Followers

Wednesday, 13 October 2021

சேகுவேரா

 சேகுவேரா  Siva Murugupillai


நாம் வாழும் காலத்தில் எம்முடன் வாழ்ந்த நீயும் எம் தோழன்....

“என்னை நீங்கள் சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் என்னை நீங்கள் தோற்கடிக்க முடியாது. என் இனிய தோழர்களே என்னுடைய துப்பாக்கியை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மரணத்தின் விளிம்பில் நின்று அறைகூவல் விடுத்தவன் சேகுவேரா. இன்று அந்தப் புரட்சிப் போராளியின் நினைவு நாள்.

சே குவேரா(Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா(Ernesto Guevara de la Serna)  (ஜுன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, சர்வதேசியவாதி. கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி... தொடர்ந்தும் வேறு பல நாடுகளின் புரட்சியில் தன்னை 

இணைத்துக் கொள்ள புறப்பட்ட ஒரு நாளில்..... 

போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ பொலிவியா காடுகளில்.... சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்திருந்தது. 'சே" ஐ கொலை செய்வதற்காக.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். ஏன் உலக சரித்திரத்திலேயே இருண்ட தினம். காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30 காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம் ‘‘நான்தான் ‘சே’. நான் இறப்பதைக் காட்டிலும் உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.

மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறை வைக்கின்றனர்.

இரவு 7.00 ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏவுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம் ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம் ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9 அதிகாலை 6.00 லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார். கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது கனவா என நினைத்தார். 

பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’ 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார். 

நண்பகல் 1.00 கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

இந்தப் பதிவிற்கு அவரின் மரணப்படுக்கையிலான புகைப்படத்தைதான் பிரசுரிக்க வேண்டும் என்பதற்கான காரணம் அந்த மரணப் படுக்கையிலும் தனது இலட்சிய வேட்கையையும், எதிரிகளிடம் சரணடையாத வீரத்தையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அவரின் முகத்தினைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே பதிவில் இணைத்தேன். 

இந்த பண்புகள்தான் இன்று உலகில் வாழும் கோடான கோடி இளைஞர்கள் தம்மை சேகுவாராவின் பிரதிபலிப்பாக காட்ட முற்படுத்தும் 'கதாநாயக" உணர்வலைக்குள் இழுத்து வந்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக அவரின் வாழ்க்கை வரலாறு, ஏன் கொல்லப்பட்டார், கொல்லப்படுவதற்கு முன்பு எம் மாதிரியான போராட்டங்களில் ஈடுபட்டார், என்ற வரலாற்றை அறிய வைத்திருக்கின்றது. அது பலரை அவரின் ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒலிக்கவும், போராடவும் வைத்திருக்கின்றது.

மரணத்தை கண்டு நாம் அஞ்வில்லை ஒரு அனாதையாய், அடிமையாய் நான் மரணிப்பதை வெறுகின்றேன் என்ற அவரின் நிலைப்பாடும் அவரின் செயற்பாடுகளும் இருப்பதைக் சுட்டிக் காட்டி நிற்கின்றன.

ஒரு தேசத்தின் விடுதலைக்குள் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ள  விரும்பாத போராளியாக வாழ்ந்து எம்முடன் இன்றும் வாழ்பவர்தான் சேய்குவரா. மரணத்தின் பின்பும் எனக்கு ஒரு வாழ்விருக்கும் புரட்சியாளர்கள் நம்புவதை இன்றுவரை நிரூபித்துக் கொண்டிருக்கும் உன்னத போராளி.

இன்று உலகில் மிக அதிமான இளைஞர்களின் ஒரு அடையாளச் சின்னமாக தமது ஆடைகளிலும், உடலிலும், மனங்களிலும் பதிவாகி இருப்பவர் தோழர் சேகுவரா. 

இந்த இளைஞர்களில் பலர் சேகுவரா கொண்டிருந்த மாக்சிச கொள்கைகளை வரிந்து கட்டியவர்களாகக் கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனித குல விடுதலைக்காக போராடி இன்னும் வேறு நாடுகளுக்கும் நகர்ந்து போராடத் தயார் நிலையில் இருந்தவர் என்ற அடையாளச் சின்னமாக சேகுவரா பாரக்கப்படுவதினால்.... உரிமையிற்கு குரல் கொடுத்து தனது உயிரை இழந்தவர் என்ற வகையில் சகலராலும் விரும்பப்படுபவர்.

கியூபாவின் புரட்சியில் பிடல் காஸ்ரோவுடன் இரு குழல் துப்பாக்கியாக செயற்பட்ட சேய் அந்த வெற்றிக்குப் பின்பு அவருக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவிகளைத் துறந்து இன்னொரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலையை நோக்கி பயணப்பட்டவர் அரச பதவி காலங்களில் பல நாடுகளுக்கு அரசுப் பிரதிநிதியாக சென்று தனது கருத்துக்களை விதைத்தவர்.

தனது மரணத்திற்கு முன்பு அவரின் செயற்பாட்டு வாக்கு மூலம் இன்று வரை பலரின் மனங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அது ஒடுக்கப்படும் எந்த இனமும் தனது விடுதலைக்காக போராடித்தான் தீரும் என்பதைகத்தான் அமைகின்றது.

மார்க்ஸ், ஏங்கலஸ்; மனித குலவரலாற்றை ஆய்வு செய்து உருவாக்கிய மாக்சிய சித்தாந்தம் மனித குலம் ஒரு நாள் சகலரும் சமத்துவமான ஒரு வாழ்வதற்குரிய கம்யூனிசத்திற்குள் வந்தே தீரும் என்பது சமூக விஞ்ஞானபூர்வமாக நிறுவப்பட்டிருக்கின்றது. சோவியத் யூனியன், சீனா, வியட்நாம் என்று இதன் பாதையை தொடர முற்பட்ட நாடுகள் சில தமது பாதையை தொடர்ந்தும் முன்னோக்கி செலுத்த முற்படுகையில் எற்பட்ட தடைகளைத் தாண்டி மனித குலம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றது இன்று.

இந்த பாதையில் தனது போராட்ட வாழ்வை ஆரம்பித்தவர்தான் சேய்குவரா. இடதுசாரிப் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தது தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்ட அரசியல் சித்தாந்த கருத்துகள், செஸ் ஆட்டத்தில் ஈடுபாடு, ரகர் விளையாட்டில் ஆர்வம் இதனுடன் கூடிய விடாது துரத்திய ஆஸ்துமா வியாதி என்று பலவற்றiயும் தனக்கு கொண்டிருந்திருந்த ஒரு கவிதை புனைவாளர் சே. 

மேலும் பல நாடுகளுக்கும் பயணம் செய்து அந்த நாட்டு மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியவர் அதுதான் அவரை தொடர்ந்தும் கியூப புரட்சியின் பின்பு பதவிகளை துறந்து போராட்டக் களத்திற்கு அனுப்பியது.

தென் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் ஒரேவிதமான ஒடுக்கு முறை நிலவுவதை அவதானித்த சேகுவரா அங்குள்ள எல்லா நாடுகளிலும் தனது புரட்சிக்கான போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார் கியூப அரசுடன் 15 வருடங்கள் பணியாற்றிய பின்பு இதற்கான பயணங்களில் ஈடுபட்டார்.

சேயைப் பற்றி பல  நூல்கள், திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் அவர் தன் நண்பரொருவருடன் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்தது பற்றி அவர் எழுதிய “மோட்டார் சைக்கிள் டயறி” என்ற நூல் மிகவும் பிரசித்தமானது. இந்த நூல் இதே பெயரில் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. இதைத் தவிர “சே குவேரா: வாழ்வும் மரணமும்” என்ற தலைப்பில் மெக்சிக்கோவைச் சேர்ந்த பேராசிரியர் ஜோர்ஜ் ஜி.காஸ்டநாடா எழுதிய நூலும் முக்கியமானது.

தென் அமெரிக்கா நாடுகளின் அதிக நிலங்களை அமெரிக்க கம்பனிகள் சுவீகரித்து தமது சொத்துக்களாக வைத்திருந்தனர். இதனை நிலமற்ற மக்களுக்கு பகிர்ந்த அளித்தல் என்ற செயற்பாட்டுடன் மக்களை அணிதிரட்டுதல் என்றதாக தனது போராட்டத்தினை ஆரம்பித்தார். இது இன்றுவரை முடிவுறாக கதையாக தொடர்வதை நாம் அவதானிக்க முடியும்.

மேலும் இன்று வரை இடையிடையே மாற்றங்கள் எற்பட்டாலும் முழு தென் அமெரிக்க நாடுகளும் அமெரிக்க நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமது கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதை நாம் அவதானிக்க முடியும.;. இந்த முன்னிலை தெளிவுதான் சேய் தென் அமெரிக்காவில் முன்னெடுக்க இருந்த போராட்டங்களாகும்.

கியூப அரசின் பதிவிகளில் இருந்த காலகட்டங்களிலும் பல நாடுகளுக்கும் கியூப அரசின் பிரதிநிதியாக சென்ற வந்தவர். அதில் இலங்கை, இந்தியாவும் அடக்கம் இலங்கை விஜயத்தின் ஞாபகார்த்மாக மரம் ஒன்றும் நாட்டியுள்ளார் அது இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

உலகின் தேசிய விடுதலையினது அடையாளமாகவும் அதனைத் தொடர்ந்த வர்க்க விடுதலையின் உந்து சக்தியாகவும் சே எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். (மீள்பதிவு) பேசாலைதாஸ்

No comments:

Post a Comment

என் உயிர் நீதான்

என் உயிர் நீதான்   ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவரு...