Followers

Friday, 10 December 2021

  நான் எல்லை இல்லாதவன். பேசாலைதாஸ்

ஒர துறவி, மிகவும் எளிமையாகவும், கள்ளக் கபடமற்ற தன்மையுடனும் வாழ்ந்து வருவதை, அந்நாட்டு மன்னன் அறிந்தான். அவரது வாழ்க்கையில் ஏதேனும் ஒளிவு மறைவு இருக்குமோ என்று கருதிய மன்னன்,  தனது உளவா ளிகளை அவரைப்பற்றி விசாரித்து வரச் செய்தான். உளவாளிகள், துறவி யைப்பற்றி தீர விசாரித்து,  ' இவரது வாழ்க்கையில் எவ்வித மர்மமும் கிடையாது. உண்மையிலேயே அவர் ஒருத் துறவி தான் ' என்று மன்னனிடம் வந்து சொன்னார்கள். அந்தத் துறவி மீதிருந்த மன்னனின் மதிப்பு மேலும் உயர்ந்தது.  ஒரு நாள் துறவியிடம், மன்னன் சென்றான்.  அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினான். ' ஐயா, நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைத்துச் போக வந்திருக்கிறேன்.  இனி ஏன் நீங்கள் இங்கே தனியே வாழ வேண்டும் ? என்றான்  மன்னன்.

' அவர் துறவி என்பதால், தனது அழைப்பை ஏற்க மறுத்து விடுவார் ' என்று நினைத்தான் மன்னன். மன்னனின் அழைப்பைக் கேட்டதும் அந்தத் துறவி, ' நல்லது. உன்  இரதத்தைக் கொண்டுவா....போகலாம் ' என்றார். மன்னன் அவர் சொன்னதைக் கேட்டதும் சற்று அதர்ச்சியுற்றான். இந்தத் துறவி, ஓர் ஏமாற்று க்காரனாக, மோசக்காரனாக இருப்பாரோ என்று எண்ணினான்.இருப்பினும், அவரை அழைத்து விட்டதால், அதிலிருந்து பின் வாங்கக்கூடாது என்று நினை த்த மன்னன்,  தன்னுடைய இரதத்திலேயே துறவியை அரண்மனைக்கு அழை த்து வந்தான். மன்னன் அரண்மனையில்,  துறவிக்கு தயார் செய்த இருப்பிடத் திற்கு வந்தத் துறவி, மன்னனைக் பார்த்து,   'அரண்மனையில் இருந்தால்,  ஒரு மன்னனைக் போலவே வாழ வேண்டும் ' என்று சொன்னவர்,  தாமாகவே ஏவல ர்களை அழைத்து, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா ' என்று ஆணை யிட்டு, நிறைய பொருட்களைக் கொண்டு வரச் சொன்னார்.உயர்ந்த ரக பட்டாடைகளை உடுத்திக் கொண்டார். நிறைய அணிகலன்களை அணிந்து கொண்டார். பணிப் பெண்கள் சூழ, ராஜ போகத்தில் திளைத்தார்.

நாளுக்கு நாள்,  மன்னனின் மனம் மிகவும் பதற்றமடைந்து கொண்டே இருந் தது. துறவியின் அளவில்லா மகிழ்ச்சியையும், ஆனந்த வாழ்க்கையையும் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், உளவாளிகள் தனக்கு சரியானத் தகவலைத் தரவில்லை என்றும்,  இவர் துறவியே அல்ல. மற்றவர்களை சுரண்டி வாழும் ஒரு புல்லுருவி என்றும், எப்படி இந்த கபட நாடகத் துறவியிடமிருந்து விடுபடுவது ? என்றும் யோசித்தான்.

நாளடைவில் துறவியின் நடவடிக்கைகள் தாங்கமுடியாத மன்னன், ஒருநாள் அவரிடம் சென்று, ' ஐயா, நான் உங்களிடம் சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டும்.'என்றான்.

அதற்கு அந்தத் துறவி அமைதியாக,  நீ என்னக் கேட்க வருகிறாய் என்று எனக் குத் தெரிகிறது.நீ என் நினைவாலேயே மிகவும் துயரமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இதற்கு நீ ஏன் இத்தனைக் காலம் எடுத்துக் கொண்டாய் ?எதையும் உடனுக்குடன் கேட்டு விடுவது நல்லது. நீ என்ன கேட்க வந்திருக் கிறாய் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும்,  நீயேக் கேள் ' என்றார்.அதற்கு மன்னன்,  ' நான் வாழ்வதை விட, நீங்கள் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு, உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? என்றும் கேட்டான். மன்னன் கூறியதைக் கேட்டு துறவி சிரித்தார். பிறகு சொன்னார்.

' இந்தக் கேள்விக்குத் தான்  ஆறு மாதங்கள் வரைக் காத்திருந்தாயா மன்னா ?உன் கேள்விக்கான பதிலை என்னால் கூற முடியும்.

இப்போது நாம் இருவரும் உன் ரதத்தில் இந்த இராஜ்ஜியத்தின் எல்லைக்கு செல்வோம் வா ' என்று அழைத்தார்.

இருவரும் மன்னனின் இராஜ்ஜியத்தின் எல்லைக்கு வந்தனர்.

துறவி, மன்னனைக் பார்த்து, 

 ' நான் அடுத்த இராஜ்ஜியத்துக்குப் போகிறேன். நீயும் வா ' என்றார்.

மன்னன் திடுக்கிட்டான்.

' நான் எப்படி வருவது ? எனது எல்லை இதோடு முடிந்து விட்டது.

இங்கு என்னுடைய மக்கள் இருக்கிறார்கள்.

என்னுடைய இராஜ்ஜிய சொத்துக்கள் இருக்கின்றன.

இராணி, இளவரசன் குடும்பம் என்று எனது சொந்தங்கள் இருக்கின்றன.

இவைகளை விட்டு விட்டு உங்களுடன் எப்படி என்னால் வரமுடியும் ?' 

என்றான் மன்னன்.

துறவி சொன்னார்,

 ' இப்போது வித்தியாசத்தை தெரிந்து கொண்டாயா ?

எனது ராஜ்ஜியம், எனது மக்கள், 

எனது சொந்தம் என்று 

ஒரு எல்லைக் கட்டியவன் நீ.

நான் எல்லை இல்லாதவன்.

 எந்த நாடும் எனது நாடு.

 எல்லா நாட்டு மன்னர்களும் 

என்னை வரவேற்பார்கள்.

எல்லா நாட்டு மக்களும் என் மக்கள்.

ஆனால், இதில் எதையும் நான் சொந்தம் கொண்டாடியதில்லை. 

சொந்தம் கொண்டாடவும் மாட்டேன்.

எதுவும் என் மனதில் ஒட்டாது.

எனக்கென்று இந்த உலகில் எதுவுமே இல்லை.

நீயோ, ஒரு குறிப்பிட அளவே எல்லைக் கட்டியவனாக இருந்தாலும், அனைத்தையும் சொந்தம் என்று நினைக்கிறாய்.

இதுதான் நீ கேட்டக் கேள்விக்கு பதில்.

நீ தந்த இந்த உயர்ந்த ரக உடைகளையும், 

ஆபரணங்களையும் நீயே வைத்துக் கொண்டு சொந்தம் கொண்டாடி,

மகிழ்வுடன் இருப்பாயாக.'  என்று

தான் அணிந்திருந்த ஆடைகளையும், அணிகளன்களையும் கழற்றி மன்னனிடமேக் கொடுத்தார்.

' நான் போகிறேன். இனி இங்கு நான் திரும்பி வரச் போவதில்லை.' என்று அடுத்த இராஜ்ஜியத்தின் எல்லைக்குள் நுழைந்தார்.

இப்பொழுதுதான் மன்னன் தனது 

அறிவீனத்தை உணர்ந்தான்.

துறவி சென்ற திசையை நோக்கி

கைக் கூப்பித் தொழுதான்.

No comments:

Post a Comment

என் உயிர் நீதான்

என் உயிர் நீதான்   ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவரு...