பின் தொடர்பவர்கள்

சனி, 24 அக்டோபர், 2020

0013 தேயும் தேன்நிலா சிறுகதை பேசாலைதாஸ்

தேயும் தேன்நிலா சிறுகதை பேசாலைதாஸ்


அந்த பெண்ணை நான் பார்த்தது ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், என் தோழியின் கால்களை பிடித்துக்கொண்டு, தேம்பிதேம்பி அழுதாள், அவள் விசும்பலில், ஏதோ ஒர் இனிமை இருந்தது, இருந்தபோதும் அவளைபற்றிய இனம் தெரியா கவலை மனதில் குடிகொண்டது. நான் வந்திருந்தது வழக்கத்துக்கு விரோதமான ஒரு வேலைக்கு. எனது வேலை எனது தோழிக்குப் பாதுகாப்பான ஓர் ஆணாக இருப்பது. அவ்வளவுதான். 

என் தோழி, அவள் யாழ் பல்கலைக்கழகத்தில், என்னோடு அரசியல் விஞ்ஞானம் கற்றவள். விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர், அந்த இயக்கத்தில் இருந்த, பெண் போராளிகள், தொண்டர் படைப்பிரிவு, இப்படி ஏகப்பட்ட பிரிவுகளில், தங்களை இணைத்துக் கொண்ட பெண் போராளிகள், புணர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பட்டு, பின்னர் சுயமாக வேலைதேடி வாழ்வதற்கு திருப்பி சமூகத்துக்கு அனுப்பப்பட்ட பெண் போராளிகள், பாலியல் தொழிலில் ஈடுபட்டதினால், அவர்களுக்கு சில நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியது, அது எந்தளவு தூரம் அந்த போராளிகளை சென்றடைகின்றது என்பதை ஆய்வு செய்வதே அவளின் ஆய்வு பணியாகும்.

                                       இந்த ஆய்வுப்பணியில் என் தோழியோடு இணைந்து கொண்ட பின்னர், புணர்வாழ்வு அளிக்கப்பட பெண் போராளிகளின் வாழ்கையில், திடுக்கிடும், அதிர்ச்சியான விடயங்கள் பல நிறைய இருப்பதை என்னால் உணரமுடிந்தது. புணர்வாழ்வு முகாமில் இருந்து வந்த பெண்போராளிகள் அதிகமாக பாலியல் தொழிலாளர்களாவே மாற்றப்பட்டிருந்தனர். அதற்கு பின்புலமாக இராணுவ உளவு பிரிவு இருந்ததாக அவர்களே  விபரித்துள்ளனர். அதைவிட மிக அதிர்ச்சியான விடயம் தமிழ் அரசியல்வாதிகள், அதிலும் தமிழ் தேசியம் பேசும் சில அரசியல்வாதிகளும், இந்த பாலியல் தொழிலுக்கு தரகு முதலாளிகளாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அறியும் போது, அதை ஜீரணிக்கமுடியாமல் இருந்தது.


                                                                ஒருகாலத்தில், எங்கள் அம்மணிகள், அம்மாக்கள், அக்கா தங்கை மார்களுக்கு காவல் தெய்வங்களாக தெரிந்த இவர்களை இப்போது அவர்கள் பார்க்கும் பார்வையே வித்தியாசமானது, அடங்காப்பிடாரிகள், கற்பிழந்த வேசைகள் என்ற வசைவு வேறு. சிறைப்பிடித்த இராணுவம் இவர்களை சும்மாவா விட்டிருக்கும், என்ற கேள்விக்குறிகள். தங்களுக்கு நடந்த கொடூரங்களை சொல்லவும் மெல்லவும் முடியாமல், தங்களுக்குள் அடக்கிக்கொண்டு மெளனிகளாக, நடைப்பிணங்களாக திரியும் இவர்களை, தம் சகோதரி, தன் பிள்ளை, என்று அரவணைக்க மறுக்கும் சொந்த தாய்மார்கள், சகோதரிகள் உணர்வுகளை நினைக்கும் போது, இந்த இனம் அழிந்து உருக்குழைந்து போகட்டும் என சபிக்கதோன்றும். எங்கே வேலை கொடுத்தால்,அரசாங்கதுக்கு வால்பிடிக்கமுடியாதே என்று அவர்களுக்கு வேலை கொடுக்காமல், அவர்களை பாலியல் தொழிலுக்கு தள்ளிய மகா பாவிகள். இவர்களை துரத்தி துரத்தி அடிக்கத்தோன்றுது,இப்படியாக என் மனம் கறுவிக்கொள்கின்றது.

பாலியல் தொழிலாளர்களைச் சந்திக்கச் செல்லும்போது சமயங்களில் ரவுடிகள் பிரச்சனை வருமாம். சிலவேளைகளில் இராணுவ உளவாளிகளினால் உயிருக்கே ஆபத்து வலாமாம், இது என்ன பிரமாதம், நம்மட தமிழ் தேசியம் பேசும் அயோக்கிய அரசியல்வாதிகளின் அடிவருடிகள், அதுதானே சொன்னேன், பெண் போராளிகளைவைத்து பாலியல் ஏஜன்சி வேலை பார்க்கும் குண்டர்களினாலும், பிரச்சனை வருமாம், நான் பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல, அகல விரிந்த முண்டக்கண்ணுடன், அல்லது போலீஸ்காரன் போல இருப்பேன். ஒருவேளை அதனால்தானனென் தோழி தனது மெய்க்காவலராக, அழைத்தார் போலிருக்கிறது..

அவ்வாறு சென்றபோதுதான் இந்த அழுகைப் பெண்ணைப் பார்த்தேன். வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த என் தோழி அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெயர் தேன்னிலா. பொருத்தமில்லாத பெயர்.. நல்ல கருப்பாக ஐந்தடி உயரத்தில் இருந்தாள் அந்தப் பெண். வயது 30-35 இருக்கலாம். களையான முகம். பளீர் என்ற வெண் பற்கள். அழுகையில் அவள் தலைமுடி கலைந்திருந்தது. என் தோழி அந்தப் பெண் உதவி கேட்டால் செய்யும்படி சொல்லிவிட்டு என் செல் எண்ணை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

நாங்கள் பரந்தனை நோக்கிப் பயணித்தோம். வழியில் என் தோழி பாலியல் தொழில் நிலைமைகள் பற்றி நிறைய தகவல்களைச் சொன்னார். கிளிநொச்சி போராட்டகாலங்களில் அதுதான் கிட்டதட்ட தலைநகராக இருந்தது, இலங்கை தமிழர்களுக்கு. விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் அங்குதான் இருந்தது, பல சர்வதேச பிரமுகர்கள் அங்கே விஜயம் செய்ததுண்டு, அந்த காலம் அழிக்கப்பட்டுவிட்டது, இப்போது கிளிநொச்சி பாலியல் தொழில் மையமாக மாறிவிட்டது, அது இன்னமும் பாலியல் மையமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னார். கொழும்பு-அனுராதபுரம்-மன்னார்-யாழ்ப்பாணம் என்று வடமாநில பாலியல் வலைப்பின்னல் இருக்கிறது என்று சொன்னார். ஒவ்வொரு மையத்திலிருக்கும் பெண்களும் குறிப்பிட்ட காலத்தில் மற்ற நகர மையத்திற்கு மாற்றப்படுவார்களாம். புதிய பெண்கள் என்பதாக அறிமுகம் செய்து வணிகம் நடக்குமாம். இதற்கான பெரும்புள்ளிகள், அரசியல்புள்ளிகள், இராணுவபுள்ளிகள், காவல்துறை என்று பேசிக்கொண்டேயிருந்தார். எனக்கு வெறுப்பு உச்சத்துக்குப் போனது. பேச்சை மாற்றலாம் என்று ‘அதுசரி.. யார் அந்த தேன்னிலா? என்ன பிரச்சனை?’ என்றேன்.

தேன்நிலாவின் கதை என் தோழிக்கும் விரிவாகத் தெரியவில்லை. தேன்நிலா சிறையில் இருந்தபோது யாரும் அவளை பிணையில் எடுக்கவில்லையாம். சிறையில் பழக்கமான பாலியல் தொழிலாளிகள்தான் அவளை வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள். திருட்டுக் குற்றத்திலிருந்துத் தப்பிக்க அந்தப் பெண்களுடன் சேர்ந்து இவளும் இடம்பெயர்ந்துவிட்டாள். இதுதான் கதைச் சுருக்கம்.

‘அது சரி.. ஏன் அழுகிறாள்?’ என்று ஆவல் மேலிட கேட்டேன்.

