பின் தொடர்பவர்கள்

புதன், 5 மார்ச், 2025

வீரமங்கையர் வெல்வர்

 வீரமங்கையர் வெல்வர்  பேசாலைதாஸ்


‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டான். அவனுக்கு கடனாகப் பணம் கொடுத்தவன் கொடுமையானவன். பல தடவை வணிகன், தவணை சொன்னான். இதனால் கோபம் அடைந்த பணம் கொடுத்தவன், வணிகனின் வீட்டுக்குத் திடீரென்று ஒருநாள் சென்றுவிட்டான். அப்போது வணிகன் தன் ஒரே மகளுடன் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். 

தோட்டத்தின் நடைபாதையில் கூழாங்கற்கள் கறுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஆங்காங்கே கிடந்தன. உள்ளே நுழைந்த பணம் கொடுத்தவன், அவர்களைப் பார்த்து மரியாதை இல்லாமல் கத்தினான். ‘உடனே கடனைத் திருப்பிக் கொடு. இல்லாவிட்டால், உனக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்’ என்று மிரட்டினான். அதைக் கண்டு வணிகன் பயந்து நடுங்கினான். அது, மன்னர் ஆட்சிக் காலம். ஆகவே, கடன் கொடுத்தவன் மன்னரிடம் புகார் செய்தால் கடன் வாங்கியவனுக்குத் தண்டனை நிச்சயம். 

இந்தநிலையில், வணிகனுக்கோ வயது 70. அவனால், சிறைக்குப் போகவும் முடியாது; போனால், அவன் மகளைக் காப்பாற்றவும் யாருமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தான். அப்போது, பணம் கொடுத்தவனின் பார்வை வணிகனின் மகள் மீது விழுந்தது. 

அழகின் வடிவமாக இருந்த அவளைப் பார்த்த பின்பு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், பணம் கொடுத்தான். பிறகு, வணிகனைப் பார்த்து அவன் கூறினான். ‘வணிகனே… நான் சொல்வதைக் கேள். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உனக்கு உதவ நினைக்கிறேன். ஆனால், நான் சொல்லும் ஓர் ஏற்பாட்டுக்கு நீ சம்மதிக்க வேண்டும். நான், ஒரு பையில் இங்கே கீழே கிடக்கும் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றையும், வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றையும் போடுவேன். அதிலிருந்து, உன் மகள் ஒரு கல்லை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் கல், வெள்ளை நிறக் கல்லாய் இருந்தால்… நீ கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். 

அதன்பிறகு நான் உன்னை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால், கறுப்பு நிறக் கல்லாய் இருந்தால்… உன் மகளை எனக்கு கல்யாணம் செய்து தரவேண்டும். இதற்குச் சம்மதமா?’ என்று வணிகனைக் கேட்டான்.

 வணிகனுக்கு வேறு வழி தெரியவில்லை. பின்னர், தயங்கி… தயங்கி ‘சரி’ என்றான். கீழே தரையில் கிடந்த இரண்டு நிறக் கற்களையும் எடுத்து பைக்குள் போட்டான். ஆனால், திருட்டுத்தனமாக இரண்டு கறுப்பு நிறக் கற்களையும் பைக்குள் போட்டுவிட்டான். வணிகன், இதை கவனிக்கவில்லை. ஆனால், வணிகன் மகள் இதை கவனித்துவிட்டாள். பை, அவள் முன் கொண்டு வரப்பட்டது. உள்ளே இருக்கும் இரண்டுமே கறுப்பு நிறக் கற்கள். அவற்றில் அவள், எதை எடுத்தாலும் பணம் கொடுத்தவனை கல்யாணம் செய்தே ஆக வேண்டும். தந்தையோ கண்ணீர் சிந்தியபடி நிற்க… பணம் கொடுத்தவனின் மோசடித்தனத்தை எப்படிச் சொல்வது? அப்படியே உண்மையைச் சொன்னாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. 

இந்தச் சவாலை எப்படிச் சந்திப்பது என்ற முடிவோடு வணிகன் மகள் அந்தப் பைக்குள் கையைவிட்டு ஒரு கல்லை வெளியே எடுத்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லை நழுவவிட்டாள். கல் விரைந்து ஓடிப்போய் கற்குவியலோடு சேர்ந்துகொண்டது. வணிகன் மகள் கல்லை நழுவவிட்டதற்காக… பணம் கொடுத்தவனிடம் வருத்தம் தெரிவித்தாள். பிறகு அவனிடம், ‘இப்போது பையில் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல், கறுப்பு நிறமாக இருந்தால்… நான் எடுத்தது வெள்ளை நிறக் கல். அப்படியென்றால், நாங்கள் கடனைச் செலுத்த வேண்டியதில்லை. நான், உங்களை மணம் புரியவும் அவசியம் இல்லை. கல், வெள்ளை நிறமாக இருந்தால்… நான் எடுத்தது கறுப்பு நிறக் கல். அப்படி என்றால், நான் உங்களை மணந்துகொள்ளத்தான் வேண்டும். ஆகவே, பையில் என்ன நிறக் கல் இருக்கிறது என்று பார்க்கலாமா’ என்று கேட்டாள் வணிகனின் மகள்.

திணறிப் போனான் பணம் கொடுத்தவன். எடுத்த கல் போக… பைக்குள்ளே இருக்கும் ஒரு கல், கறுப்பு நிறக் கல்லாகவே இருக்கும். அவன் போட்ட இரண்டு கற்களும் கறுப்பு நிறக் கற்கள்தானே? அப்படியென்றால், அந்தப் பெண் எடுத்த கல் வெள்ளை நிறம் என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம் கொடுத்தவனின் தந்திரம் பலிக்கவில்லை. இதனால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டான்.

 மகள், வெற்றிப் புன்னகை பூத்தாள். இந்தக் கதை எதனைக் காட்டுகிறது… இதிலிருந்து என்ன தெரிகிறது? அறிவுள்ள பெண்களை யாரும் ஏமாற்ற முடியாது. எப்படிப்பட்டவரும் எளிதில் தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும்கூட பெண்கள் அதை வென்றுவிடுவார்கள். அவர்களுக்குத் தேவை வாய்ப்புகள் மட்டுமே. வாய்ப்பு மட்டும் கிடைத்து விடுமேயானால் பெண்கள் எந்தத் துறையிலும் வெல்வார்கள். ஆண்களுக்கு சமமாக… ஏன்? ஆண்களைவிடவும் அதிகம் வெற்றி பெற முடியும்...

பாய்ந்தோடும் குதிரை

பாய்ந்தோடும் குதிரை பேசாலைதாஸ்


ஞானியிடம் ஒருவர் கேட்டார்.

"ஒருவர் வாழ்வில்

முன்னேற்றம் அடைவது எதைப் பொருத்தது.?"

ஞானி சொன்னார்.

"அது நீங்கள்

கழுதையா?

எருமையா?

குதிரையா?

என்பதைப் பொருத்தது.

எப்படி என்றால், ஒரு தட்டு தட்டினால்,

கழுதை பின்னால் எட்டி உதைக்க்கும்.

எருமை அப்படியே நிற்கும்.

குதிரை பாய்ந்து ஓடும்.

அதுபோல யாராவது ஒருவர் ஒரு திட்டினால்,

சிலர் மீண்டும் திட்டுவார்கள்.

சிலர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும்

அவமானத்திற்கும் நேர் எதிராய் செயல்படுவார்கள்.

குதிரையைப் போல பாய்ந்து ஓடுவார்கள்.

பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சரியாய்

சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. சக்தி முன்னோக்கி

பாயாததால் இவர்களிடம் முன்னேற்றம் இருக்காது.

கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாயை மூடிக்

கொண்டிருப்பதும் ஒன்றே. இவர்கள் வாழ்வு

வெறுமையாகத்தான் இருக்கும்.

முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது

வஞ்சம் கொள்ளாமல், அதையும் தன்னை திருத்திக்

கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதும் ஒன்றே..

போற்றுவார் போற்றட்டும்.... தூற்றுவார் தூற்றட்டும்.... நம் கடமையை தொடர்ந்து செய்வோம் நம் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது...

தங்கமுட்டைகள்

 தங்கமுட்டைகள்  பேசாலைதாஸ்


ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.

"தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?"

தாத்தா நீண்ட நேரம் யோசித்துவிட்டு,

"உனக்கு ஒரு சக்திவாய்ந்த வாழ்க்கைப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு முன், நீ அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், மிகப்பெரிய விஷயம் ஒன்றைச் செய்ய வேண்டும்."

சிறுமி மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

"என்ன சொல்லுங்க தாத்தா?"

தாத்தா சிறிது நேரம் யோசித்து சொன்னார்..

“நீ அக்கம்பக்கம் போய், என் நெருப்புக்கோழி ஆறு பொன் முட்டைகளை இட்டது" என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும். அதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். பிறகு ஒவ்வொரு முட்டையும் பல லட்சம் மதிப்புடையது என்றும், அவற்றை விற்று நான் கோடீஸ்வரன் ஆவேன் என்றும் சொல். விரைவில் என் வாழ்க்கை மாறும், நான் சமுதாயத்தில் பணக்காரர்களில் ஒருவராக மாறுவேன்" என்று அனைவருக்கும் சொல்.

அதன் சாராம்சம் புரியாமல் அந்த இளம்பெண் செய்தாள். அவள் திரும்பி வந்த பிறகு, அவளும் அவளுடைய தாத்தாவும் இரவும் பகலும் காத்திருந்தார்கள், ஆனால் அவர்களது அண்டை வீட்டார் யாரும் அவரை வாழ்த்தவும் அவருடன் சேர்ந்து சந்தோசத்தை கொண்டாடவும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை.

மறுநாள் காலையில், தாத்தா இளம்பெண்ணிடம்  கூறினார்:

"இப்போது, நீங்கள் அக்கம்பக்கம் சென்று, நேற்றிரவு ஒரு திருடன் வந்து என் வீட்டை இடித்து, என் நெருப்புக்கு கோழியை கொன்று, தங்க முட்டைகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான்," என்று எல்லோரிடமும் சொல். நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று சொல்!"

சிறுமி வெளியே சென்று அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, அதிர்ச்சியூட்டும் ஏராளமான மக்கள் அவர்களின் வீட்டில் குவிந்தனர். ஆச்சரியமடைந்த அந்த இளம்பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.

"ஏன் தாத்தா, இன்னைக்கு நிறைய பேர் வந்திருக்காங்க, நேற்று யாரும் வரவில்லையே?"

தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"நம்மைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்டால், மக்கள் அமைதியாக இருப்பார்கள், அதைப் புறக்கணித்து, எதுவும் நடக்காதது போல் நடந்து கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் நம்மைப்  பற்றிய கெட்ட செய்தியைக் கேட்டால், அவர்கள் அதை காட்டுத்தீ போல் அடுத்தவர்களுக்கு பரப்பி, அது உண்மையா என்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். நம் வெற்றியைக் கொண்டாட மக்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் நமது வீழ்ச்சியைக் காண ஆர்வமுடன் வருவார்கள்."

அந்த நேரத்தில், தாத்தா இளம்பெண்ணின் தோள்களில் கையை வைத்து, மீண்டும் புன்னகைத்து, பின்னர் தொடர்ந்தார்,

"இப்போது நான் உனக்குக் கற்பிக்க வேண்டிய சக்திவாய்ந்த வாழ்க்கைப் பாடம் இதுதான்...

நம்மைச் சுற்றியுள்ளவர்களால் சொல்லப்படும் மிகப்பெரிய பொய் என்னவென்றால், நாம் வெற்றிபெறுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதே. உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கூட நாம் வெற்றி பெறுவதைக் காண விரும்புவதில்லை. நாம்  அவர்களை விட ஒரு படி முன்னேறுகிறோம் என்று யாராவது உணர்ந்தால், அதை கேட்டு பொறாமைப்படுவார்கள், பதட்டப்படுவார்கள்.

பெரும்பாலான மக்கள் தங்களை விட சிறப்பாக செயல்படுபவர்களை உண்மையில் விரும்புவதில்லை. அவர்கள் பொறாமைப்படுகிறார்கள், மேலும் உள்ளுக்குள், அந்த வாழ்க்கை நமக்கு கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனாலும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்  என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதற்க்கு பதில், உங்களின் சிறந்த பதிப்பாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்களை மாற்ற முயற்சிப்பதை நிறுத்துங்கள், அவர்கள் உங்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்.

உங்களுக்கான இலக்குகளை அமைக்கவும், உங்கள் கனவுகளைப் பின்பற்றவும், உங்கள் மனதை பயிற்சி செய்யுங்கள். உங்கள் கனவுகளை அடைவதை தடுக்க யாரையும், எதையும் அனுமதிக்க   வேண்டாம்.

காலம் பொன்னானது

 காலம் பொன்னானது  பேசாலைதாஸ் 

செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.

“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”

“நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!”

“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”

“அது முடியாது. நீ கிளம்பு என்னோடு!”

செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. “நான் யார் தெரியுமா? இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்!”

“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். பேச நேரம் இல்லை. புறப்படு!”

“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். அதுவே 50 கோடிகளுக்கு பெறும்.

எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!”

“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா?”

அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான். கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான். ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.

இறுதியில், தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.

தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன். எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்ல வேண்டும். இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. 

அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான்! இதையாவது செய் ப்ளீஸ்!!”

 எமதூதன் பார்த்தான். “நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது?”

“30 வருஷம் நண்பா. 30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். இது ரொம்ப பெரிய டீல். பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!”

“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா? நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன? வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே? யார் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!”

அடுத்த சில நொடிகளில், செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை...

நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.

உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

புதன், 26 பிப்ரவரி, 2025

கிளிஞ்சது டவுசர் சார் !

 கிளிஞ்சது டவுசர் சார் ! பேசாலைதாஸ் 


புத்திசாலித்தனத்துக்கு வயது, தோற்றம், அதிகாரம், பதவி இவையெல்லாம் அவசியமே இல்லை என்பதை தெளிவாக உணர்த்தும் கதை இது! ஒரு பையன் தினம் வங்கிக்கு வந்து ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து கொண்டு இருந்தான்.

இதை கவனித்த வங்கி மேலாளர் அவனை என்ன சேதி என்று கேட்க அதற்கு அந்த சிறுவன் வாங்க உங்க உங்க அறைக்கு அங்க போய் பேசலாம்! என்றான்.

உள்ளே போனதும் சிறுவன் சொன்னான் சார்! தினம் நான் ஒருவரிடம் ஆயிரம் பந்தயம் கட்டுவேன்! ஜெயித்த காசை இங்கு வந்து டெபாசிட் செய்கிறேன் என்றான். சரி இன்று என்னுடன் பந்தயம் கட்டு ஜெயித்தால் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்! சொல்லு என்ன பந்தயம்.

சிறுவன் சொன்னான் என் கண்ணை என்னால் முத்தமிட முடியும்! சரி பந்தயம் தயார் எங்கே உன் கண்ணை நீ முத்தம் இடு பார்க்கலாம். என்றார் மேலாளர்.

அவனும் உடனே தன் செயற்கை கண்ணை முகத்தில் இருந்து கையில் எடுத்து முத்தம் கொடுத்தான்!

வங்கி மேலாளரும் தன் தோல்வியை ஒப்பு கொண்டார்.

ஆனால் அவர் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை, சிறுவனிடம் இன்னும் ஒரு தடவை பந்தயம் கட்டலாம், ஆனால் இந்த தடவை பந்தயம் என்னை வைத்து கட்ட வேண்டும். சரி என்றான் சிறுவன். ஆனால் சிறுவன் ஒரே ஒரு கண்டிசன் வங்கியில் வேலை செய்யும் பத்து பேர் முன்னிலையில் தான் நடக்கனும் என்று சொல்ல அவரும் சரி என்றான். மேலாளரை பார்த்து நீங்கள் இன்று பச்சை கலரில் ஜட்டி அணிந்து வந்துள்ளீர்கள், அதே ஆயிரம் ரூபாய் பந்தயம்! என்றான். இப்பொழுது மேலாளருக்கு சந்தோசம்! ஏனென்றால் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை கறுப்பு கலர். தன்னிடம் இருந்து போன ஆயிரம் ரூபா திரும்ப வந்துவிடும், என்றும், ஒரு சிறுவனிடம் வென்றோம் என்ற சந்தோசமும் கிட்டும் என்று எண்ணி,சரி என்று பந்தயதிற்கு ஒப்பு கொண்டார்.

பத்து பேர் முன்னிலையில் அவர் தன் கால் சட்டையை விளக்கி காட்ட, என்ன ஆச்சரியம் அவர் அன்று பச்சை நிறத்தில் உள்ளாடை அணியவே இல்லை. சிறவனை ஜெயித்து விட்டோம் திரும்பி ஆயிரம் ரூபாயை வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் அவர் தள்ளி குதிக்க!

வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள். என்று சொல்ல அவர் பதறி போய் என்ன ஆச்சு என்று கேட்க,

இந்த சிறுவன் எங்கள் எல்லாரிடமும் வந்து உங்கள் வங்கி மேலாளரை இன்று உங்கள் முன் டவுசரை கழட்டி நிற்க வைக்கிறேன் என்று ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினான். நாங்களும் நீங்கள் மிகவும் கண்டிப்பானவர் கட்டாயம் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று பத்து பேரும் தலைக்கு ஆயிரம் பந்தயம் கட்டினோம் என்றார்கள்.

சிறுவன் தோற்ற ஆயிரத்தை மேலாளரிடம் கொடுத்து விட்டு பத்து பேரிடம் பத்தாயிரம் வாங்கி கொண்டு வேற வங்கிக்கு செல்ல ஆரம்பித்தான்.அன்புடன் பேசாலைதாஸ்


பழி ஒரு பக்கம், பாவம் மற்றொரு பக்கம்!

 பழி  ஒரு பக்கம், பாவம் மற்றொரு பக்கம்! பேசாலைதாஸ்


பழி  ஒரு பக்கம், பாவம் மற்றொரு பக்கம் பலர் சொல்ல நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், பாவத்தை விட பழிச்சொல் மிகச்சக்திவாய்ந்தது. அதை துள்ளியமாக விளக்குவதற்கு நான் கற்ற கதை ஒன்றை சொல்கின்றேன்.   - ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. 

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? 

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை. அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம். 

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான். 

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சிலஅந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை கூறியதோடு நில்லாமல் இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று. 

மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.

உண்மையை உணராமல் அபாண்டமாக பழிசுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும். 

எனவே, மற்றவர்கள் பற்றி பேசும்போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.அன்புடன் பேசாலைதாஸ்

தந்தை செயல் மிக்க மந்திரமில்லை!

 தந்தை செயல் மிக்க மந்திரமில்லை!  பேசாலைதாஸ்

நெப்போலியன்  தன் படையில் பணிபுரியும் வீரனின்  வீட்டிற்கு சென்று  அவ்வீரனுக்கு  அதிர்ச்சியான ஒரு.மகிழ்ச்சியை  தருவோம் என்ற எண்ணம் வந்தது  ஏனெனில்  அவ்வீரன் மிகுந்த பணிவும் கட்டுப்பாடும் உடையவன்   

ஒரு நாள்  எந்தவித அறிவிப்புமின்றி படைவீரனின்  வீட்டிற்கு சென்றான்

எப்பபோதும்  மரியாதை செலுத்தும் வீதமாக  சல்யூட் செய்யும் அவ்வீரன் அன்று   அம்மரியாதையை செய்யவில்லை   

 வேறொரு நாள் அவ்வீரனை அழைத்தான் நெப்போலியன் 

ஏன் உன் வீட்டிற்கு 

வந்த போது எனக்கு மரியாதை செய்யவில்லை?

எப்போதும் மரியாதை தரும் பண்புள்ள உனக்கு என்னவாயிற்று  எனக்கேட்டான் 

அதற்கு அவ்வீரன் சொன்னான்  அன்று வீட்டில் என் குழந்தைகளும் மனைவியும்   எனது பெற்றோர்களும் இருநதனர் 

அவ்வீட்டின் தலைவன் நான் 

உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்கவர் என் தந்தையே என என் குழந்தைகள் நம்பிக்கை கொண்டு வளர்ந்து வருகின்றனர் .

அவர்களின்‌ நம்பிக்கையை நான் பொய்யாக்க விரும்பவில்லை

என் வீட்டின்  தலைவன் நானே

நெப்போலியன் .

அவ்வீரனை பாராட்டினான்

தன் மீது.நம்பிக்கை வைக்காதவன். நல்ல வீரனாக இருக்க முடியாது  உன்னை படைப்பிரிவின் தலைவனாக நியமிக்கிறேன் என்றான்

நமது மரியாதையை காப்பாற்றுவதும் வீரமே.. அன்புடன் பேசாலைதாஸ்

புதன், 8 ஜனவரி, 2025

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.


குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், 

தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். 

துரியோதனன், அந்தப் பக்கமாக தேரில் வந்தான். 

தர்மர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம்.

 அரசகுலத்தவன் ஏன் தெருவில் நடக்க வேண்டும்.....?

 இதுபற்றி அவன் தர்மரிடமே கேட்டு விட்டான்.

“”அண்ணா! 

நம்மைப் போன்றவர்கள் தெருவில் நடக்கலாமா.....?

 நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் தந்தும் நீ நடந்து செல்கிறாயே! 

இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ?” என்றான். 

தர்மர் அவனிடம்,

,”"தம்பி! நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும்.

 தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். 

ஒவ்வொரு தெருவாக நடந்தால் தான், 

நமது நாட்டின் நிலைமை, மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்,” என்றதும்,

 துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது.

”"நாடாளப் போவது நானல்லவா!

 அப்படிப் பார்த்தால் நானல்லவா நடந்து செல்ல வேண்டும், 

இவன் ஏன் நடக்கிறான்....?

 சரி…சரி…இவனைப் போலவே நாமும் நடப்போம்,” என தேரில் இருந்து குதித்தான்.

மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும்,

 அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். 

அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம், 

இவனும் கவனித்துப் பார்த்தான்.

 ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. 

கடைக்காரன், ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். 

தர்மருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.”

"சே…இவனெல்லாம் ஒரு மனிதனா! இவனது காலில் ஒரு முள் குத்தினால் “ஆ’வென அலறுகிறான். 

ஆனால், இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு கரகரவென நறுக்குகிறான். 

ஐயோ! அதன் அவலக்குரல் இவனது காதுகளில் விழத்தானே செய்கிறது! 

இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா?’ ‘ என்று அவனை மனதுக்குள் திட்டியபடியே நடந்தார்.

அப்போது,

 அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித் துண்டுகளை எடுத்தான். 

தன் கடையின் கூரையில் எறிந்தான். 

தேவையற்ற எலும்புகளை அள்ளினான். 

தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். 

அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது.

 கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன.

“”ஐயோ! தவறு செய்துவிட்டோமே!

 இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும், 

மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல.

 காகங்களுக்கும்,

 நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு, 

தர்மத்தையும் பாதுகாக்கிறான். 

அப்படியானால், 

இவனைப் பற்றிய தப்பான கருத்து என் மனதில் ஏன் ஏற்பட்டது....? 

நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே!”

 என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.

நிஜத்தில் நடந்தது என்ன தெரியுமா.....? 

இவர் தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. 

ஆனால், 

துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட குணம் காற்றில் பரவி, 

தர்மரையும் பாதித்து விட்டது.

 இதனால் தான்   

“துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்றார்கள்.

துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ…

அவர்களின் காற்றுப்பட்டால் கூட  நம் குணமும்

 மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுமாம்.....!

 அதனால் தான் அப்படி ஒரு பழமொழியே வந்தது. 

மனைவி சும்மா இருக்கின்றாள்

 மனைவி சும்மா இருக்கின்றாள்  பேசாலைதாஸ்


கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை வாக்குவாதம் முற்றிவிட்டது.

“நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.

இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். 

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக் கூடியவர்கள்தான். 

கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது. வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் அவர் பணியில் ஆழ்ந்து விட்டார்.

மாலையில் வீடு திரும்பியபோது தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு மண்ணைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவு ‘ஆ’வென திறந்து கிடந்தது. வீட்டில் இருக்கும் நாய்க் கூண்டு காலியாக இருந்தது.

திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால், களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது. விளக்கு ஒன்று கீழே தள்ளி விடப்பட்டிருந்தது. தரை விரிப்பு ஒரு சுவரின் அருகே ஒழுங்கின்றி கிடந்தது.

அறை முழுவதிலும் விளையாட்டு பொம்மைகளும் பல்வேறுபட்ட துணிகளும் இறைந்து கிடந்தன.

சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தார். சாமான் கழுவும் தொட்டியில் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மேடையில் காலைச் சிற்றுண்டி சிந்திக் கிடந்தது.

குளிரூட்டும் பெட்டியின் கதவு அகலமாகத் திறந்திருந்தது. அதில் இருந்த நாய்க்கான உணவு தரையில் சிந்தியிருந்தது. மேஜையின் அடியில் ஓர் உடைந்த கண்ணாடி தம்ளர் இருந்தது.

பின்கதவின் அருகில் ஒரு மணல்மேடு காணப்பட்டது. ஏதோ நடத்திருக்கிறது. மதிய உணவு வேளைக்கு முன்பே தன் மனைவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது. கணவருக்குப் படபடப்பு அதிகமானது.

ஹாலை ஒட்டி இருந்த குளியலறையை நோக்கித் திரும்ப, அங்கும் அதிர்ச்சிக் காட்சிகள். உள்ளே தண்ணீர் சொட்டும் சப்தம், நிசப்தத்தை மேலும் திகிலாக்கியது.

கதவைத் தாண்டி வெளியே வந்து தண்ணீர் குட்டை போல தேங்கிக் கிடந்தது. ஈரத் துண்டுகளும், தண்ணீரில் ஊறிப்போயிருந்த சோப்புக் கட்டியும், மேலும் பல விளையாட்டு பொம்மைகளும் குளியலறை தரை முழுவதும் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.

மைல் கணக்கில் நீளமான டாய்லட் காகிதம் ஓரத்தில் குவியலாகக் கிடந்தது. கண்ணாடியின் மீதும் சுவர்கள் மீதும் பற்பசை பூசப் பட்டிருந்தது.

‘டாடி’ என்ற குரல் கேட்டு, திடுக்கிட்ட கணவர் தனது ஒன்றரை வயது மகன் பேஸ்ட்டைப் பிதுக்கி விளையாடிக் கொண்டிருப்பதைச் கணித்து அவனை அவசரமாகத் தூக்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டார்.

கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பிதியுடன் அவளைத் தேடினார்.

படுக்கையறையை நோக்கிப் பார்வை திரும்ப, அவசரமாக அதன் கதவைத் திறந்தார். 

உள்ளே.. முதுகுக்கு தலையணை கொடுத்து, ஒய்யாரமாக சாய்ந்திருந்த அவரது மனைவி, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

‘ஸ்வீட்டி’ என்றார், உலர்ந்த நாக்குடன், அவரைப் பார்த்து புன்னகை புரிந்த மனைவி, “எப்போ வந்தீங்க” என்று கேட்டாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவர், “இன்று வீட்டில் என்னதான் நடந்தது?” என்று கேட்டார்.

மறுபடியும் சிரித்த மனைவி, “வீட்டிலே என்னதான் வெட்டி முறிச்சியோ.. என்று அலுவலகம் முடிந்து வந்தவுடன் நீங்கள் கேட்பது வழக்கம். இன்று ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை! அதுதான் நடந்திருக்கிறது” என்று கூறினாள்.

செல்லாத காசிலும் செப்பு இருக்கும் என்பார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இயல்பாகச் சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாலேயே அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாத குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

பார்வை ஒன்றே போதுமா,,,,,

பார்வை ஒன்றே போதுமா,,,,, பேசாலைதாஸ் 


பார்வையற்றவள் என்ற ஒரே காரணத்துக்காகத் தன்னையே வெறுத்த ஒரு பார்வையற்ற பெண் இருந்தாள். தன் அன்பான காதலனைத் தவிர எல்லோரையும் வெறுத்தாள். அவர் எப்போதும் அவளுக்காக இருந்தார். உலகை மட்டுமே பார்க்க முடிந்தால், தனது காதலனை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.

ஒரு நாள், யாரோ அவளுக்கு ஒரு ஜோடி கண்களை தானமாக அளித்தனர், பின்னர் அவள் காதலன் உட்பட அனைத்தையும் பார்க்க முடிந்தது. அவள் காதலன் அவளிடம், "இப்போது நீ உலகத்தைப் பார்க்க முடியும், என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டான்.

தனது காதலனும் பார்வையற்றவர் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். கண்ணீருடன் சென்ற காதலன், பின்னர் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்:

"என் கண்களைக் கவனித்துக் கொள் அன்பே.".

நிலை மாறும்போது மனித மூளை இப்படித்தான் மாறுகிறது. 

வாழ்க்கை முன்பு என்ன இருந்தது என்பதையும், மிகவும் வேதனையான சூழ்நிலைகளில் கூட யார் எப்போதும் இருக்கிறார்கள் என்பதையும் சிலர் மட்டுமே நினைவில் வைத்திருக்கிறார்கள்.

மன்னாரில் கழுதைகளுடன் வாழ்தல்,,,,,,

கழுதைகளுடன் வாழ்தல்,,,,,,பேசாலைதாஸ்


மன்னாரில், சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே தன் வேலை விஷயமாக, இங்குமங்கும் போவதும், வருவதுமாய் இருப்பார்.

ஒரு நாள், விபத்தில் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சில நாட்களில், வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை, தன் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.

சில நாட்கள், அவர், கிழக்கு நோக்கி பயணிப்பார்... சில நாட்கள், மேற்கு, வடக்கு... இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும், அவரது பயணம் இருந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் சிலர், ஒரு நாள், வணிகரை நிறுத்தி, 'என்னப்பா இது... ஒரு நாள் கிழக்கே போற... ஒரு நாள் மேற்கே போற... ஒரு நாள் உடனே திரும்பிடறே... ஒருநாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா போற... ஒண்ணும் விளங்கலையே... என்னாச்சு?' என்றனர்.

'முன்ன மாதிரி இல்லங்க... இப்ப இந்த, கழுதையோட உதவி தேவைப்படுது; அதை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. நான் போக சொல்ற இடத்துக்கெல்லாம், இது போறதில்லை; நான் சொல்ற எதையும் கேட்கறதும் இல்லை...

'அதுக்காக, விட்டுட முடியுங்களா... நமக்கு வேலையாகணும்... அதேசமயம், கழுதை கூடவெல்லாம் மல்லுக்கட்ட முடியாது. அதுக்கு சொன்னாலும் விளங்காது. அதனால, நான் கொஞ்சம் மாறிக்கிட்டேன்... அது, கிழக்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்...

'மேற்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்... அது, வேகமா போனாலும், அதற்கேற்ப பழகிட்டேன்... இப்ப, கழுதைக்கும் பிரச்னை இல்ல; எனக்கும் இல்ல. வாழ்க்கை நிம்மதியா போகுது...' என்றார்.

இதேபோல, நம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானால், வீட்டில், அலுவலகத்தில், பல கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... அதற்காக, கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது. அதுங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரிய வைப்பதும் கஷ்டம்.

அதனால, நாம கொஞ்சம், 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டால், நம் வேலையும் நடக்கும்; வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். இது, திருமணம் ஆனவர்களுக்கான அறிவுரை என, நினைத்தால், அதற்கு, நான் பொறுப்பல்ல.. 

குறைகு சொல்லிப்பயண் இல்லை

குறைகு சொல்லிப்பயண் இல்லை   பேசாலைதாஸ்


குறைகளை எப்படி களைவது! ஒரு நாட்டின் மன்னன் வேட்டைக்கு போனான்!

அப்பொழுது ஒரு மானை குறி வைத்து அம்பு எய்த ! மான் துள்ளி

குதித்து போக அதன் கொம்பு கண்ணில் பட்டு அவன் ஒரு கண் பழுதாகி விட்டது!

பின்னாளில்! அவன் ஓவியர்களை கூப்பிட்டு தன்னை வரைய சொல்ல அனைவரும் அவனை ஒரு கண் குருட்டுடன் வரைந்தார்கள்!

மன்னனோ தன் மனம் ஊனம் இல்லாமல் இருக்க விரும்பினான்!

ஆனால் எவரும் அப்படி வரைய முன் வரவில்லை!

அப்படி இருக்க நாட்டில் ஒரு ஓவியன்

முன் வந்தான் !

மன்னனிடம் மன்னா நான் தங்களை ஊனம் இல்லாமல் அதாவது பழுது இல்லாமல் வரைகிறேன் ஆனால் எனக்கு சில தகவல்கள் வேண்டும் !

மன்னா தாங்கள் எப்படி தங்கள் கண்ணை இழந்தீர்கள்!

மன்னன் மான் வேட்டை கதையை சொல்ல!

ஓவியம் சரி நீங்கள் அம்பை எப்படி செலுத்துவீர்கள் என்று கேட்க!

மன்னனும் ஒரு கண்ணை மூடி மறு கண்ணால் குறி பார்த்து அம்பு எய்வேன் என்று சொல்ல !

சரி எந்த கண் உங்களுக்கு பழுது ஆனது!

நான் கண் மூடி இருக்கும் கண் தான் என்று சொல்ல !

ஓவியன் சரி தாங்கள் அதே மாதிரி கண்ணை மூடி குறி பார்த்து நில்லுங்கள் என்று சொல்ல!

ஓவியன் அட்டகாசமாக மன்னனின் படத்தை வரைந்து முடித்தான்!

இப்பொழுது ஓவியத்தில் பழுது இல்லை ஏனென்றால் பழுதாகி இருக்கும் கண் தான் மூடி இருக்கே!

கருத்து - குறை அனைவரிடத்திலும் இருக்கும் ! அதை பற்றி கவலை படாமல் அதை எப்படி வெற்றி கொள்ள வேண்டும் என்று யோசனை செய்ய வேண்டும்!

ஜோதிடர் கணித்த கணிப்பு

ஜோதிடர் கணித்த கணிப்பு  பேசாலைதாஸ்


ஒரு ஜோதிடர் நடந்து போகும் வழியில் போது ஒரு மண்டை ஓடு கிடந்தது....

அந்த மண்டை ஓடை தூக்கிட்டு வந்து வீட்டில் வந்து ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தார்..

இந்த மண்டை ஓடு யாராயிருக்கும்??? ஆனா பெண்ணா இந்த மண்டை ஓட்டுக்காரர் எப்படி இறந்தார்???? 

என்று தான் கற்ற ஜோதிடத்தை வைத்து ஆராய்ச்சி செய்து பார்க்க.... அவர் மனைவி தூங்கியவுடன் ஒரு அறைக்குள்ளே போய்  கதைவையஅடைத்துக் கொண்டு அந்த மண்டை ஓட்டை கையில் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார்... அவர் ஆராய்ச்சி செய்து பார்க்கையில் இந்த மண்டை ஓடு ஒரு ஆணாகத்தான் இருக்கணும் இவர் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கிறதே... எப்படி இறந்தார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்..

தினமும் இதே வழக்கமாகக் கொண்டிருந்தார் ஜோதிடர் மனைவி உறங்கியவுடன் பக்கத்து அறையில் கதவை அடைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார்..

தன் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது தினமும் நான் தூங்கி உடன் இவர் எதற்காக அறையில் போய் கதவை அடைக்க வேண்டும் என்று...

ஒரு நாள் மனைவி தூங்குவது போல் நடித்தார் அவர் எழுந்து கதவை அடைத்துக் கொண்டார் மனைவி ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் போது ஜோதிடர்  மண்டை ஓட்டை  பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார் ...

மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரிடம் என் கணவன் தினமும் இரவில் ஒரு மண்டை ஓடு வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டு பேசிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்ல....

அதற்கு அந்தப் பக்கத்து வீட்டுக்காரி என்ன சொன்னால் தெரியுமா??? உன்னுடைய கணவனுக்கு முதல் கல்யாணம் முடிந்திருக்கும் அவள் செத்துப் போய் இருப்பாள் அவள் ஞாபகமா தான் அந்த மண்டை ஓடு வைத்து திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல 

அப்படியா சங்கதி என்று வீட்டுக்கு வந்தவள் அந்த மண்டை போட்டு எடுத்து உரலில் போட்டு உலக்கையால் குத்திக்கொண்டு இருக்கும் போது தன் கணவன் வந்து விட்டான்..

எனக்குத் தெரியாம இன்னொருத்திய கல்யாணம் முடிச்சு இறந்த பிறகு அவள் மண்டை ஓடு வச்சி தினம் பாத்துக்கிட்டு இருக்கியா இனிமே யாரை வைத்து பார்க்கிறேன் என்று சொல்லி கொண்டே 

உலக்கையால் குத்த.. 

அப்போது அந்த ஜோதிடர் நான் கணித்த கணிப்பு சரியாக இருக்கிறது இவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கு என்று நினைத்தேன் அனுபவித்து விட்டான்....

இப்போது சந்தோஷம் என்றார் ஜோதிடர்.....

கதையின் நீதி:: நம்ம வீட்டு பிரச்சனைகள் நம்ம வீட்டுக்குள்ளே முடித்துக் கொள்ள வேண்டும் வெளியே செல்லக்கூடாது

நமக்குத் தெரிந்ததை விட பக்கத்து வீட்டுக்காரர்களுக் தான் அதிகம் தெரியும் போல... நமது குடும்பத்தை பற்றி....

திங்கள், 30 டிசம்பர், 2024

கேள்விக்கு மட்டும் பதில்

 கேள்விக்கு மட்டும் பதில் பேசாலைதாஸ்


ஒரு முறை ஒரு இளைஞன் ஒரு கிராமப்புற பெண்ணை பெண் பார்க்கச் சென்றான். அவனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருந்தது.

அவன் வீடு திரும்பிச் சென்றதும் அந்தப் பெண்; நீ என்ன தொழில் செய்கிறாய்? என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினாள்.

இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அவன், தான் வீரதீரன் என்பதை எடுத்துக் காட்ட வீர வசனம் பேசி கவிதை ஒன்றைப் பாடி அனுப்பினான்.

'என் தொழில் என்னவென்று கேட்பவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில்;

சண்டை என்று வந்தால் முதலில் வந்து நிற்கும் குதிரை வீரன் நானே! யுத்தம் என்று வந்தால் களத்தில் படைகளின் நடுவே எழுந்து நிற்கும் வாள் வீரனும் நானே!

கடிதம் கிடைத்ததும் அவள் பின்வருமாறு பதில் எழுதி அனுப்பினாள்.

உன் வீரத்தை நான் பாராட்டுகிறேன். நீ ஒரு ஆண் சிங்கம், ஆதலால் நீ ஒரு பெண் சிங்கத்தை தேடிப் பார்த்துக்கொள். நான் ஒரு பெண் மான், ஒரு ஆண் மானை நான் தேடிக்கொள்கிறேன்.

படிப்பினை:- கேட்ட கேள்விக்கு மாத்திரம் பதில் சொல்லப் பழகுங்கள்

ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

ஒரே பள்ளியில் படித்தவர்கள். பேசாலைதாஸ்


ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..*

  *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*

  *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..*

  நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர்.

  *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..*

  35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. 

*நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..*

  அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்..

  *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான்  ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர்.

  *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. 

  *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..*

  *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..*

  *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..*

  *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..*

  முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில்  மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின.  பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின..

  இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்..

  *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..*

  *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..*

  *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..*

  *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..*

  *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..*

  *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..*

  *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..*

  *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..*

  அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது.

  மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..?

  * *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 

  35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான். 

   பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை.

  மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி. 

  சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. 

  அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, ​​மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. 

  *நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான்.

  *இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..*

 *என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..*

 *எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..*

அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். 

இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்..

 *என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..*  என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும். 

முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார்.  அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

 *உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..*

 *உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..*


தேவையற்ற சுமைகள்.

 தேவையற்ற சுமைகள். பேசாலைதாஸ்


ஒரு வாட்ட சாட்டமான ஆள். தலையில் ஒரு மூட்டையோடு  நடந்து வந்து கொண்டிருந்தார்.

அந்த வழியாக ஒரு மாட்டு வண்டி வந்தது. மாட்டு வண்டிக்காரன் இந்த ஆளை பார்த்தான் ஏன் கஷ்டபடுகிறாய்? வண்டி சும்மாதானே போகிறது ஏறி உட்கார்ந்து கொள் என்று சொன்னான். இவனும் ஏறி உட்கார்ந்தான். 

வண்டி போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச தூரம் போனதும் வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான்.

இவன் அந்த மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டேஉட்கார்ந்திருக்கிறான்.

எதற்காக இன்னும் அந்த மூட்டையை தலையிலேயே வைத்துக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்டான். 

வந்தவனும் வண்டிக்கு பாரம் எதற்கு அது என்னை மட்டும் சுமந்தால் போதும் மூட்டையை நான் சுமந்து கொள்கிறேன் என்று சொன்னான். 

இதற்கு என்ன பொருள் ?  இந்த ஆளுக்கு உடம்பு வளர்ந்து இருக்கிறதே தவிர அறிவு வளரவில்லை. 

நமது வாழ்க்கையிலும் இந்த வண்டிக்காரன் போல் கடவுள் 

நமக்கும் பல வழிகளைக் காட்டுகிறார்.

வண்டியில் மூட்டையுடன் உட்கார்ந்திருப்பவர்கள் தான் நாம்.

பொறாமை,  கோபம் , வஞ்சகம் பழிவாங்கல்,  பணத்தாசை என்று பலவற்றை தலையில் சுமந்து கொண்டு திரிகிறோம்.  இந்த சுமைகளை எல்லாம் இறக்கி வைப்பதற்குரிய வழிகளை இறைவன் நமக்கு காட்டுகிறார்.

ஆலயவழிபாடு,  தானதர்மங்கள் செய்தல் , பிறருக்கு உதவி செய்தல், ஞானிகளின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள், 

என எத்தனையோ இதுபோன்ற மாட்டுவண்டிகள் நமது சுமைகளை 

இறக்கி வைப்பதற்காக இருக்கிறது.

நாம் தான் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நமது அறியாமையால் 

இந்த மாட்டு வண்டியில் மூட்டையைச் சுமந்து கொண்டு உட்கார்ந்து இருப்பவனை போல் இந்த சுமைகளை காலம் பூராகவும் சுமந்துகொண்டு நம்மையும் 

கஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

மட்டம் தட்ட அல்ல

மட்டம் தட்ட அல்ல

 "என்னப்பா..முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார் பண்டிதர். "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி" என்று பணிவுடன் கூறினார் நாவிதர்.பண்டிதர் சிரித்தபடியே,

"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு... என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... வேலையை ஆரம்பித்தார்... 'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்... "ஏன்டாப்பா  உன் வேலை முடி வெட்டுறது... உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை....

