பின் தொடர்பவர்கள்

வியாழன், 28 செப்டம்பர், 2023

கல்வி கல்விதான்.

கல்வி கல்விதான்பேசாலைதாஸ்

‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும்.

‘‘சொல்லுப்பா?’’

‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’

‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’

‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’

‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’

‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’

‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’

‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’

‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’

‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’

‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’

‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’

‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார்.

அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’

‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’

‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை.

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’

‘‘புரிகிறது அப்பா!’’

‘‘நான் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மரக்கடை வைத்திருக்கலாம். ஆனால், கெமிஸ்ட்ரியை எப்படி ஆராய்ந்து புரிந்து படித்தேனோ, அதே யுத்தியைத்தான் வியாபாரத்திலும் செயல்படுத்துகிறேன். அந்த வகையில், நான் கற்ற கல்வி எனக்கு மிக உபயோகமாக இருக்கிறது.

எந்த துறையைப் படித்தாலும், கல்வி கல்விதான். அது நம் அறிவை வளர்த்து நன்மையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆகையால் எந்த துறையானாலும் விருப்பத்துடன் படிக்க வேண்டும்’’ என்று அப்பா சொல்லி முடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...