ஒரு கையின் ஓசை!!!பேசாலைதாஸ்
ஒர் ஜென் மடாலயத்தில் ஒரு பன்னிரண்டு வயதான டோயோ என்னும் சிறுவன் தங்கி வாழ்ந்து வந்தான். அவன் ஒவ்வொரு நாளும் மக்கள் குருவிடம் உதவி, வழிகாட்டல் முறைகளை கேட்டு செல்வதை கவனித்துக் கொண்டிருந்தான். இது போகப்போக அவனை மிகவும் ஈர்த்தது. ஒரு நாள் குரு அதேப்போல் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவனும் குருவிடம் கேட்பதற்காக, குருவை தன் மீது பார்வை செலுத்த, அவர் முன் மிகவும் மரியாதையுடன் ஏழு முறை தலைகுனிந்து குருவை வணங்கினான். அவனது செயலைக் கண்டு மாஸ்டர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
பின் குரு அவனை அழைத்து டோயோ "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அதற்கு அவன் குருவிடம் "நான் உண்மையை தேடி வந்துள்ளேன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
குருவோ இவன் ஏதோ விளையாட்டாக கேட்கிறான் என்று எண்ணி, அவனிடம் "இரண்டு கைகளை கொண்டு ஒரு ஒலியை உருவாக்க முடியும். ஆனால் ஒரு கை கொண்டு ஒலி எழுப்புவது எப்படி என்பதை கண்டறிந்து என்னிடம் சொல்" என்றார்.
டோயோவும் மரியாதையுடன் மீண்டும் ஏழு முறை தலைகுனிந்து வணங்கிவிட்டு, அவனுடைய அறைக்கு சென்று, தியானம் செய்ய ஆரம்பித்தான். பின்பு மூன்று நாட்கள் கழித்து "நீர் துளிகள் எழுப்பும் ஒலியா?" என்றான். குருவோ "இல்லை" என்றார்.
பின் மரத்தின் அடியில் சென்று தியானம் செய்ய ஆரம்பித்தான். பிறகு மூன்று மாதம் கழித்து, "மரங்களில் வெட்டுக்கிளி எழுப்பும் ஒலியா? காற்றின் ஒலியா?" என்றான். குருவோ "அதுவும் இல்லை. சரியாக தியானம் செய்!" என்று சொன்னார்.
ஒரு வருடம் ஆனப் பின்னரும் அவன் வராததால், குருவே அவனை தேடி வந்தார். அவனோ ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து தியானத்தில் மூழ்கி இருந்தான். அப்போது அவன் உடலில் சில தெரியாத அமைதியான அதிர்வுறும் ஒலியினால், அவனது உடல் மிகவும் மென்மையான வெறும் காற்று நகருவது போல் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மாஸ்டர், டோயோவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆகவே அவர் அங்கேயே காத்திருந்தார்.
பல மணி மணி நேரம் கடந்துவிட்டது. சூரியனோ மறையும் நிலையில் இருந்தபோது மாஸ்டர் "டோயோ..." என்று அழைக்க, அவன் கண்களை திறந்து "இது தான் அந்த விடை" என்றான்
குருவும் "ஆம், நீ அதை அடைந்து விட்டாய்!" என்றார்
இந்த ஓம் என்ற ஒலி தான் அது. அது தியானம் செய்யும் போது அனைத்து ஒலியும் மனதில் இருந்து மறைந்து, உங்களுக்கு ஒரு குரல் கேட்கும்.
அந்த ஒலி தியானத்தின் முழுமையை அடையும் பொழுதே கேட்கும். அதனால் ஓம் என்ற இசை நம்முள் உணரப்படும். இதைதான் உபநிடதங்கள் ஓம் என்ற ஒலியை ஒரு முழு குறியீடாக அமைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக