Followers

Thursday 19 January 2023

மரணித்த பின் வரும் மனித நேயம்

 மரணித்த பின் வரும் மனித நேயம்  பேசாலைதாஸ் 


வீட்டு வாடகையை என்னால் கட்டமுடியவில்லை. எனது வாடகை வீட்டில் இருந்து உரிமையாளரால் நான் வெளியேற்றப்படவிருந்தேன். முகநூலில் உதவி கேட்டு பதிவிட்டிருந்தேன். கிடைத்ததெல்லாம் லைக்குகள் மாத்திரமே.

எனது  நட்புப் பட்டியலில் இருக்கும் 250 நண்பர்களுக்கு 30, 000 ரூபாய் கேட்டு தனிப்பட்ட செய்திகளை அனுப்பினேன்.பத்து பேர் மாத்திரம் பதிலளித்தார்கள். அதில் ஆறு பேர் உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்கள். மீதி நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உதவி செய்தார்.ஏனையோர் எல்லோரும் சாக்குப் போக்குச் சொன்னார்கள். எனது தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதில் சொல்லவில்லை.

இறுதியில் நான் எனது வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.தூங்குவதற்குக் கூட எனக்கு ஒரு இடம் இருக்கவில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் நடந்து கொண்டிருந்த போது எனது பையை ஒரு திருடன் பிடுங்கிக் கொண்டு ஓடினான்.ஓடிய வேகத்தில் திருடன் காரில் அடிபட்டு இறந்து விட்டான்.

அடுத்த நாள்,

செய்தி வேகமாகப் பரவியது. திருடன் இறந்ததை நான் இறந்ததாக மக்கள் எண்ணிவிட்டார்கள். சுமார் 2500 பேர் எனது முக நூலில் பக்கத்தில் எனக்கு அனுதாபம் தெரிவித்து எழுதினார்கள். என்னை அவர்களுக்கு எப்படி அறிமுகமானது, நான் எவ்வளவு உன்னதமான பிறவி என்றெல்லாம் எழுதினார்கள்.

எனது ‘விசுவாசமான நண்பர்கள்’ என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சுமார் மூன்று லட்சம் பணம் சேர்த்தார்கள். எனது இறுதிச் சடங்கன்று 100 ஏழைகளுக்கு விருந்தளிப்பதாக அறிவித்தார்கள்.

என்னோடு வேலை செய்தவர்கள் எனது சவப்பெட்டிக்கும், வருகையாளர்களுக்கான கதிரைகளுக்கும், என்னைச் சுற்றும் ஆடைகளுக்கும் ஒரு லட்சம் பணம் சேர்த்தார்கள்.

30 000 பெறுமதியான சவப்பெட்டியில் வைத்து நான் புதைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. அந்தப் பணம்தான் நான் வாழத் தேவையாக இருந்த தொகை.

எனது உறவினர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்படிச் சந்திப்பது அபூர்வமாக இருந்தது. அதில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றரை லட்சம் பங்களித்தார்கள்.

எனது மரணச் சடங்களில் ஒவ்வொருவரும் பேச விரும்பினார்கள். என்னைத் தெரியாதவர்கள் எல்லாம் நான் எத்தனை சிறந்த மனிதன் என்று பேசினார்கள். எனக்கு உண்மையாகவே உதவி செய்த நண்பர்களுக்கு என்னைப் பற்றிப் பேச வாய்ப்புக் கிட்டவில்லை.எனது மரணச் சடங்கில் பங்குபற்றக் கிடைக்காதவர்கள் கூட நான் எவ்வளவு திறமை படைத்தவன் என்றெல்லாம் பேசி, எழுதினார்கள்.

நான் இன்னும் தூங்குவதற்கு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.

திடீரென நான் அவர்கள் முன் தோன்றினால் என்னைப் பேய் என்று நினைத்து ஓடிவிடுவார்கள்.

தத்துவம் என்னவென்றால் ஒருவன் வாழும் போது அவனை நேசிப்பதைவிட அவன் மரணித்த பின்னர்தான் அவனை நேசிக்கிறோம்..!


No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...