பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

அப்பா என்ற மனிதர்

 அப்பா என்ற மனிதர்

"இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 30 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!"

இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் .

அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்...? மனம் துணுக்குற்றாள் அம்மா .

"என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!"

"அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தானே வாங்கி தந்தாரு..!

"அப்பாவோட வருமானம் அவ்வளவுதான்டா இருந்துச்சு..!

" அதெல்லாம் இல்ல.. போன் வாங்கி தந்தா பிள்ளை படிப்பு கெட்டுடுமோன்னு நினைச்சிருப்பார்..!"

"அது சரிதானே.. நீயும் மூன்றாவது செமஸ்டர் மார்க் குறைவாகத்தானே எடுத்தே..!

" மார்க் குறைவாக எடுத்தால் பொறுமையா சொல்லலாம் இல்ல..? எதுக்கு போனை பிடுங்கி உன் கையிலே கொடுத்து, "பத்திரமா வச்சிரு.. அவன் காலேஜ் முடிச்ச அப்புறம் கொடுத்தா போதும்.. என்று சொன்னாராம்..?"

"அப்பவாச்சும் நீ படிப்பில கவனம் செலுத்துவாய் என்றுதானேடா.. மகனே..!

" நான் தான் இனிமே ஒழுங்கா படிக்கிறேன் என்று சொன்னேன்ல.. அப்புறம் எதுக்கு காலேஜ் வந்து என் கிளாஸ் டீச்சர் கிட்ட விசாரிச்சாரு.. எனக்கு எவ்வளவு கேவலமா இருந்துச்சு தெரியுமா..?"

" எப்பவும் நான் உன்னை கவனிச்சுக்கிட்டே இருக்கேன் என்ற பயத்தை உனக்கு ஏற்படுத்துவதற்காகத் தான் அப்பப்போ காலேஜ் வந்து போறேன்னு அவரே சொல்லி இருக்காரு..!"

" அதெல்லாம் கூட பரவாயில்லம்மா.. மூணாவது செமஸ்டெர்ல பெயிலா கூட ஆகல.. பர்சன்டேஜ் குறைஞ்சிடுச்சுன்னு நீ, தங்கச்சி, உன் அண்ணன் பசங்க எல்லாரும் வீட்ல இருக்கும்போதே சேர்ல உட்கார்ந்து இருந்த என்னை இழுத்துப் போட்டு நங்குன்னு மிதிச்சாரு.. எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்..? அன்னைக்கு எடுத்தேன் சபதம்..இவர் முன்னாலே ஒரு கவுரவமான மனுசனா வாழ்ந்து காட்டணும்னு. காலேஜ்ல நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் பண்ணிய இரண்டு பேரில் நானும் ஒருத்தன். இப்பொழுது வேலைக்குச் சேர்ந்து இது முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு வந்துட்டேன்.. இந்த பணத்தை கொண்டு போய் அவர்கிட்ட காட்டி இனிமேலாவது யாரையும் ஏளனமாக நினைக்காதீங்க.. என்று சொல்லு..போ..!"

"ஏம்பா..இப்போ நீ பேசும்போது இடையில் ஏதோ சொன்னியே சபதம் எடுத்தேன் என்று.. அந்த வைராக்கியத்தை உனக்குள்ள ஏற்படுத்தணும்னு தான்டா அவர் தன்னுடைய பாசத்தை எல்லாம் மறைத்து கண்டிப்பாக நடந்து கொண்டார்..! அம்மாக்கள் கூட பிள்ளைகள் நம்மை நாளைக்குக் காப்பாத்தணும் என்ற எதிர்பார்ப்போடு தான்டா இருப்பாங்க.. அப்பாக்கள் அப்படி இல்லையடா..மகனே.." நம்மை விட நம்ம பிள்ளை நல்லா இருந்தா போதும்னு" தான் நினைப்பாங்க..! அம்மா உன் உடம்பை தான் வளர்ப்பா.. அப்பா தான் உன் வாழ்க்கையைப் பற்றி நினைப்பார்..!"

" நீ சரியான ஜால்ரா.. எப்ப பாரு அவருக்கு சப்போரட்டாத்தான் வருவ..!"

" இந்த வார்த்தையை ஒரு 15 வருடம் கழித்து சொல்கிறாயா என்று பார்ப்போம்..!"

" ஏன்.. சொல்வேனே..! உன் வீட்டுக்காரரை நீதான் மெச்சுக்கணும்..!"

"உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா அப்போ நீயும் சில பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பே..!பிள்ளைகள் குறித்தான அப்பாக்களின் எண்ணங்கள் உனக்கு புரிந்து போயிருக்கும்..!"

அப்போது அப்பா வீட்டிற்குள் நுழைகிறார்.

" பாரு அப்பாவே வந்துட்டாரு ..

அந்தப் பணத்தை அவர்கிட்ட நீயே கொடு என்ன சொல்கிறார் என்று பாரு..!"

"என்ன சொல்லப் போறாரு.. "மாசாமாசம் இதே மாதிரி நிறைய சம்பாதிச்சு பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்கணும்னு.." கட்டளை போடப் போறாரு ..!

அப்பாஅருகில் வந்து இருந்தார்..!

" அப்பா..! "

"இவனா அழைக்கிறான் என்னைய..?" அதிசயமாக ஏறிட்டுப் பார்த்தார் மகனை. அவர் கண்களில் சிறு மின்னல் கீற்று.. முகத்தில் சில வினாடி பிரகாசம்..!

"இந்தாங்க முதல் மாத சம்பளம்..!"

"எவ்வளவு..?"

"முப்பதாயிரம்.. ட்ரெய்னிங் பீரியட் இரண்டு வருஷம் முடிஞ்சா லட்சத்துக்கு மேலே வரும்..!"

"நல்லது.. அதை நீயே வச்சுக்கோ ..!"

"ஏன் அப்படி சொல்றீங்க..?"

" ஆமா தம்பி.. நான் கூட சின்னச் சின்ன அனாவசிய செலவு செய்வேன்.. நீ ரொம்ப சிக்கனமாக இருக்கிறத கவனிச்சிருக்கேன்..! அப்பா உங்களுக்கு எந்த சொத்தம் சேர்த்து வைக்கல.. படிக்க வச்சிட்டேன்.. அதுதான் நான் உனக்கு தர சொத்து. உன் பணத்தை நீயே வச்சுக்கிட்டு நீ என்னென்ன ஆசைப்பட்டாயோ அதற்கு செலவு பண்ணிக்கோ.. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கஞ்சி ஊத்துவேன்.. அதுக்கப்புறம் நீ அவங்களை பொறுப்பா பாத்துக்கப்பா..!"

" நான் பார்த்துப்பேன்பா.. நீங்க கண்கலங்காதிங்கப்பா..!"

" நான் அதற்கு கண் கலங்கவில்லை.. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் நீ என்னை "அப்பா" ன்னு கூப்பிட்டுப் பேசினல்ல..!"

மகன் கண்கள் கலங்க அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான்..!

"அப்பா.. இத்தனை நாளா உங்களை தப்பாப் புரிஞ்சிட்டேம்பா..!

மகன் பற்றி இருந்த அப்பாவின் கைகளில் வயோதிகத்தின் சிறு நடுக்கம்..

மகனின் கைகளிலோ குற்றம் இழைத்தப் பெரு நடுக்கம் ...!

அப்பாவின் விழிகளில் கசிந்த கண்ணீர் ஆனந்தக் கரையாடிக்கொண்டிருந்தது...

மகனின் கண்களில் வழிந்த கண்ணீர் குற்ற உணர்வைக் கரைத்தோடிக் கொண்டிருந்தது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...