‘இங்கிருந்து வெளியேற வேண்டுமாம்.. என் உதவியைக் கேட்டாள்.. அது நடக்கிற காரியமா? வெளியேறிப் போனால், இராணுவ உளவாளிகள், அரசியல் புள்ளிகள், இப்படி பலர் விரட்டிக்கொண்டு வருவார்கள்… அதனால்தான் உங்க நம்பரைக் கொடுத்துட்டேன்’ என்றார் அவர். 

‘நல்ல தோழி’ என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம்.. சரி வந்தால் பார்க்கலாம் என்று முடிவு செய்துகொண்டேன். அப்புறம் மறந்தும் விட்டேன்.

அப்போது நான் பேசாலையில் வாழ்ந்துகொண்டிருந்தேன். தாஸ் என் நண்பர் ஒருவரின் வீடு நான் இருந்த வீடு. அதிலேயே ஒரு பாத்ரூமும் இருந்தது. ஒண்டிக்கட்டைக்கு இதுபோதும் என்று அங்கேயே முகாமிட்டிருந்தேன்.


சில நாட்கள் கழித்து ஓர் இரவு. 9 மணியிருக்கும். மன்னார்  பேருந்து நிலையத்தில் என் பேசாலை போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். 8.50 பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் 9.30க்குத்தான். காத்திருந்தபோது செல்போன் அழைத்தது. மன்னாரை சேர்ந்த ஓர் லேண்ட்லைன் என்று தெரிந்தது. எடுத்தேன். எதிர்முனையில் ஒரு பெண் குரல். நான்தானா என்று கேட்டது. ஆமாம் என்றேன். ‘சார். நான்தான் தேன்நிலா’ சில வினாடிகளில் புரிந்துகொண்டேன், ‘சொல்லுமா’ என்றேன். ‘சார். எங்கிருக்கீங்க’ வழக்கமாக‌ நான் பொய்செல்வதில்லை. ‘மன்னார் பேருந்து நிலையம்’ என்று சொல்லிவிட்டேன். அப்புறம்தான் மாற்றி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. ‘நானும் இங்கதான் இருக்கேன்.. நீங்க எங்க நிக்கிறிங்க?’சொன்னேன். ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தாள். 

அவளை அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமாக இருந்தது. என்னை நோக்கி சிரித்துக்கொண்டு வந்தவள்தான் தேன்நிலா என்று நான் புரிந்துகொண்டேன். அவள் தோளில் சிறு பை ஒன்று தொங்கியது. வெளிச்சத்தில் அவள் புடவையும் ஜாக்கெட்டும் மினுமினுத்தன. உதட்டில் லேசான சாயம் இருந்தது. அந்த இருட்டில், டியூப் லைட் மங்கள் வெளிச்சத்தில் தேவதை போலிருந்தாள்

‘என்ன இந்த நேரத்திற்கு?’ என்று கேட்டு வைத்தேன்.

‘இதுதான் எங்க தொழில் நேரம்’, என்றாள் அவள். அசட்டுத்தமான கேள்வி கேட்டிருந்தேன் என்பது எனக்கும் தெரிந்தேயிருந்தது. இரவு பத்து மணி வாக்கில் இதுபோன்ற பெண்ணோடு, அதுவும் பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டு நிற்கும் தர்ம சங்கட நிலைமையால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன்.

‘சார், நானு ஒடனே போவனும்.. பாத்ரூம் போவனும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்’

‘சொல்லு தேன்நிலா’ என்றேன்.

‘மேடம் நீங்க ஒதவுவிங்கன்னு சொன்னாங்க.. எனக்கு இங்கேந்து தப்பிக்கனும். எனக்கு வேலை பார்த்து வைங்க… நான் கூப்பிடறேன்’ அவள் அவசரமாக விலகிச் சென்றாள். சுற்றி உள்ளவர்கள் என்னை கூர்ந்து கவனிப்பதாக எனக்குப் பட்டது. அப்புறம் அந்தப் பெண்ணிடமிருந்து தகவல் இல்லை. ஆனால், ஒரு வேலை கையில் வந்துவிட்டால் அதற்கானவற்றைச் செய்துமுடித்துவிடுவது எனது வழக்கம்.

என் வக்கீல் நண்பர் வழியாக ஒரு புணர்வாழ்வு இல்லத்தினைப் பிடித்துப் பேசினேன். அதன் நிர்வாகி ஒரு தாடிக்காரர்.. ‘நீங்க சொல்ற வைச்சிகிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. பொதுவாக இதுபோன்ற பெண்கள் வெளியேற வேண்டும் என்பார்கள்.. ஆனால், வர மாட்டார்கள்’ என்றார் அவர்.

எனக்கு விளங்கவில்லை. ‘அது அப்படித்தான்… அவர்களின் எதிர்காலம் பற்றிய அச்சம் அவர்களை விரட்டிக்கொண்டேயிருக்கும்.. யாரை நம்புவது என்று அவர்களுக்குத் தெரியாது. அதைவிட முக்கியம்.. அந்தப் பெண்ணை யார் பிடித்து வைத்திருக்கிறார்களோ அவர்களை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லா நெலமதான் நீடிக்கும்.. இருந்தாலும், அந்தப் பெண் வந்து சேர்ந்தால் உதவுகிறேன்’ என்று அவர் முடித்துக்கொண்டார்.


ஏறக்குறைய இரண்டு மாதம் கழித்து அந்தப் பெண் மறுபடியும் அழைத்தாள். அப்போது மணி இரவு 10 இருக்கும்.. நான் எனது இருப்பிடத்தில் இருந்தேன். வழக்கமான அதே கேள்வி, ‘சார் எங்கிருக்கீங்க’ பழைய சந்திப்பை மனதில் வைத்துக்கொண்டு நான், மிகவும் தெளிவாக, ‘என்னோட ரூம்ல’, என்றேன்.‘நெனச்சேன் சார்.. நானும் ஒங்க ஏரியாவுலதான் இருக்கேன்.. என்னை வந்து அழைச்சிட்டுப் போக முடியுமா?’

சிக்கிக்கொண்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும், துன்பகரமான வாழ்க்கையில் இருக்கும் ஒரு பெண் உதவிக்காக கரம் நீட்டும்போது கண்டுகொள்ளாமல் போவது எப்படி.? அதிலும், துன்பத்தைத் தோளில்போட்டுக்கொண்டு திரிபவன் என்று கிண்டல் செய்யப்படும் அளவுக்கு பிறருக்கு உதவிசெய்வதை ஒரு வேலையாகப் பார்ப்பவன் நான்.

அவள் எங்கேயிருக்கிறாள் என்ற விவரங்களைக் கேட்டுக்கொண்டு போய் சேர்ந்தேன். போகும்போது எனது மனம் ஊசலாடிக்கொண்டேயிருந்தது. தன்னந்தனியனாக வாழும் நான், அடைக்கலம் கொடுத்தவர் இடத்தில் ஒரு பெண்ணோடு, அதுவும் பாலியல் தொழில் செய்பவளோடு தங்கியிருந்தால், அடைக்கலம் கொடுத்த நண்பர் என்னவாறு யோசிப்பார்? சிக்கலான நிலைமை. ஆனால், அவள் இங்கு தங்க வருகிறாள் என்று எப்படி முன்கூட்டியே அனுமானிக்க முடியும்? ஒரு வேளை தப்பித்து வந்திருந்தாள் என்றாள்.. எப்படி சமாளிப்பது..?

இப்படியாக யோசித்துக்கொண்டே போய் சேர்ந்தேன். அவள் தனியாகத்தான் நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் நெருங்கி வந்தாள். சோடியம் விளக்கின் ஒளியில் ஒரு தேவதைப்போல இருந்தாள். யார் சொன்னது கருப்பு அழகில்லை என்று..?

‘என்னம்மா? என்ன பிரச்சனை?’ என்றேன்.

‘சார் போயிட்டே பேசலாமா?’ என்றாள் அவசரமாக..

‘சரி’, என்று நான் திரும்பி நடக்க என்னோடு நடந்தாள்.

அவளை ஒரு பேசாலை கஷ்டமர் அழைத்து வந்திருக்கிறான். சரியான போதை. அவன் அசந்து தூங்குவதால், நிச்சயம் காலை வரை இடி விழுந்தால் கூட எழுந்திருக்க மாட்டானாம்.. தற்காலிக சுதந்திரத்தை அனுபவிக்கலாமே என்று கதவை சாத்திவைத்துவிட்டு வந்துவிட்டாளாம். காலையில் வவுனியா போய்விட்டால் போதுமாம். அப்படியானால் பிரச்சனை தெளிவு.. இன்று இரவு என்னோடு என்று தீர்மானித்தே வந்திருக்கிறாள்.

‘சிக்கிக்கொண்டான்டா சிங்கம்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். நேராக அவளை அழைத்துக்கொண்டு, நான் தங்கியிருந்த வீட்டு வாசலுக்குச் சென்று நீல நிற தகர கேட்டை தட்டினேன். பக்கத்து வீட்டு நாய் குரைக்கதொடங்கியது, சற்று நேரத்தில் எழுந்து வந்தார் என் நண்பர். நான் ஒரு பெண்ணுடன் நிற்பது கண்டு ஆச்சரியப்பட்டவராகக் கேட் கதவைத் திறந்தார். அவளை என் நண்பர் என்றும் என் தோழியோடு ஆய்வுக்குச் சென்றபோது சந்தித்தேன் என்றும் அறிமுகம் செய்து வைத்தேன். ‘இருங்கள்.. காப்பி போட்டு கொண்டுவருகிறேன்.’ என்று அவர் எழுந்து சென்றார்.

தேன்நிலா வீட்டின் வரவேற்பறை நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தாள். சங்கடமாக உணர்கிறாள் என்று தெரிந்தது. ‘கவலைப் படாதே.. அவரும் என் மாதிரிதான்…’ என்று தைரியம் அளித்தேன்.

‘சார்.. கொஞ்சம் நான் பேசனும்.. ஒங்ககிட்ட மட்டும்தான்’ என்றாள் பரிதாபமாக.

‘பேசலாம்.. சற்று நேரம்தான் அவரு இருப்பாரு.. அப்புறம் பேசலாம்’

நண்பர் மனைவியை எழுப்பி காப்பி போடச்சொல்லிவிட்டு வந்தார். அப்புறம் பொதுவாக கொஞ்சம் பேசிக்கொண்டோம். காப்பியுடன் வந்த நண்பரின் மனைவி இவளை சற்று வினோதமாகப் பார்த்தார். அப்புறம் ’இங்கு தங்குறாங்களா?’, என்று கேட்டுக்கொண்டு அவளுக்கான பாய் தலையணை கொண்டுவந்து போட்டுவிட்டு படுக்கச் சென்றுவிட்டார். மறைவதற்கு முன்பு சற்று திரும்பி என்னையும் தேன்நிவையும் பார்த்துக்கொண்டார். எனக்கு ஒரு விதமான தர்மசங்கட உணர்வேற்பட்டது.

நண்பருக்கு தேன்நிலா ஏன் வந்திருக்கிறாள் என்பதைச் சொன்னேன். அவரும் அந்த மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கலாம் என்றார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரும் தூங்கப்போனார்.

அவர் போனவுடன் என்னை அரித்துக்கொண்டிருந்த முதல் கேள்வியைக் கேட்டேன். ’என்னோட ஊர் இது என்று உனக்கு எப்படித் தெரியும்?

‘மேடம் உங்கள் கூட வந்தவ, மொதல்லயே சொலியிருக்காங்க.. மன்னாரிலிருந்து தலைமன்னார் போகிற வழியிலதான் உங்க வீடு இருக்குன்னு

என் தோழியை மனதுக்குள் சபித்துக்கொண்டேன். ‘இப்ப கூட அவங்க செல்லுல கூப்பிட்டேன். நீங்க ரூம்லாதான் இருப்பீங்கன்னு சொன்னாங்க..’ மற்றவர்கள் தலையில் பிரச்சனைகளைக் கட்டிவிட்டு தப்பிப்பதில் என் தோழி கெட்டிக்காரி.

‘சரி.. சொல்லு தேன்நிலா..’

‘சார், மொதல்ல என் கதையைக் கேளுங்க’ என்று ஆரம்பித்தாள். சற்று நேரம் மௌனமாக இருந்தாள். அப்புறம் பேச ஆரம்பித்தவள் இடையிடையே விசும்பல், அழுகையுடன் சொல்லி முடித்தாள்.

சுருக்கமாகச் சொன்னால் அவளின் கதை இதுதான்:


காதல்.. பணக்காரப் பெண்ணான இவள் ஓர் பையனைக் காதலித்து அவனுடன் ஓடிப்போனாள். பின்னர் அவனின் வீட்டில் செட்டில் ஆனார்கள். அவனுக்கு அம்மா மட்டும். அந்த காலகட்டத்தில் பல இளைஞர்கள் செய்வது போல அவனும் யாருக்கும் சொல்லாமல் இயக்கத்துக்கு போய்விட்டான். தேன்னிலாவும் தன் காதலைனை தேடியலைந்து இறுதியில் அவளும் காதலனோடு இணைந்து போராளியானால், போரும் காதலுமாய் புறநானூறு சொல்லும் காதல் வாழ்க்கையாக மாறிப்போனது. அதெல்லாம் கொஞ்சகாலம் தான், பெரும் யுத்தம் மூண்டு, இறுதியில் முள்ளிவாய்க்காலோடு முடிவுற்றது, காதலன் போரில் இறக்க, தேன்நிலா இராணுவத்தால் பிடிபட்டு, புணர்வாழ்வு இயக்கத்துக்கு அனுப்பப்பட்டாள்.

புணர்வாழ்வு இல்லத்துக்கு அனுப்படுவதற்கு முன்னாள் விசாரனை என்ற பெயரில் அவள் வன்புணர்வுக்கு, பல இராணுவத்தாலும், பின்னர் உளவாளிகளினாலும் உள்ளாக்கப்பட்டாள் தேன்நிலா, அவளுக்கு உடல் உறவே உணர்ச்சி அற்று மரத்துப்போனது, வயிற்றுப்பசிக்காக வாழவேண்டிய நிர்ப்பந்தம், வேலை ஒன்றை தேடி, தமிழ் அரசியல்வாதியை தேடிச்சென்றபோது, அந்த அரசியல்வாதியின், உதவிக்காரனுக்குஆசை நாயகியாக வாழ நேரிட்டது.

அந்த வாழ்க்கை கொஞ்ச காலம் தான், அடுது வந்த தேர்தல்களிலே தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தேர்களில் கட்டுபணம் இழந்து, முகவரி தெரியாமல் போனார்கள். தேன்நிலாவும் அவளின் ஆசைநாயகனால் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் இருந்து வெளிவர வழியில்லை. இரண்டு மூன்று வாய்தா தாண்டிவிட்டது. அவளுடன் சிறையிலிருந்த பாலியல் தொழில் பெண்கள் பரிதாபப்பட்டு இவளை பிணையில் எடுக்க ஏற்பாடு செய்து பின்பு அவர்களுடன் வாழ்க்கை, பின்னர் அதுவே தொழிலானது.

அவளின் கதை அதிர்ச்சி அளிப்பதாகவும் வினோதமானதாகவும் இருந்தது. நம்புவதா இல்லையா என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவள் அழுகையில் பொய்யில்லை என்று பட்டது.

‘சரி.. நாளைக்கு நீ ஏந்திரும்பப் போகனும்..?’

‘இல்ல சார்.. நாஞ்சேத்துவைச்ச 25 ஆயிரம் அந்த அம்மா கிட்டதான் இருக்கு… அந்தத் தைரியத்துலாதான் என்ன வெளிக்கஷ்டமருக்கு அனுப்பறாங்க.. ஒடம்ப வச்சு உழைச்சப் பணத்தை விட்டுட முடியுமா சார்..?’

‘சரி… அப்புறம் எப்படித் தப்பிச்சு வருவ..?

‘வருவன் சார்.. எனக்கு வேலை மட்டும் பாருங்க’ என்றாள்.

எனக்குப் புரியவில்லை.. அந்த இரவு வெகு நேரம் பேசிக்கொண்டே கழிந்தது. பின்னர் நான் என் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது அவள் போய் விட்டிருந்தாள்.

மறுபடியும் அந்த மறுவாழ்வு நிலைய தாடிக்கார நண்பரிடம் பேசினேன். அவர் சொன்னார், ‘இப்படி பல முறை அந்தப் பொண்ணு கூப்பிடும்.. பேசும்.. ஆனா.. வரமாட்டா.. அவ வரனும்னா தன்னை ஏத்துக்கற அளவுக்கு ஒரு ஆம்பள இருந்தா மட்டும்தான் வருவா.. பல சமயம் அது நடக்காமலும் போகலாம்..’

நான் பல முறை தேன்நிலா பற்றி யோசித்திருக்கிறேன். ஒரு வேளை எனது ஆதரவுக் கரத்தைச் சோதித்துப் பார்த்திருப்பாளோ.. தன்னை ஏற்றுக்கொள்ளும் ஆண்களின் தேடல் பட்டியலில் நானும் ஒரு புள்ளியோ..? எனக்குத் தெரியவில்லை.

அப்புறம் பல மாதங்கள் அவளிடமிருந்து அழைப்பில்லை. ஒரு நாள் நான் வவுனியாவில் என் தங்கை வீட்டில் இருந்தபோது நள்ளிரவு தாண்டி, அனேகமாக ஒரு மணியிருக்கும் அழைப்பு வந்தது.

‘என்ன தேன்நிலா..’ என்று நாம் ஆரம்பிக்கும் முன்பே அவள் அழ ஆரம்பித்தாள். ஒரு ரூபாய் கொயின் போனில் இருந்து கூப்பிடுவதாகச் சொன்னாள். கிளிநொச்சி அருகே இருப்பதாகச் சொன்னாள். தொழில் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவளைப் இழுத்துச்சென்ற போலீஸ்காரன், ரோட்டோர காட்டில் வைத்து அவளைப் பலவந்தப் படுத்திவிட்டானாம். சகிக்க முடியாத துன்பமாம்.. உடம்பெல்லாம் ரணமாம்.. உடலில் மறைத்துவைத்திருந்த காசையும் கூட எடுத்துக்கொண்டு போய்விட்டானாம்.. எதிர்த்தவளுக்கு அடியாம்.. ஆடையெல்லால் கிழிந்துவிட்டதாம்… கையில் காசில்லையாம்..

‘நான் வவுனியாவில் இருக்கேன் தேன்நிலா’ என்றேன் பரிதாபமாக..

‘சார் வாங்க சார்.. என்ன அழைச்சிகிட்டுப் போங்க சார்.. எனக்கு வேற எதுவும் வேணாம் சார்..’ என்று அவள் அழுகை நீள.. பீப்பீப் ஒலிகளுக்குப் பின்பு லைன் கட்டானது..

என்ன செய்லாம்…? நான் அந்த  மறுவாழ்வு இல்ல நண்பரைத் செல்லில் அழைத்து செய்தியைச் சொன்னேன்.. அவர் சிரித்துக்கொண்டே ‘ஒன்னும் ஆயிடாது.. அப்படி ஒன்று நடந்திருக்கலாம்.. அல்லது நீங்கள் வருவீர்களான்னு அவ சோதிச்சிருக்கலாம்..’ என்றார்.

எனக்கு வெறுப்பாக இருந்தது. எப்படி இந்த மனிதரால் இப்படி யோசிக்க முடிகிறது?.. அப்புறம் குழப்பமாகவும் இருந்தது. ஒரு வேளை இவர் சொல்வது உண்மையாகவே இருக்குமோ..? என்னோடு உடல் உறவு கொண்டு, என்னை அடைவதற்கான அவளின் உத்தியோ, என் மனம் பலவாறக யோசித்தது.யோசித்தபடியே அவரைத் துண்டித்துவிட்டு தேன்நிலா அழைத்த எண்ணை எடுத்து அழைத்தேன். இரண்டு முறை மணி ஒலித்து முடிந்தது. இருக்கட்டும் என்று மூன்றாவது முறை அழைத்தேன்.

இந்த முறை போன் எடுக்கப்பட்டது. ‘சார்.. இது கிளிநொச்சி சார்..உங்களுக்கு என வேண்டும்’ என்றது ஓர் ஆண் குரல்.

அந்தக் கடைக்காரரிடம் விசாரித்தபோது ‘ஆமா சார் ஒரு பொண்ணு போன் போட்டுச்சு.. புடவையெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு.. அது போயிடுச்சே சார்’ என்றார். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்புறம் அவள் அழைப்பாள் என்று காத்திருந்தேன். அன்று இரவு மட்டுமல்ல பல நாட்கள்…ஏறக்குறைய இப்போது 8 வருடம் முடிந்து விட்டது.. இன்னும் அவள் அழைக்கவில்லை. என்ன ஆகியிருக்கும் தேன்நிலாவுக்கு..? நமக்காக போராடப்புறப்பட்ட பெண் தெய்வங்கள் தேய்பிறை போல தேய்ந்து மறைந்து வாழ்கின்றார்களே! தேன்நிலாவை நினைத்து, என் கண்ணத்தில் இளம் சூடான கண்ணீர்த்துளிகள் உருண்டோடின! (யாவும் கற்பனை) பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...