"நல்ல சந்தேகங்க சாமி... நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்... எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.. அடுத்த முயற்சியைத் துவங்கினார்... "இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''... இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.... "சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம். கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.. "எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற... ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப்பய போலருக்கு..." இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.. அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்... இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்... கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார், "சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்... கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து, "மீசை வேணுமுன்னிங்களே சாமி.. இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்... அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்... அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,

"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா.?" இப்போது பண்டிதர் சுதாரித்தார். 'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார், "இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித்தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்... முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்... அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.. கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

□நம்முடைய அறிவும், புத்தியும், திறமையும், அதிகாரமும், அந்தஸ்தும், பொருளும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல... இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

□தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...

□இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...

□அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...

□நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை.. ஆகவே,

இயற்கையினால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்... மதிப்போம்...வாழ்வளிப்போம்...

வாழ்க்கை குறுகியது, ஆனால் அழகானது…

வாழ்க்கை குறுகியது, ஆனால் அழகானது… பேசாலைதாஸ்


ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக………....ஏதோ சொன்னார் ,

இந்த இடத்தில் அந்தப்பெண்மணி தன் கணவரிடம் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....

"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"

'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி எங்க அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'

பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த தந்தை வளர்த்து வந்தார்.

அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.

கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:

'வாழ்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் .

ஆனா சில நேரங்கள்ல அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமல் போகலாம்.

அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் எந்த முடிவுக்கும் வந்துடக்கூடாது.'

நாம ஹோட்டலுக்குப்போனால் , ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேலை வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நாம அவுங்களுடைய மனசிலே இருக்கம்னு அர்த்தம்'.

பின்னொரு காலத்தில ஏதாவது ஒரு கால கட்டத்தில் நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,

'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் "அவங்க கூடத்தான் பல நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்" னு.

வாழ்க்கை குறுகியது,

ஆனால் அழகானது…

வாழ்வோம்….

மகிழ்வோம் …..

 இறைவன் கணக்கு பேசாலைதாஸ்


சூஃபி மகான் மிகவும் பசியோடு இருந்தார்.

அவர் நான்கு நாட்களாக தொடர்ந்து பட்டினியாகக் கிடந்ததால் அவரால் 

எழுந்து நடமாடவும் முடியவில்லை.

பசியை தாங்க முடியாமல் ஏதேனும் கிடைக்காதா என்ற ஆர்வத்தால் 

வெளியில் சென்று தேட ஆரம்பித்தார்.

ஓரிடத்தில் அழுகிய கிழங்கொன்று கிடைத்தது.

ஆனால் சாப்பிட மனமில்லாமல் தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கே வந்தார்.

என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒருவர் சூஃபி அவர்களை தேடி வந்தார்.

வந்ததும் ஐநூறு பொற்காசுகள் அடங்கிய ஒரு பையை நீட்டி "இது உங்களுக்கு " என்றார் .

என்ன இது?ஏன் எனக்குத் தருகிறீர்கள்? என்று சூஃபி கேட்டதற்கு அவர் சொன்னார் :

பத்து நாட்களாக நான் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தேன்

கப்பல் தீடீரென மூழ்குகின்ற நிலைக்கு வந்துவிட்டது.

எல்லோரும் பிரார்த்தனையில் ஈடுபடலாயினர்.

கப்பல் மூழ்காமல் உயிர் தப்பி விட்டால் அனைவரும் தத்தம் வசதிக்கேற்ப ஏதோ ஒன்றை தர்மம் செய்வதாக உறுதி செய்தார்கள்.

இந்த ஆபத்திலிருந்து மீண்டு விட்டால், நான் கப்பலை விட்டு இறங்கியதும் எனக்குத் தென்படுகின்ற முதல் ஆளுக்கு ஐநூறு பொற்காசுகள் தருவதாக நேர்ந்து கொண்டேன்'

நீங்கள் தான் என் கண்களுக்கு

தெரிந்த முதல் ஆள்'

ஆகவே இது உங்களையே சார்ந்தது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் 

அதை ஏற்றுக் கொண்ட சூஃபி மகான் 

தன் மனதை நோக்கி கூறலானார்:

மனமே, உனக்கு சேர வேண்டியது பத்து நாட்களாக உன்னை நாடி வந்து கொண்டிருந்தது

நீயோ பாழடைந்த வெளியில் எல்லாம் சென்று தேடிக் கொண்டிருந்தாய்....

நம்மை நோக்கி நீளும் கரம்

நம்மை நோக்கி நீளும் கரம்  பேசாலைதாஸ்


ஒரு நாள் பாதிரியார் ஒருவர் லியோ டால்ஸ்டாயை நாடி வந்தார். நீண்ட காலமாக நான் உங்களை வாசித்து வருகிறேன். நீங்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லிலும் இயேசு கிறிஸ்துவைத் தரிசிக்கிறேன். உங்களைவிட உன்னதமான கிறிஸ்தவர் ஒருவர் இருந்துவிட முடியாது. மகிழ்ச்சி. அதே நேரம் ஒரு சின்ன மனக்குறையும் உண்டு. உங்களை இதுவரை ஒருநாள்கூட நான் தேவாலயத்தில் கண்டதில்லையே ஏன்?”

ஏனென்றால் நான் கடவுளை நம்புவதில்லை” என்றார் டால்ஸ்டாய். பாதிரியார் திகைத்தார். 

ஆனால், நீங்கள் கிறிஸ்துவைப் பெயர் சொல்லியே அழைத்து எழுதியிருக்கிறீர்களே. நான் ஒரு கிறிஸ்தவன் என்றல்லவா நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்? பிறகு எப்படி நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்க முடியும்?”

இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமானால் ஒரு குட்டி சொற்பொழிவையே நிகழ்த்த வேண்டியிருக்கும் பரவாயில்லையா?” என்று புன்னகை செய்தபடி விளக்கத் தொடங்கினார் டால்ஸ்டாய்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் நான் உங்கள் தேவாலயத்துக்கு வந்தேன். பரிசுத்தமான அந்தப் பளிங்கு கட்டிடம் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. 

அங்கே நான் கண்ட தேவ குமாரன் எனக்கு அந்நியமானவராகத் தோன்றினார். அவர் உதடுகள் அழுத்தமாக மூடிக்கிடந்தன. என்னால் அவரை நெருங்கிச் செல்ல முடியவில்லை என்பதோடு அவராலும் என்னை நெருங்கிவர இயலவில்லை. 

ஒரு வகையான இறுக்கத்தை அங்கே என்னால் உணர முடிந்தது. அந்த இறுக்கம் மெல்ல மெல்லப் பரவி தேவ குமாரனின் முகத்தை அடைந்து அங்கேயே உறைந்து நின்றுவிட்டதை உணர்ந்தேன்.

இந்தத் தேவ குமாரன் நான் படித்த கிறிஸ்து அல்ல என்று ஏனோ எனக்குத் தோன்றியது. அவரால் எப்படி இறுக்கமான, பரிசுத்தமான, அமைதியான இடத்தில் அடைபட்டுக் கிடக்க முடியும்? 

அவர் வனாந்திரத்திலும் பள்ளம் மேடுகளிலும் அலைந்து திரிந்தவர் அல்லவா? நம் உள்ளேயும் நமக்கு வெளியிலும் பரவிக்கிடக்கும் அழுக்கைச் சுத்தம் செய்த அவர் கரங்கள் எப்படிப் பளிங்கு போல் சுத்தமாக இருக்க முடியும்?

என் கிறிஸ்து ஒரு மனித குமாரன். தினம் தினம் சாலையில் கடந்து செல்லும் சாமானிய மனிதரைப் போன்றவர் அவர். எந்தப் பளபளப்புகளும் அவர் மீது ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. 

பிரகாசமான ஒளி எதுவும் அவர் தலைக்குப் பின்னாலிருந்து புறப்பட்டு வரவில்லை. தூய வெள்ளை அங்கி எதுவும் அணிந்திருக்கவில்லை அவர். இன்ன நிறம் என்று சொல்ல முடியாத, கசங்கிய ஆடை ஒன்றைத் தன்னுடலின் மீது எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் என்னை நெருங்கி வந்து நேரடியாகப் பேசுகிறார். அவர் சொற்கள் எனக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.

எனவே அவர் எனக்கு நெருக்கமானவர். அவர் என் தோழர். கிறிஸ்துவின் தோழராக வாழ்வது எளிதல்ல. 

குறை சொல்லாமல் முள் கிரீடத்தை வாங்கி அணிந்துகொள்ளும் வலு கொண்டவரே அவருடைய தோழராக இருக்க முடியும். தன் அங்கியைக் கழற்றி முகமறியாதவருக்கு அளித்துவிட்டு, குளிரில் நடுங்கியபடி வீட்டுக்கு நடந்து செல்பவரால்தான் அவர் தோழராக இருக்க முடியும். 

பாவி என்று உலகமே தூற்றுபவரை ஒரு மனிதனாக மட்டும் காணும் கண்களைக் கொண்டிருப்பவரே அவர் தோழராக இருக்க முடியும். 

உங்களை நோக்கி வெறுப்பை உமிழ்பவரை அமர வைத்து கோப்பை நிறைய, நுரை ததும்பத் ததும்ப அன்பை நிரப்பிக் கொடுப்பவரே அவர் தோழராக இருக்க முடியும்

எனவே அவர் ஒரு தேவ குமாரனாக மாற்றப்பட்டிருக்கிறார். இது ஒரு சுலபமான ஏற்பாடு. ஒரு மனிதனை கடவுளாக மாற்றுவதில் உள்ள மிகப் பெரும் வசதி அவரை இனிமேல் நீங்கள் வழிபட்டால் மட்டும் போதும் என்பதுதான். 

ஒரு கடவுளைத் திருக்கோயிலுக்குள் உங்களால் பத்திரப்படுத்திவிட முடியும். அவர் சொற்களை ஓர் ஏட்டுக்குள் புதைத்து அதைப் புனித நூலாக அறிவித்துவிடவும் முடியும்.

கௌதமர் என்றொரு மனிதர் இருந்தார். செயலால் மட்டுமல்ல சிந்தனையாலும் ஓர் உயிரையும் வதைக்காதீர்கள். வேறுபாடின்றி ஒட்டுமொத்த உலகையும் அள்ளி அணைத்துக்கொள்ளுங்கள் என்றார் அவர். 

எளிய செய்திதான். ஆனால், அதன் கனம் அதிகம் என்பதால் கௌதமரை நாம் புத்தராக மாற்றிவிட்டோம். அவருடைய அன்பும் அகிம்சையும் புனித உபதேசங்களாகச் சுருங்கிவிட்டன.

அந்த உபதேசங்களை மீண்டும் சொற்களாக மாற்ற வேண்டியிருக்கிறது. அதற்குத் தேவ குமாரனை மனித குமாரனாக மாற்ற வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். 

இது அனைவருக்கும் சாத்தியமா என்று நீங்கள் கேட்பீர்கள். இந்தியாவிலிருந்து காந்தி எனக்கு எழுதிய ஒரு கடிதத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அன்புள்ள டால்ஸ்டாய், உங்கள் வழியில் நானும் என் ராமனை ஒரு மனித குமாரனாக மாற்றியிருக்கிறேன். அவனுடைய இன்னொரு பெயர் ரஹீம். அவன் புத்தரின் நீட்சி. கோயில் கோயிலாக அல்ல, வீதி வீதியாகத் திரிந்து அவனை நான் கண்டடைந்திருக்கிறேன். 

எனக்கு அவன் அளித்த ஒரே சொல், அகிம்சை. வன்முறையும் வெறுப்பும் எங்கெல்லாம் செழித்திருக்கிறதோ அங்கெல்லாம் அகிம்சையை நான் நிரப்பிக் கொண்டிருக்கிறேன். 

எங்களை அடிமைப்படுத்தியிருக்கும் பிரிட்டனை இதே அகிம்சையைக் கொண்டு வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.’

காந்தி நிச்சயம் வெல்வார். எதிரி என்றொருவரை அன்பு உருவாக்குவதே இல்லை என்பதால் அது வெல்ல முடியாததாக இருக்கிறது. 

புத்தரிடமிருந்து நீண்டுவந்திருக்கும் 

கரம் அது. அதைத்தான் கிறிஸ்து பற்றிக்கொண்டார். அதே கரத்தை ரஷ்யாவிலிருந்து நானும் இந்தியாவிலிருந்து காந்தியும் பற்றிக்கொண்டு நிற்கிறோம். 

நான் ஒரு பௌத்தன் என்றால் காந்தியும் ஒரு பௌத்தர். நான் கிறிஸ்தவன் என்றால் காந்தியும் கிறிஸ்தவர். அவருடைய ராம் ரஹீமாகவும் இருப்பதால் நாங்கள் இருவருமே இஸ்லாமியர்களாகவும் இருக்கிறோம்.

நம்மை நோக்கி நீளும் கரம் ஒன்றுதான் என்பதால் அதைப் பற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒன்று என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என் எழுத்து. அதுதான் என் வாழ்க்கை. அதுதான் என் உயிர் மூச்சு.”   

நம்மை நோக்கி நீளும் கரம் ஒன்றுதான்   டால்ஸ்டாய்..

அசாத்தியமான நம்பிக்கை

அசாத்தியமான நம்பிக்கை  பேசாலைதாஸ்

சமீபத்தில்தான் அவனுக்குத் திருமணமாகியிருந்தது. 

அவன் தனது புது மனைவியுடன் படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். 

அவன் பயணித்த ஏரியில் திடீரென்று பெரும் புயல் அடிக்கத் தொடங்கியது. 

அவன் வீரன். 

அவனது இளம் மனைவியோ புயலைப் பார்த்து மிகவும் அஞ்சினாள். 

படகோ சிறியது; கடும் புயலில் படகு மூழ்கிவிடும் என்று அவள் அஞ்சினாள்.

 ஆனால் அவனோ அமைதியாக, எதுவுமே நடவாதது போல அமர்ந்திருந்தான்.

“உனக்குப் பயமேயில்லையா? 

நமது வாழ்க்கையின் கடைசித் தருணமாக இந்தப் பயணம் அமைந்துவிடலாம். மறு கரையை அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 

ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய, மரணம் நிச்சயம். 

நீ என்ன கல்லா, ஜடமா?” என்று கேட்டாள்

அவன் சிரித்தான். 

தன்னுடைய இடுப்பு உறையிலிருந்து வாளை எடுத்தான். 

அவளுக்கோ கூடுதலான ஆச்சரியம்- இவன் என்ன செய்கிறான்?

தன் வாளை அவளது கழுத்திற்கு நெருக்கமாக வைத்தான். 

“உனக்கு அச்சமாக இருக்கிறதா?” என்று கேட்டான்.

அவள் களுகளுவென்று சிரித்து, “உனது கைகளில் வாள் இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்? 😏😏😏

நீ என்னை நேசிப்பவன் என்று எனக்குத் தெரியும்.😁😁

” அவன் தனது வாளைத் திரும்பத் தனது உறையில் செருகினான்.

“உன்னுடைய கேள்விக்கு என்னுடைய பதிலும் இதுதான். 

கடவுள் நம்மை நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். 

அவரது கைகளில்தான் வாள் உள்ளது. 

இந்தப் புயலும் அவர் கைகளில் தான் உள்ளது. 

அதனால் எது நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

 நாம் பிழைத்தாலும் நல்லது. நாம் பிழைக்காவிட்டாலும் நல்லது. 

ஏனெனில் எல்லாம் அவர் கைகளில் உள்ளது. 

அவரால் தவறிழைக்க இயலாது.”

இந்த நம்பிக்கையைத் தான் ஒருவர் பின்பற்ற வேண்டும்.

 அப்படிப்பட்ட அசாத்தியமான நம்பிக்கை, ஒருவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடக்கூடியது. 

அதற்குக் குறைவான எதனாலும் 

எதையும் மாற்ற முடியாது. 

செல்லம்மாபாட்டி(சிறுகதை)

 செல்லம்மாபாட்டி(சிறுகதை) பேசாலைதாஸ்


செல்லம்மாபாட்டிக்கு  இருக்குறதெல்லாம் ஒரு ஓலைக்குடிசையும் கொஞ்ச தட்டுமுட்டு பாத்திரங்களும்தான். அதோட வயசக் கேட்டிங்கன்னா போன மாமாங்கம் வந்தப்போ எழுவத்தஞ்சுன்னு ஒருகணக்குச்சொல்லும் . 

அதுக்கு வருமான முன்னா ஒண்ணே ஒண்ணுதான்.எம்.ஜி.யார் பணமுன்னு வயசான வங்க சொல்லுற முதியோர் பென்சன் தான். அதுக்காகவே போஸ்ட்டுமேனுக்கு வணக்கம் சார்ன்னுசொல்லும் , அவரும் அதைப்புரிஞ்சிகிட்டு காசுவந்தாகொண்டாந்து குடுக்கமாட்டனாம்பாரு அப்புறம் அது இருக்குற நெலமையப் பாத்துட்டு அஞ்சோ பத்தோ குடுப்பாரு அப்ப நீங்க காசு குடுக்குறப்பக் கழிச்சிக்கங்கன்னு சொல்லும் அவரும் கழிச்சத்தில்ல. பாவமுன்னு

மத்தபடி ஆராவது எறக்கப்பட்டுக்குடுத்தா காசு வாங்கிக்கிரும் அப்பவும் அதேதான் சொல்லும் காசுவந்தவன்ன குடுத்துடுறேன்னு. அவங்களும் என்னத்த இதுக்கிட்ட்ப்போயி கேட்டுக்கிட்டுன்னு விட்டுருவாக 

அன்னிக்கி செல்லம்மாவுக்கு மீன்கொழம்பு 

 சாப்புடனுமுன்னு நாக்கு கேட்டுருச்சு மூலையில கெடக்குற சுருக்குப் பையத் தேடிப்புடிச்சிப் பாத்தா காஞ்சுபோன வெத்தல தான் இருந்துச்சு 

ஆருகிட்டகாசுகேக்கலாமுன்னு ரோசன பண்ணிட்டு இருந்தப்ப கண்கண்ட தெயவம் போஸ்ட்டுமேன் வந்தாரு வழக்கம்போல கையத்தூக்கவும் அவரு அதெல்லாம் வரல. இது ஏப்ரல்மாசம் கொஞ்சம் லேட்டாத்தான் வருமுன்னாரு

அது மொகத்தைப் பாத்துத் தெரிஞ்சிக் கிட்டாரு. பையத்துளாவிப் பாத்தா அன்னிக்கி டீக்குடிக்க வைச்சிருந்த காசு அஞ்சுரூவா இருந்துச்சு. இந்தா வைச்சிக்கன்னு குடுத்துட்டு மறக்காம சபளத்துல எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டுக்கெளம்புனாரு .

அப்ப செல்லம்மா சொல்லிச்சி மத்தியானம் வாரப்போ சாப்புட்டுபோப்பா இன்னிக்கி மீன்கொழம்புன்னுச்சுஅவருசிரிச்சிக்கிட்டே வாரன்னு சொல்லிட்டுப்போனாரு  பக்கத்து வீட்டு இருளாயிகிட்ட கொஞ்சம் அரிசி கேப்பமுன்னு போச்சு செல்லம்மா 

இருளாயி இதப்பாத்ததும் இங்கயே கவுந்துகெடக்குப்பானன்னு சொன்னவன்ன 

இந்தா அஞ்சுரூவா வைச்சிக்கன்னு குடுத்துச்சு. இருளாயிக்கு பாவமாப்போச்சு  இரு வாரேன்ன்னு உள்ளபோயிட்டு ஒருடம்ளர் அரிசிகொண்டாந்துச்சு ரேசன் அரிசிதான். 

செல்லம்மாவுக்கு கண்ணு கலங்குச்சு. திரும்பிவாரப்ப மீனு மீனுன்னு கத்திட்டு சின்னப்பொண்ணு வந்துச்சு

செல்லம்மா கூப்புட்டவன்ன ஓங்கூட யாவாரம் செய்யமுடியாதம்மா அஞ்சுரூவாக்கி மீனு கேப்பன்னு சொல்லிட்டு வேகமாப்போயிடுச்சு

செல்லம்மாவுக்கு புசுக்குன்னு போச்சு வீட்டுல போயி ஒக்காந்துருச்சு கொஞ்சநேரத்துல சின்னப் பொண்ணு திரும்பி வந்து நாலு காரப்பொடி மீனகுடுத்துட்டு காசுவேணாம் எங்க ஆத்தாளுக்குக்குடுத்ததா நெனச்சிக் கிறேன்னு சொல்லிட்டு போயிடுச்சு 

செல்லம்மா அடுப்பபத்தவைச்சி ஒலைய போட்டுட்டு மீன அரிய ஆரம்பிச்சிச்சி. மீனு வாசம்முன்னவன்ன அங்க திரியிற கெழட்டுப்பூனை வந்துருச்சு.

மீனச்சுத்தம்பண்ணி கழுவுறதுன்னா மண்சட்டில கல்லு மஞ்சள் அப்புறம் உப்பப்போட்டு அதுக்குள்ள மீனப்போட்டு கழுவும். கழுவி வாரதண்ணில  மொகம்கழுவுறமாதிரி தெளிவாஇருக்கனும் திரும்ப உப்புப்போட்டு வைச்சிட்டு புளிய ஊறப்போட்டு  நல்லா தூக்கலா கரைச்சி வைச்சிட்டு

 மண்சட்டிய அடுப்புல போட்டு வீட்டுல இருந்த வெங்காயம் காஞ்சிகெடந்த பச்சமொளகா கறிவேப்புல போட்டு வதக்கி அத எடுத்து அம்மிமில வைச்சி மையா அரைச்சி மொளகாத்தூள் சேத்து கொதிக்கவைச்சி அதுல ஒரு வ வாசம் வாரப்ப த்தான் மீன் போடனும். அப்புறம் ஒரு கொதிதேன் அம்புட்டுத்தேன் குடிசபூராம் வாசம் தூக்குச்சு பூனை மிய்யா மிய்யான்னு சுத்திவந்துச்சு அதுக்குள்ள சோத்த வடிச்சி எறக்கி தட்டுல போட்டுட்டு அதுமேல கொளம்ப ஊத்தி மீன மேல எடுத்துவைச்சிட்டு சாப்புட ஒக்காந்துச்சு

அந்த மீன் கொளம்பு வாசம் தெருவில போறவுகளைக்கூட  சுண்டி இழுத்து நாக்குல எச்சி ஊறவைச்சிப்புடும். கொஞ்சம் மான ரோசம்பாக்காதவுகன்னா கைய நீட்டி ஆத்தா ஒரு துளி உள்ளங்கையில காட்டு நு வாங்கி நக்கிப்பாத்து நாக்கைச்சொட்டு விட்டுட்டுப்போவாக....

செல்லம்மாவும் மொதல்ல உள்ளங்கையில ஒரு சொட்ட விட்டுப்பாத்து அத நாக்குல வைச்சிட்டு தலைய ஆட்டிக்கிடுச்சு வசமாத்தேன் கொழம்பு வந்திருக்கு சுள்ளுன்னு தொண்டையில எறங்கும்போது கண்ண மூடி ரசிச்சிச்சி....அப்புறம் சோத்தப்பெசஞ்சி உருண்டை உருட்டி பொக்கைவாய்க்குள்ள தள்ளுச்சு....

ஒருவாயிஉள்ளபோனதும் அதுகண்ண மூடி ரசிச்சிச்சு மீன் கொளம்பு மீன் கொளம்புதான் அது தொண்டக்குள்ள போறது செத்துப் போறசொகம்தான்னு சொல்லிக்கிச்சு

அப்ப பூன பாட்டியப் பரிதாபமாப்பாத்துச்சு அதுக்கு ஒரு மீனக்குடுத்து சாப்புடுசாப்புடு நீயும் கெழம்தான ஒனக்கு யாரு குடுப்பா எனக்காவது குடுப்பாகன்னு சொல்லிச்சு

அப்ப மீன திண்ணு புட்டு செல்லம்மாவ வந்து பூனை  ஒரசி மிய்யாவ் மிய்யாவுன்னு சுத்துச்சு.........

அதப்பாக்குறப்போ சின்ன வயசுலயே செத்துப் போன மக நெனப்பு வந்து மீனு செல்லம்மா வுக்கு தொண்டக்குழிய விட்டு எறங்கல கண்ணுல கண்ணீர் வழிஞ்சிச்சு.....

இந்த எழவெடுத்த நெனப்பு வந்துருச்சுன்னா செல்லம்மா தொண்டைய அடைச்சிப்புடும். திங்கிற நேரத்துல பத்தியம் நெனப்புக்கு வந்தா தின்னமாதிரிதான் ... நீயாவது திண்ணுன்னு சொல்லி  பூனைக்கிக் கொடுத்துச்சு.... 

பூனை நாக்கச் சொழட்டிச் சொலட்டி டிங்கிறதப்பாத்து.... லேசான சந்தோசம் வர மீதமிருந்த சோத்த கொழம்பு சட்டில போட்டு பெறட்டி உருட்டி வாய்க்குள்ள தள்ளுச்சு அப்ப கண்ணு சொருக சொல்லுச்சு... சோத்துக்குள்ள இருக்காண்டா சொக்கன்னு....

வீரமங்கையர் வெல்வர்

  வீரமங்கையர் வெல்வர்   பேசாலைதாஸ் ‘ ‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டா...