Followers

Tuesday 22 February 2022

மரச் சடலம்

 மரச் சடலம்பேசாலைதாஸ் 



வாழ முடியாதுன்னா வாழ முடியாதுதான் கத்திக்கொண்டு இருந்தாள் நதியா. 

ஏய் வாயை மூடுடி சத்தம் போட்டு ஊரை கூட்டாதே. 

அப்படித்தான் சத்தம் போடுவேன். அந்த இழவு பிடித்தவனுக்கு என்னை பிடிச்சு கொடுத்தீர்களே அதுக்கு இன்னும் கத்துவேன் இதுக்கு மேலயும் கத்துவேன். 

அடச்சீ நீ போய் என் வயதிலேயே பிறந்தாயே

கதவை வேகமாக சாத்தி கொண்டு வெளியே உள்ள ஹாலுக்கு வந்தார்கள் . நதியாவின் தாயும் தந்தையும். 

பெற்றவர்களின் முகத்தைப் பார்த்தும் பார்க்காமலும் தின்றும் திண்ணாமலும் ஒருவாரம் ஓடி போனது. 

இந்த ஒரு வாரமாக போனில் பேசிய மாப்பிள்ளையிடம் சமாதானம் தான் சொல்ல முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 

என்ன மாமா இது ? என்ன நடந்ததுன்னு இவ இப்படி உங்க வீட்ல வந்து உட்காந்துகிட்டு இருக்கா? பொண்ணா பொறந்தா அவங்களுக்குன்னு சில கடமைகள் இருக்குல்ல. 

சரிதான் மாப்பிள்ளை. இந்த வயசு பிள்ளைங்க எல்லோரும் இப்படித்தான் இருக்காங்க மாப்பிள்ளை . கல்வி கொடுத்த தவறா ?சுயசிந்தனையின்வீச்சா ?சுயமரியாதை கொடுத்த சுதந்திரமா ? புரியல. கொஞ்சம் பொருங்க மாப்பிள்ளை . இப்படித்தான் இந்த வாரம் சாக்குபோக்குடன் போனது. 

அன்றிரவு சாப்பிட்டுவிட்டு மகளிடம் பேச்சுக் கொடுத்தார் சிவராமன். என்னம்மா என்ன ஆச்சுன்னு தெரியலை. ஒண்ணுமே சொல்லமாட்டேங்குற, மாப்பிள்ளைக்கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லுறே. கேட்டா விவரத்தை கூட சொல்லாமே இந்த ஒரு வாரமா காட்டுக் கூச்சல் போடறே. 

அப்பா நான் இங்கே இருக்கட்டுமா ? வேண்டாமா? அத மட்டும் சொல்லுங்க போதும் . நான் இனிமே அங்க போய் வாழ மாட்டேன். டைவர்ஸ் வேணா கொடுத்துடலாம். 

எவ்வளவோ பேச முயற்சித்தோம் முடியாமல் போனது அவளது பிடிவாதத்தால். 

அறையில் எவ்வளவு நாட்கள்தான் தனியாக நேரத்தை போக்குவது.

புத்தக அலமாரியில் புத்தகங்களை தேடினாள். 

மரச் சடலம் என்ற பெயரில் ஒரு புத்தகம் கிடைத்தது. இது என்ன புதிய சொல்லாடலாக இருக்கிறதே என எடுத்து படிக்க ஆரம்பித்தாள் நதியா. 

புத்தகத்தை கையில் எடுத்து கைக்கு வந்த பக்கத்தை பிரித்து படித்தாள். 

பெண்கள் வெறும் மரங்கள் அல்ல உணர்வும் உணர்ச்சியும் ஆர்வமும் ஆசையும் உள்ளவர்கள்தான் . ஆனால் அவர்கள் தங்களுக்காக என்றுமே வாழ்ந்ததில்லை . கிமு 3000 முதலே தங்கள் குழுக்களுக்கு தலைமை தாங்கியது பெண்கள்தான் . அத்தனை பொறுப்புகளையும் அவர்களே சுமந்தார்கள். 

இந்த காப்பிய குடி . அம்மா டொக்கென காபியை வைத்து விட்டுப் போனாள். 

நதியாவின் மனம் பாரமாக இருந்தது . படிப்பதில் கவனம் செல்லவில்லை. என்றாலும் மற்ற பக்கங்களை திருப்பிக்கொண்டே வந்தாள். கை ஒரு பக்கத்தை நிறுத்தியது. பார்வையை படரவிட்டாள் எழுத்துக்களில். 

80 /90 ஆண்டுகளுக்கு முன்பு கூட பெண்களின் நிலை மிக மோசமாகவே இருந்தது . தனிக்குடித்தனம் என்றால் என்னவென்றே தெரியாது. மாமனார் மாமியார் நாத்தனார் தம்பி தங்கை கொழுந்தியாள் அவர்களின் பிள்ளைகள் என 10 பேருக்கு மேல் ஒன்றாக வாழ்வார்கள். 

தனித்தனி அறைகளில் அட்டாச்டு பாத்ரூம் தனிமை என்பதெல்லாம் எதுவுமே தெரியாது . 

