Followers

Tuesday 10 January 2023

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். மனதை கைவிட்டால் போதும்.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். மனதை கைவிட்டால் போதும். பேசாலைதாஸ்  

அவன் சாதாரணத் திருடன் இல்லை. அவன் தலை சிறந்தவன். அந்த நாட்டு மன்னனுக்கே அவனிடம் பெரிய மரியாதை இருந்தது.

ஏனென்றால் அவன் அதுவரை பிடிபட்டதேயில்லை. அந்த நாட்டிலேயே அவன்தான் பெரிய திருடன் என்று எல்லாருக்கும் தெரியும்.

திருடர்கள் மத்தியில் அவன் புகழ் நாலாபக்கமும் பரவியிருந்தது. அவனால் திருடப்படுவதையே கெளரவமாக நினைத்தார்கள் மக்கள்.

"நேற்று எங்கள் வீட்டுக்கு பலே திருடன் வந்தானாக்கும்" என்று பெருமையடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். தங்கள் பொருள்கள் திருடு போவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் அந்தத் திருடனின் கைவண்ணத்தைப் பாராட்டுவதிலேயே மக்கள் குறியாக இருந்தார்கள்.

அது மட்டுமில்லை. அந்த பலே திருடன் ஒரு வீட்டுக்கு வருகை புரிந்தான் என்றால் அவன் அந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் என்று பொருள். சாதாரணமானவர்கள் வீட்டுக்கு அவன் போவதில்லை.

மன்னர்கள், அமைச்சர்கள், பெரிய செல்வந்தர்கள் வீட்டுக்கு மட்டும் தான் அவன் போவான். ஆகவே பலே திருடனின் வருகை அந்தஸ்தின் அடையாளமாகப் போய்விட்டது.

அந்த திருடனுக்கு வயதாகிவிட்டது. அவனது மகன் அவனைக் கேட்டான். "அப்பா, உங்களுக்கோ வயதாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்கள் கஷ்டப்படப் போகிறீர்கள்? எனக்கு தொழிலைக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் ஓய்வெடுங்கள்.''

"அதைத்தானடா யோசித்துக் கொண்டிருக்கிறேன். மகனே, திருடுவது கலையில்லை. அது ஓர் உத்தி. அதை நான் உனக்குச் சொல்லித் தர முடியாது. ஆனால் நீ புத்திசாலியாக இருந்தால் நான் சொல்லாமலேயே உன்னால் அதை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும்."

ஆன்மிகமும் அப்படித்தான். அதை சொல்லித்தர முடியாது. கொஞ்சம் அறிவும் விவேகமும் இருந்தால் அடுத்தவரிடம் இருந்து 'பிடித்துக்' கொள்ளலாம்.

பலே திருடன் தனது மகனிடம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

"திருடுதல் என்பது ஓர் உத்தி. நான் உனக்கு உதவத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீதான் அதைப் 'பிடித்துக்' கொள்ள வேண்டும். நீ அதைப் பிடித்துக் கொள்ள என்னாலானதைச் செய்கிறேன்.

திருடுவது, கவிதை எழுதுவது இதெல்லாம் அடுத்தவர் சொல்லிக் கொடுத்து வராது. தானாக வரவேண்டும். உனக்கு அது வருமா வராதா என்று இப்போது சொல்ல முடியாது. நீ முயற்சி செய்து பார். இன்று இரவு தொழிலுக்குப் போகும் போது நீ என்னுடன் வா.'

அன்று தந்தையுடன் தொழிலுக்குச் சென்றான் மகன். மகன் இளைஞன். நல்ல திடகாத்திரமாக இருந்தான். தந்தைக்கோ எழுபது வயதுக்கு மேல் ஆகியிருந்தது.

அவர்கள் இருவரும் ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டுக்குப் போனார்கள். பலே திருடன் சுவரை உடைத்தான். அவன் உடைக் கும் அழகை உடல் நடுங்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் மகன்.

