Followers

Sunday 12 September 2021

போதை வந்தபோது புத்தியில்லையே!

போதை வந்தபோது புத்தியில்லையே!  பேசாலைதாஸ்


முல்லா நஸ்ருதீன் முதல் குழந்தைக்குத் தகப்பனானார். அவர் உடனே இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட விரும்பித் தனது நண்பருக்கு அழைப்பு அனுப்பினார்.
உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாட உங்களுக்குத் தெரிந்த ஒரே வழி, "சுயஉணர்வை இழந்து  விடுவதுதான்"!! இது ஒரு விநோதமான செயல். இது பற்றி சிவன், மகாவீரர், புத்தர் போன்றவர்கள் சொன்னது என்ன? 
"வாழ்வில் ஆனந்தம் என்ற ஒன்று உண்டு என்றால் அது விழிப்புணர்வு பெறுவதுதான்", என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அறிந்த ஒரே இன்பம் "சுயஉணர்வை இழப்பதுதான்"!! நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்; அல்லது என் கருத்து சரியாக இருக்கலாம். இருவரின் அபிப்பிராயமும் ஒரே நேரத்தில் சரியாக இருந்துவிட இயலாது. 
தனது குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஒரு மதுக்கடைக்கு முல்லா சென்றார். தனது நெடுநாள் கனவு நிறைவேறிவிட்ட - பிள்ளை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஆசைப்பட்டார். 
நண்பருடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தார். குடிபோதையுடன் மருத்துவமனைக்குச் சென்ற முல்லா ஜன்னல் வழியே தனது குழந்தையைப் பார்த்தார். உடனே அழத் தொடங்கிவிட்டார். 
ஏன் அழுகிறீர்கள் என்று நண்பர் கேட்டதற்கு இப்படிப் பதிலளித்தார். "முதல் விஷயம் அந்த குழந்தை என் சாயலில் இல்லை!" அப்போது முல்லா குடிபோதையில் இருந்தார். தனது முகத்தை அவரால் நினைவுபடுத்திக் கொள்ள முடியாத சமயம் அது. 
ஆனால் அவர் அந்த குழந்தை 
தன் சாயலில் இல்லை என்று அவசரப்பட்டுப் பேசுகிறார். மேலும் அவர் தொடர்ந்து பேசினார். "அதுமட்டுமன்றி குழந்தை மிகவும் சிறியதாகவும் தென்படுகிறது! இந்த சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்? முதலில் அவன் பிழைப்பானா என்றே தெரியவில்லையே!"...
முல்லாவின் நண்பர் அவரைத் தேற்றினார். "கவலைப்படாதீர்கள். நான் பிறந்தபோது வெறும் எட்டுப் பவுண்ட் எடையுடன்தான் இருந்தேன்." என்றார். 
"நீங்கள் தப்பிப் பிழைத்து விட்டீர்களா?" என்று கேட்டார் முல்லா. 
நண்பர் ஒருகணம் யோசித்தார். அவரும் நல்ல போதையில் இருந்தார். "நான் பிழைத்தேனா என்னவோ, சரியாகத் தெரியவில்லை" என்று பதிலளித்தார். 
நீங்கள் விழிப்புணர்வு இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்வில் நீங்கள் பார்க்கும், உணரும் எல்லா விஷயங்களும் விழிப்புணர்வற்ற மனதால் ஆட்டி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியும் மங்கலாகத் தெரிகின்றன. எதையும் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. உங்களுக்கு ஒருவிதமான இன்பம் மட்டுமே தெரியும். தன்னை மறப்பதுதான் அந்த இன்பம். 
திரைப்படம் பார்ப்பதில் மூழ்கி உங்களை மறக்கிறீர்கள் அல்லது இசையில் மூழ்குகிறீர்கள் அல்லது குடி போதையில் உங்களை மறக்கடிக்கிறீர்கள் அல்லது காமத்தில் ஆழ்ந்து போகிறீர்கள். எந்த வகையில் உங்களால் முடியுமோ அந்த வகையில் உங்களை மறக்கிறீர்கள். அதை பெரியதொரு மகிழ்ச்சி என்று கொண்டாடுகிறீர்கள். 
தன்னிலை மறந்து போவதை மகிழ்ச்சி என்கிறீர்கள் அல்லவா? அதற்கு காரணம் இருக்கிறது. உங்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும்போது வாழ்வில் துன்பம் தவிர வேறு எதுவுமே இல்லை என்று நினைத்துவிடுகிறீர்கள். 
சிறிய அளவில் விழிப்புணர்வு இருப்பதால் உங்களுக்கு உடனடியாக வலி, துயரம், அசிங்கம் போன்றவை மட்டுமே தென்படுகின்றன. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். நான் அவரிடம் "உங்களுக்கு என்ன ஆயிற்று? எதனால் திருமணத்தை தவிர்த்தீர்கள்?" என்று கேட்டேன். 
அவர் அதற்கு "அது பெரிய பிரச்சினை. நான் குடிபோதையில் இருக்கும்போது மட்டும்தான் எனது காதலி அழகானவளாகத் தோன்றுவாள்! குடிபோதையில் இருக்கும்போது அவளை மணந்து கொள்ளச் சம்மதிப்பேன். ஆனால் அவள் மறுத்து விடுவாள். 
நான் தெளிவாக இருக்கும்போது அவள் என்னை மணந்துகொள்ளச் சம்மதிப்பாள். நான் சம்மதம் தர மாட்டேன். எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை. திருமணம் நின்றுவிட்டது" என்று விளக்கம் அளித்தார். 
நீங்கள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு பார்த்தால் அசிங்கம், துயரம் தவிர வேறு எதுவும் தட்டுப்படுவதில்லை. 
விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கும்போது சகலமும் அழகாகத் தோன்றுகின்றன. இது விழிப்புணர்வு பற்றிப் புரிந்து கொள்ளத் தடையாக மாறுகிறது. விழிப்புணர்வு என்பது சாத்தியமில்லை என்று நினைத்து விடுகிறீர்கள். 
ஆகவே நீங்கள் துயரங்களை அனுபவிப்பது அவசியமாகிவிடுகிறது. இதை கடுமையான விரத அனுஷ்டானங்கள் என்கிறோம். ஒருவர் விழிப்புணர்வு பெறுவதற்கு தயாராகும் சமயத்தில் அவர் வலிகளைத் தாங்கியாக வேண்டும். 
கடந்துபோன பல பிறவிகளில் நீங்கள் துயரங்களை மட்டுமே உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அந்த வலிகளை உங்களைத் தவிர வேறு யார், ஏற்றுத் தாங்கிக் கொள்வார்கள்? இதையே கர்மவினைக் கோட்பாடு என்று அழைக்கிறார்கள்          

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...