பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 12 ஜனவரி, 2018

0488 தங்க நாணயம்,

தங்க நாணயம்,

ஒரு கிராமத்தில் ஒர் அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒரு நாள் ஊர்த் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாக, "அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார். அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டார். பையன் ”தங்கம்” என்று சொன்னான். “பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” கோபத்துடன் கேட்டார் அறிஞர்.

"தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை ‘அறிஞரின் மகனே’ என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்திருந்தால், அன்றோடு இந்த விளையாட்டு நின்றிருக்கும், எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போயிருக்கும். எனவே தான் அவ்வாறு செய்தேன்” என்று விளக்கம் சொன்ன மகனைப் பார்த்து, அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிய வேண்டியிருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...