார். இவன் தேடுவதிலேயே காலத்தை வீணாக்குகிறானே என்று கவலைப்பட்டு, இளைஞனுக்கு ஓர் ஆலோசனை சொன்னார். ஒரு தாளையும், ஒரு பேனாவையும் எடுத்து, ஒரு பொருளை வைக்கும்போதே அதை வைத்த இடத்தைக் குறித்துக்கொள். மறுபடியும் எடுக்கும்போது எழுதி வைத்ததைப் பார்த்து இருக்குமிடத்தைப் புரிந்துகொள் என்று சொல்லிவிட்டு நிம்மதியாகப் போனார் பெரியவர். மறுநாள் அவ்வழியாக வந்த அந்தப் பெரியவர், அந்த இளைஞன் இன்னும் எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தம்பி, இப்போது என்ன குழப்பம்? என்றார் பெரியவர். நீங்கள் சொன்னபடி செய்தேன். எனது சட்டை, காலணிகள், இப்படி ஒவ்வொன்றும் இருக்குமிடம் தெரிகிறது. ஆனால் அவற்றையெல்லாம் அணிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், முடியவில்லை என்றான். ஏன் என்று பெரியவர் கேட்க, நான் எங்கே இருக்கிறேன் என்பதைக் குறித்து வைக்க மறந்துவிட்டேன் என்றான் இளைஞன். ஆம். நான் என்னை அறியாமல், பிறரை அறிய முடியாது, பிறரை அறியாமல், எப்படி பிறருக்குப் பயனுள்ளவராய் வாழ முடியும்? அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே