பின் தொடர்பவர்கள்

வியாழன், 28 செப்டம்பர், 2023

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ்

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ் 


கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது.

அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தை விசாரித்தது.

உடனே அந்த கன்று, "அம்மா, இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. என் அழகு அதற்கு இல்லை. கன்னங்கரேலென்று மிகவும் கருப்பாக உள்ளது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் முதலாளியின் மகன் என் மீது அன்பு காட்டுவது இல்லை. ஆனால் அந்த ஆட்டுக்குட்டியிடம் மட்டும் விளையாடுகிறான். அதற்கு பசுமையான புல் தருகிறான். அதன் கழுத்தில் அழகான மணி ஒன்று கட்டி அழகு படுத்துகிறான். ஆனால் என்னுடைய நிலையைப் பார். இங்கே கிடக்கும் காய்ந்த வைக்கோலைத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. என்னிடம் என்னம்மா குறை இருக்கிறது? " என்றபடி மீண்டும் அழத் தொடங்கியது.

"கண்ணே, இதற்காகவா வருத்தப்பட்டு அழுகிறாய்? அதிகமான மரியாதையும், அதிகமான இன்பத்தையும் அனுபவிப்பது மிக்வும் ஆபத்தானது. பிறருக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்த்துப் பொறாமைப் படாதே, அந்த ஆடு பெறும் நலமும் வளமும் அதன் அழிவிற்கே. அதன் நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டுமே தவிர பொறாமைப் படாதே." என்றது தாய்ப்பசு.

ஒரு சில மாதங்கள் கடந்தன. அந்த கன்றுக்குட்டி மீண்டும் அழுது கொண்டே வந்தது.

தாய்ப்பசு அழுகையை நிறுத்திக் காரணம் கேட்டது.

"அம்மா, நடந்த கொடுமையை எப்படிச் சொல்வது? அதை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது. இன்று காலையில் அந்த ஆட்டைக் குளிப்பாட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதற்கு சுவையான உணவெல்லாம் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒருவன் பட்டாக்கத்தியுடன் வந்து அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். பிறகு அதன் உடலையும் துண்டு துண்டாக வெட்டினார்கள்." என்று சொல்லி மீண்டும் தேம்பித் தேம்பி அழுதது.

"கண்ணே, நான் அன்றே உனக்குச் சொல்லவில்லையா? மாலை மரியாதைகள், புகழ் மொழிகள் இவற்றிற்குப் பின்னால் அழிவு காத்திருக்கிறது. நமக்குக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே மேலானது. மனிதர்களில் பலரும் இப்படித்தான் புகழ்ச்சியான பேச்சுக்கு மயங்கி அனைத்து உடமைகளையும் இழந்து கடைசியில் அழிந்தும் போய் விடுகிறார்கள்." என்றது தாய்ப்பசு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...