அது நல்ல குளிர் காலம் என்றாலும் மகனுக்கு வியர்த்துக் கொட்டியது. அவனுக்கு பயமாக இருந்தது. அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். யாராவது அவர்களைப் பார்த்துவிட்டால்...

“அப்பாவின் தொழில் நேர்த்தியே நேர்த்தி! ஏதோ தனது சொந்த வீட்டுச் சுவரை உடைப்பது போல் பதற்றப்படாமல் அமைதியாக உடைத்துக் கொண்டிருக்கிறாரே! அவருக்குக் கொஞ்சம் கூட பயம் இருக்காதா?"

தந்தை ஒரு முறை கூட அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவரை உடைத்து முடிந்தவுடன் அனாயாசமாக வீட்டுக்குள் நுழைந்தான் தந்தை. மகனைப் பின் தொடர்ந்து வருமாறு சைகை காட்டினான்.

மகன் இப்போது தலையோடு கால் நடுங்கிக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு வந்தது போல் வியர்த்துக் கொட்டியது மகனுக்கு. நல்ல வெயில் காலத்தில் கூட, பகல் வேளையில் இந்த அளவு அவனுக்கு வியர்த்ததில்லை.

ஆனால் தந்தையோ இருட்டில் அந்த வீட்டில் வசிப்பவனைப் போல் உள்ளே நடமாடிக் கொண்டிருந்தான். எதன் மேலும் தடுமாறி விழவில்லை. எந்த சத்தமும் எழுப்பவில்லை.

வீட்டிற்குள்ளே இருந்த ஓர் அறைக்குச் சென்றார்கள் அவர்கள். அங்கே இருந்த ஆளுயர அலமாரிக்குள் தன் மகனை நுழையுமாறு சொன்னான் தந்தை.மகன் உள்ளே நுழைந்தான்.

அடுத்து மகன் கற்பனையிலும் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்தான் தந்தை.

அந்த அலமாரியை வெளியில் இருந்து பூட்டினான். உள்ளே மகன் இருந்தான். “திருடன் திருடன்” என்று பெரிதாகக் கத்தியபடி வீட்டை விட்டு ஓடிவிட்டான் தந்தை.

வீட்டில் இருந்தவர்கள் எழுந்துவிட்டார்கள். அண்டை வீட்டுக் காரர்கள் எல்லாருமே எழுந்துவிட்டார்கள். எல்லா விளக்குகளையும் ஏற்றித் திருடனை வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள்.

மகனின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

"அவ்வளவுதான். தொலைந்தோம். என் என் அப்பன் ஒரு பைத்தியக்காரன். தொழில் கற்றுக் கொடு என்று நான் அவரைக் கேட்டிருக்கக்கூடாது. இது எனக்கான தொழிலே அல்ல. அந்த ஆள் சொல்வது சரிதான். திருடர்கள் பிறக்கிறாரக்ள், உருவாக்கப் படுவதில்லை.

"இப்படியா ஒரு மனுஷன் சொல்லித் தருவான்? நான் மட்டும் இவர்களிடமிருந்து பிழைத்தால் என் அப்பனைத் தேடிப் பிடித்துக் கொலை செய்வேன். வீட்டிற்குப் போய் அவன் தலையை அறுத்துக் கொல்வேன்."

அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. யாருக்கும் அந்த சூழ்நிலையில் கோபம் வரத்தானே செய்யும்? ஆனால் இப்போது கோபப்பட நேரம் இல்லை. ஏதாவது செய்து இவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் மனம் சிந்திக்க மறுத்தது.

அதுதான் உண்மையான தியான நிலை. மனம் செயலற்று, சிந்தனையற்று இருப்பதுதான் உண்மையான தியானம்.

அடுத்து என்ன செய்வது என்று மனதிற்கு சத்தியமாகத் தெரியாது. ஏனென்றால் மனத்திற்கு தெரிந்த விஷயங்கள் இந்த சூழ்நிலைக்குப் பயன்படாது.

அவனுடைய மனம் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை இதுவரை சந்தித்ததேயில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மனம் தெரிந்ததைத்தான் சுற்றிச் சுற்றி வரும்.

தெரியாதது எதையாவது பார்க்க நேர்ந்தால் மனம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விடுகிறது. மனம் ஓர் இயந்திரம். சரியான செய்திகளை மனதிற்கு நீங்கள் கொடுக்கவில்லையென்றால் அதனால் இயங்க முடியாது.

இது ஒரு புதிய சூழ்நிலை. பலே திருடனின் மகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அப்போது அந்த வீட்டின் வேலைக்காரி கையில் ஏற்றிய மெழுகுவர்த்தியோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். எப்படியும் திருடன் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். சுவர் உடைக்கப்பட்டிருக்கிறது,

கதவுகள் எல்லாம் திறந்திருந்தன. அப்படியென்றால் திருடன் எப்படியும் உள்ளே இருக்கும் இந்த அறைக்குத்தான் வந்திருக்கவேண்டும். இங்கே தான் எங்கோ அவன் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள்.

மகன் பதுங்கியிருந்த ஆளுயர அலமாரியில் ஏதோ சத்தம் கேட்க, அலமாரியை திறந்தாள் அவள். 

உள்ளே இருந்த திருடனின் மகன் தனது கையால் அலமாரியைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அந்த செயலை அவன் தன்னிச்சையாகச் செய்து கொண்டிருந்தான். மனதால் திட்டமிட்டுச் செய்யவில்லை.

அலமாரி கதவுகளின் இடுக்கு வழியாக யாரோ விளக்குடன் அறைக்குள் நுழைவதைப் பார்த்தான். காலடி ஓசையைக் கேட்டான். இப்போது அறையில் அவ்வளவாக இருட்டு இல்லை. கதவைத் திறக்க வேண்டுமென்றால் ஏதாவது செய்தே ஆக வேண்டும். என்ன செய்வது?

எலியைப் போல் பிறாண்ட ஆரம்பித்தான்.

சத்தம் கேட்டு அந்த வேலைக்காரி கதவைத் திறந்தாள். திறந்து உள்ளே யார் இருக்கிறார்கள் என்று மெழுகுவர்த்தியால் பார்க்க முயன்றாள்.

உடனே அவன் அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.

விளக்குகளையும் வேல் கம்புகளையும் எடுத்துக் கொண்டு பத்து பேர் அவனைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தார்கள். அவன் எப்படியும் பிடிப்பட்டுவிடுவான் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அப்போது வழியில் ஒரு பாழுங் கிணற்றைப் பார்த்தான். பக்கத்தில் இருந்த ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அந்த கிணற்றில் போட்டான். அது பெரிய சத்தத்துடன் உள்ளே விழுந்தது. அருகில் இருந்த மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தொடங்கினான்.

அவனைத் துரத்தி வந்தவர்கள் அவன் கிணற்றில் குதித்துவிட்டான் என்று நினைத்தார்கள்.

"இனிமேல் அவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்அவன் கிணற்றில் குதித்துவிட்டான். காலையில் வருவோம்

அவனை வெளியில் எடுப்போம். உயிருடன் இருந்தால் காவலர்களுக்குச் சொல்லியனுப்பி அவனைச் சிறையில் அடைப்போம். அவன் செத்திருந்தால் அவனுக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளலாம். வாருங்கள் போகலாம்.'

மகன் வீடு திரும்பினான். அவனுடைய தந்தை கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். கோபத்தில் கம்பளியை உருவிப் போட்டான் மகன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது? அப்படிச் செய்தீர்கள்?”

"அப்....பா. நீ திரும்பி வந்துவிட்டாயா? அது போதும். நீ பிறவிக் கள்ளன் தான் என்பதை இப்போது ஒத்துக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாகத் தொழில் செய்யத் தொடங்கலாம். இந்தத் தொழிலின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டுவிட்டாய்.

"எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை மகனே! நான் உன்னை வைத்துச் சூதாடினேன். இந்த சூதில் நான் தோற்றால் உன் கதை முடிந்திருக்கும். நீ உயிருடன் திரும்பிவிட்டாய் என்றால் நான் சூதில் ஜெயித்துவிட்டேன் என்று அர்த்தம்.

"இப்போது நீ வந்துவிட்டாய். நான் ஜெயித்துவிட்டேன். இப்போது என்னைத் தொந்தரவு செய்யாமல் போய்த் தூங்கு. நாளை காலை நீ எப்படி தப்பித்தாய் என்று எனக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லு.

ஆனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். விவரங்கள் தெரியாதேயொழிய சாரம் தெரியும். அதுவே எனக்குப் போதும். இதுதான் என் தொழில். இதுதான் என் கலை. நீ இதில் கைதேர்ந்துவிட்டாய். நாளையே நான் செத்தாலும் சந்தோஷமாகச் சாவேன்.

“என் கலை என் வாரிசிடமும் இருக்கிறது என்று நிம்மதியாகச் சாவேன். இப்படித்தான் என் தந்தை எனக்கு தொழில் கற்றுக் கொடுத் தார்.

இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ள இந்த ஒரு வழிதான் இருக்கிறது. ஆபத்துக்களை நேரில் சந்திப்பதுதான் அந்த வழி.

தியானமும் அப்படித்தான்.திருடன் கூட ஞானியாகலாம். திருடன் கூட இந்த தருணத்தில் வாழலாம். திருடன் கூட மனம் என்னும் சுமையை உதறித் தள்ளிவிட்டு ஞானியாகிவிடலாம்.

அதனால்தான் நான் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை.

தீட்சை வேண்டும் என்று என்னைத் தேடி வருபவர்களுக்கெல்லாம் நான் தீட்சை தருகிறேன்.

அவர்கள் என்ன தொழில் புரிகிறார்கள் என்று ஒரு போதும் நான் கேட்டதேயில்லை. வருபவர்களில் சிலர் அவர்களாகவே, "ஓஷோ, நான் குடிகாரன். அதனால் பரவாயில்லையா?” என்று கேட்பார்கள். இன்னும் சிலர் தங்களைத் திருடர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.

நான் கொலைகாரன் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் கூட என்னிடம் தீட்சை பெற்றிருக்கிறார்கள். 'நான் இப்போது தான் ஜெயிலில் இருந்து விடுதலையானேன் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் இதைத்தான் சொல்வேன்.

“எனக்கு விவரங்கள் தேவையில்லை. நீங்கள் இதுவரை ஒரு மாதிரியான தூக்க நிலையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறீர்கள். அந்த நிலையில் நீங்கள் செய்த செயல்களில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

நீங்கள் பாவியாக இருந்தாலும் சரி, பரோபகாரியாக இருந்தாலும் சரி, நீங்கள் புனிதராக வாழந்திருந்தாலும் சரி, சாத்தானின் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, எனக்கு எல்லாம் ஒன்றுதான்."

தன்னுணர்வு இல்லாமல் செய்த செயல்களில் என்ன பெரிதாக வித்தியாசம் இருந்துவிடப் போகிறது? ஒருவன் தான் பாவங்கள் செய்ததாக கனவு கண்டிருக்கலாம். மற்றொருவன் கொலை செய்வதாகக் கனவு கண்டிருக்கலாம்.

இன்னும் ஒருவன் தான் தூயவனாக வாழ்ந்ததாக கனவு கண்டிருக்கலாம். தூக்கம் கலைந்தவுடன், காலையில் விழிப்பு வந்தவுடன் எல்லாரும் ஒன்றுதான்.

கனவில் கொலை செய்தவனுக்குத் தண்டனையும் கிடைக்கப்போவதில்லை. தூய்மையான வாழ்க்கைக்குப் பரிசும் கிடைக்கப்போவதில்லை.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். மனதை கைவிட்டால் போதும். நீங்களும் சத்தியத்தை அடையலாம்..

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...