Followers

Sunday 5 November 2023

நடைபாதை

 நடைபாதை    பேசாலைதாஸ்

ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார்.

ரொம்ப எளிமையான மனிதர். 

தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை.

 சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார். 

அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார். 

வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை.

தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை. 

மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். 

இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை.

அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார். 

இவர் அதை மறுத்து விட்டார்.

சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

 அவர் அதுவும் வேண்டாம் என்றார்.

 சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார்.

 தேவையில்லை என்றார் இவர்.

 நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்.

 அதுவும் வேண்டாம் என்றார்.

 நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

 நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன். 

 மக்கள் தொண்டுக்கு ஊதியம்  எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார்.

முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார். 

ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார்.

அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார். 

அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார். 

இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது.

அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இது நடைபாதை. 

இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன்.

இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது. 

சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம். 

பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள். 

இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள். 

நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது. 

நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். 

எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார். 

அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள்.

நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர்.

ஐயா வணக்கம்! 

எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம். 

ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். 

அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள். 

பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள்.

 அதற்கு நீதிபதி  இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். 

 எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை. 

நீங்கள் சொல்லுங்கள் என்றார்.

சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள்.

 என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி.

 நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். 

 அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள்.

 உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார் நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள்.

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...