பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

வில் அம்பு

 ஒரு வேட்டை தொழில் செய்யும் அப்பா  

வில் அம்புகளை எடுத்து 

மகனையும் வேட்டைக்கு அழைத்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்.

வேட்டை என்றால் கண்ணில் படும் உயிர்களை எல்லாம் கொல்வது என்ற கிளுகிளுப்பு ஆளாகி இருந்தான் மகன்.

“அப்பா இதோ பாருங்க ஒரு குட்டிப்பல்லி. இத நான் மிதித்து விடவா”

“ச்சே ச்சே பாவம் அது குஞ்சுப்பா. சின்னது கொல்லக் கூடாது”

“அப்பா இதோ ஒரு சிலந்தி பாருங்க. இத நசுக்கிரவா”

“நல்லா பாரு இது குட்டி சிலந்தி. சிலந்தியோட பாப்பா. அத அழிக்க கூடாது”

வெளியே வந்தார்கள். காட்டை நோக்கி நடந்தார்கள்.

“அப்பா இங்க ஒரு நாகப்பாம்பு குஞ்சு ரெண்டு இருக்குது அது மேல கல்லை போடவா”

“வேண்டாம் அது குஞ்சுங்க. அதுல கல்லைப் போடக் கூடாது”

“அப்பா அதோ ஒரு கட்டுவீரியன் குஞ்சு இருக்குது அதையாவது அழிக்கவா. அது ரொம்ப விஷம்தானே”

“ஆனா குட்டியாச்சே. பாப்பாச்சே. அதை கொல்ல கூடாது”

“அப்பா அதோ ஒரு பறவை குஞ்சுகளுக்கு உணவு கொடுக்குது. மரத்து மேல ஏறி கூட்டை கலைச்சி குஞ்சுகளை பிடிக்கவா. பொரிச்சா ருசியா இருக்கும்”

“அடடா அது குஞ்சு ஆச்சே. பிறந்ததுங்க இருக்கும். அது கூட்டை கெடுக்க கூடாது”

“அதோ அப்பா அதோ மூணு மான்குட்டி நிக்குது. இளங்கறியா இருக்கும். எளிதா பிடிச்சிரலாம்”

“மகனே அது குட்டிடா. அத எப்படி அழிக்க முடியும்”

இப்போது மகன் சோர்வுற்றான். 

“என்னப்பா எதையெடுத்தாலும் குஞ்சு, குட்டி அழிக்காதே என்று சொல்றீங்க. அப்ப உங்க சட்டப்படி குஞ்சுகளை குட்டிகளை அழிக்க கூடாதா”

“அப்படி நான் சொல்லலியே மகனே. அழிக்கலாமே”

மகன் துள்ளி குதித்தான். 

“சொல்லுங்கப்பா நா எந்த குஞ்சை எந்த குட்டியை அழிக்கலாம்”

அப்பா சிரித்தார்.

அவர்கள் வேட்டைக்கு அன்று எதுவும் கிடைக்கவில்லை. மாலையில் சோர்வாக ஆற்றில் மீன் பிடித்து வீடு வந்தார்கள்.

அவர்கள் பக்கத்து குடிலின் வெளியே மான் தோல் இருந்தது. 

இவர்களைப் பார்த்ததும் பக்கத்து குடில் வேடன் வந்தார். தன் மகனுடன் வந்தார்.

“இந்தாங்க மான் மாமிசம். இன்று இந்த மானை என் மகனே வேட்டையாடினான். அவ்வளவு திறமை அவனுக்கு”என்றார்.

இதைக் கேட்ட மீன் பிடித்த வேடன் பக்கத்து குடில் மகனை மனமார பாராட்டினார். 

தன் அப்பா பக்கத்து குடிலில் இருக்கும் தன் வயதை ஒத்த இன்னொரு சிறுவனை பாராட்டுவது கண்டு இவன் மனம் குமைந்தான். இவனால் அதை ஏற்கமுடியவில்லை.

அப்படியே திணறி சுவர் பார்த்து நின்றிருந்தான்.

அப்பா அவன் தோளை தொட்டார்.

“ஏன் உன் முகம் வாடி இருக்கிறது”

“இல்லையே நான் சரியாகத்தான் இருக்கிறேன்”

“உன் நண்பன் வேட்டையில் சாதித்தது. நான் அவனை மனம் விட்டு பாராட்டியது உனக்கு ஒருமாதிரி இருக்கிறதா. உண்மையை சொல் சில உணர்வுகளை வாய்விட்டு சொன்னால் சரியாகிவிடும்.

“ஆம்” என்று மகன் தலையசைத்தான். 

”இன்று காலையில் இருந்து ஒவ்வொரு குட்டியாக, குஞ்சியாக நீ கொன்று விடவா கொன்றுவிடவா என்று கேட்டாய். நான் கொடிய விஷமாக மாறக்கூடிய குட்டி நாகப்பாம்பை கூட தேவையில்லாமல் அழிக்காதே  என்றே சொன்னேன். 

ஆனால் இப்போது சொல்கிறேன் இந்த குட்டியை,  அழித்து விடு”

“எதை அப்பா” 

உன் மனதில் இப்போது பிறந்திருக்கும் பொறாமை என்ற குட்டியை உடனே கொன்று விடு. ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிடு. அதனால் பிறந்த காழ்புணர்ச்சி என்ற குஞ்சை உடனே நசுக்கி விடு. ஈவு இரக்கம் பார்க்காதே. அம்மிருகங்கள் வளர்ந்தால் உன்னை அழித்து விடும்”

இப்போது மகனுக்கு குஞ்சிலே அழிக்க வேண்டிய பறவை எது. குட்டியிலேயே அழிக்க வேண்டிய மிருகம் எது என்று நன்றாக புரிந்து விட்டது.

வியர்வை வடியும் அப்பாவை அணைத்துக் கொண்டான்.

“அப்பா நான்  என் நண்பனை பாராட்டி வருகிறேன்” என்று பக்கத்து குடிலை நோக்கி சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...