Followers

Tuesday 26 October 2021

காயப்பட்ட உள்ளங்கள்

 காயப்பட்ட உள்ளங்கள்  பேசாலைதாஸ்


அமெரிக்காவில் ஆப்பிள் பழங்கள் அதிகமாக விளையக்கூடிய மைனே (Maine) என்னும் இடத்தின் வழியாக, ஒருவர் நடந்துபோய்க் கொண்டிருந்தார். அவர் போகும் வழியில், தன்னுடைய விவசாய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அந்த விவசாய நண்பரோ, அம்மனிதரை தன்னுடைய ஆப்பிள் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்.

அவர் விவசாய நண்பருடைய ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றபோது ஒரு மரத்தில் மட்டும், மற்ற மரங்களை விட பழங்கள் அதிகமாகக் காய்த்துக் கிடந்தன. எந்தளவுக்கு என்றால், அந்த மரத்தின் கிளைகள் முறிந்து போகும் அளவுக்கு பழங்கள் காய்த்துக் கிடந்தன.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன அந்த மனிதர் விவசாய நண்பரிடம், “ஏன் மற்ற மரங்களை விட, இந்த மரத்தில் இவ்வளவு பழங்கள் காய்த்துக் கிடக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு விவசாய நண்பரோ, “அம்மரத்தின் அடிப்பகுதியை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்” என்றார். அவரும் அம்மரத்திற்கு அருகே சென்று, அதன் அடிப்பகுதியை உற்றுப் பார்த்தார். அங்கே மரம் நன்றாக வெட்டப் பட்டிருந்தது.

“எதற்காக இம்மரத்தின் அடிப்பாகத்தை இப்படி வெட்டி இருக்கிறீர்கள்? ” என்று கேட்டார். அதற்கு விவசாய நண்பரோ, “எப்போதெல்லாம் ஒரு மரம் கனி கொடுக்காமல் இருக்கின்றதோ, அப்போதெல்லாம்  நான் அதன் அடிப்பாகத்தை நன்றாக வெட்டிவிடுவேன். அதுவும் முன்பை விட அதிகமான கனிகளைக் கொடுக்கும். இதுதான் நான் இந்த ஆப்பிள் மரங்களிலிருந்து கண்டறிந்த உண்மை” என்றார்.

காயங்கள் படுகின்ற ஆப்பிள் மரம் எப்படி அதிகமான கனிகளைத் தருகின்றதோ, அது போன்று தன்னுடைய வாழக்கையில் துன்பங்களையும், சவால்களையும் சந்திக்கின்ற ஒரு மனிதன்.. ஒருநாள் நலன்களையும், ஆசிர்வாதங்களையும் நிச்சயமாக பெறுவான்._

“வாழ்க்கை என்பது ரோஜாப்பூக்கள் நிறைந்த சுகமான பாதையல்ல.. அது கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை! அந்தப் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை, நேர்மறை எண்ணத்தோடு சந்தித்தால் உலகப் புகழ் பெறுவது உறுதி” என்பார் மால்ஹான்காக் என்ற எழுத்தாளர்.

இது முற்றிலும் உண்மை. இயேசு உலகத்தை பாவத்தின் பிடியிலிருந்தும், இருளின் பிடியிலிருந்தும் மீட்டெடுப்பதற்காக, பாடுகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். நாமும் நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்பங்களை, நேர்மறை எண்ணத்தோடு எதிர்கொண்டால்..வெற்றி பெறுவது உறுதி.!

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...