காலையில் கஞ்சி குடித்துவிட்டு கலப்பையை எடுத்துக்கொண்டு வயலுக்கு கணவன் போகவும் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து கொண்டு கையில் ஒரு குழந்தையை இழுத்துக்கொண்டு வயிற்றில் ஒன்றை சுமந்துகொண்டு அவளும் பின்னோடு போவாள் . களை எடுப்பாள் கதிர் அறுப்பாள் கதறி அழும் குழந்தைக்கு பால் கொடுப்பாள். 

ஆதவனின் அஸ்தமனத்திற்கு வீடு வந்து அடுப்படிக்குள் நுழைந்து அத்துணை பேருக்கும் அண்டாவில் சமைத்து சாப்பிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் சாய்ந்து விடுவார்கள். 

கணவனோடு மனைவி கொஞ்சியது இல்லை . கருத்துக்கள் பரிமாற்றம் இல்லை . காமத்தை தீர்க்கவே கடும் போராட்டம். கடமையே என்று ஒரு வருடம் ஒரு பிள்ளை பிறக்கும். அத்தனையும் தாங்குவாள் . 

அதுதான் பெண்மை என்று நினைத்தாள். 

இது என் குடும்பம். இவர் என் கணவர் . இவர்கள் என் வாரிசுகள் . என் குலம் தழைக்க நானே காரணம் . இவையெல்லாம் நான் தாங்கிய ஆக வேண்டும் என்ற மனப்பாங்கு பெண்மையின் அடையாளம். இதுவே பெண்ணடிமை என்று பின்னாளில் பேசப்பட்டது. 

யாரும் அடிமையாக வாழ்ந்து விடவில்லை கட்டுப்பாடாக வாழ்ந்தார்கள் .

வீடுகளில் கருத்துச் சுதந்திரம் இருந்தது. சபைகளில் இருக்காது. சபைக்கு முன்னால் குடும்பப் பெண் தன் குடும்பத்தின் கவுரவத்தை காப்பவளாக ஏன் குடும்பத்தின் பெண் தெய்வமாகவே பார்க்கப்பட்டாள். 

செடிகள் வளர்ந்து மரமாகி பருவகாலத்தில் பூ பூத்து காய் காய்த்து பழம் கொடுத்து தன் இனத்தை உலகத்தில் பரப்பி பல ஜீவராசிகளுக்கு இருக்க இடமும் நிழலும் உணவும் கொடுத்து, வெயிலிலும் மழையிலும் தன்னை தாங்கி வளர்ந்து நிற்பதால் தான் மரத்திற்கு பெருமை. 

அதனால்தான் மரமும் தெய்வமாக வணங்கப்படுகிறது. 

வெறும் சடலமாகக் இருந்துவிட்டால் மரம் எந்தவித செயல்பாடும் இல்லாமல் மொட்டையாய் பட்டு போனதாய் நின்றுவிட்டால், அந்த மரச்சடலத்தை அழகாக வெட்டி தீ வைத்து கொளுத்தி விடுவார்கள். அது விரகாக மட்டுமே பயன்படும். 

பெண்களும் அப்படித்தான் பூத்துக் குலுங்கி ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு காரணமானவளாக இருந்தால்தான் வணங்கப்படுபவளாக இருக்கிறாள் . 

இல்லையேல் மொட்டையாய் நிற்கிறாள் வாழாவெட்டியாய் வந்தாள். என்றெல்லாம் சொல்லப்படும் போது அவளது மனது தீயில்வேகத்தான் செய்கிறது. 

பூத்துக்குலுங்கினால் தான் பெண்மைக்கு பயன் இல்லையெனில் அவளும் ஒரு மரச் சடலம் தான். 

படித்துக்கொண்டிருந்த நதியாவின் கண்களில் கண்ணீர் நிரம்பி கன்னங்களில் வழிந்தது.

மறுநாள் காலை தன் உடைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். 

அப்பாஅம்மா என அழைத்தவளை ஆச்சரியமாக பார்த்தார்கள் பெற்றோர்கள். 

என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா.

ஒரு சின்ன பிரச்சினைக்கு கோபப்பட்டு வந்துட்டேன் . அப்பா இப்ப இருக்கிற எங்களைப்போல பெண்களுக்கு இருக்கிற வசதி வாய்ப்பு அனுபவ புத்தி அறிவு எதுவுமே என்னோட பாட்டி பூட்டிக்கு இருந்ததில்லை. ஆனால் அவங்க எவ்வளவு பொறுமையா கூட்டு குடும்பத்தை நடத்தி இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.

அப்பா நான் இனிமே பூத்துக்குலுங்கும் பொண்ணா இருப்பேனே தவிர மரச்சடலமா இருக்கமாட்டேம்ப்பா என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள். 

என்ன நடந்தது என்று புரியாவிட்டாலும் மகிழ்வோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் நதியாவின் பெற்றோர்கள்.

சிறுகதை எழுதியவர் : ------------------சு.இராமஜோதி

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...