பின் தொடர்பவர்கள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

துன்பம் இல்லாத இன்பம்!

 துன்பம் இல்லாத இன்பம்! பேசாலைதாஸ்

முன்னொரு காலத்தில் ஒட்டகம் மேய்க்கும் ஒருவன் இருந்தான். அவன் தன் ஒட்டகத்தை மேய்த்து விட்டு ஒட்டக கூடாரத்தில் கொண்டு போய் கட்டி விடுவது உண்டு. அவன் வாழ்க்கையில் தனக்கு இருக்கும் பிரச்சனை பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தான். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் இன்பம் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? என்றெல்லாம் யோசித்தவாரே சாலையோரத்தில் நடந்து கொண்டு இருந்தான்.

அப்பொழுது அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரிடம் சென்று, முனிவரே! மற்றவர்களுக்கு வாழ்க்கையில் தான் பிரச்சனை இருக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கிறது. நான் என்ன செய்யலாம்? என்று கேட்டானாம். அதற்கு அந்த முனிவர், அவனைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, இன்று இரவு கூடாரத்திற்கு படுக்க செல்லும் முன் அங்கு கட்டப்பட்டுள்ள ஒட்டகங்கள் அத்தனையும் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று உற்று நோக்கு. ஒட்டகங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் படுத்த பின்னரே நீ உறங்க வேண்டும். அதுவரை விழித்துக் கொண்டு இரு என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

இரவு கூடாரத்திற்கு சென்ற மேய்ப்பன், ஒட்டகங்களை உற்று நோக்கி கொண்டிருந்தான். அங்கிருந்த சில ஒட்டகங்கள் தானாகவே படுத்து விட்டன. சில ஒட்டகங்களை அவன் கட்டாயப்படுத்தி படுக்க வைத்தான். ஆனால் அவனால் எல்லா ஒட்டகங்களையும் அப்படி ஒருசேர படுக்க செய்ய முடியவில்லை. ஒரு ஒட்டகத்தை படுக்க வைப்பதற்குள், இன்னொரு ஒட்டகம் எழுந்து நின்று கொண்டிருந்தது. கடைசி வரை அவனால் ஒருசேர ஒட்டகத்தையும் படுக்க வைக்க முடியவில்லை, அதனால் அவன் தூங்கவும் இல்லை.

மறுநாள் காலையில் முனிவரை சந்தித்த மேய்ப்பன், நடந்த விவரத்தைக் கூறினான். முனிவர் சிரித்துக் கொண்டே அதற்கு இவ்வாறு பதில் அளித்தார்! உன்னுடைய பிரச்சனையும் ஒட்டகத்தை படுக்க வைப்பதற்கு சமமானது தான். வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தானாகவே முடிந்துவிடும். சிலவற்றை நாமே போராடி முடித்து வைக்க வேண்டும். அப்படி நாம் செய்தாலும், வேறு ஒரு பிரச்சனை புதிதாக எழுந்து நிற்க தான் செய்யும். இவற்றையெல்லாம் சிந்தித்து கொண்டு இருந்தால் கடைசி வரை தூக்கம் என்பது இல்லாமல் போய்விடும்.

பிரச்சனைகளை பற்றிய சிந்தனைகளை முதலில் தூக்கி எறி. வருவது வரட்டும் என்று தைரியமாக உன் வேலையை மட்டும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிரு. பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தாலே! துன்பமில்லாத இன்பமான வாழ்க்கை நிச்சயமாக வாழ முடியும். யாருக்கு தான் பிரச்சினை இல்லை? பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதற்கு பெயர் தான் வாழ்க்கை, அதைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருப்பது அல்ல! என்று கூறி புரிய வைத்தாராம். இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 "எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ் ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிற...