Followers

Tuesday 3 January 2023

ஒத்திப்போடுதல்.

 ஒத்திப்போடுதல். பேசாலைதாஸ் 


ஒரு உணவக உரிமையாளர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்கு வெளியே வீதியில் ஒரு வயதானவர் ஞானியை போன்ற தோற்றத்துடன் வருவதை கண்டார்.

அவரிடம் ஏதாவது ஞானக்கருத்துகளை கேட்டுக்கொள்ளலாம் என இருக்கையிலிருந்து எழுந்து சென்று வீதியிலேயே நின்றுகொண்டு அவரிடம் ஐயா, தாங்கள் எனக்கு ஏதாவது ஞான கருத்துக்களை வழங்க வேண்டும் என்றார்.

அவரும் சில கருத்துக்களை அவனுக்கு சொன்னார்.

அவன் அதை கேட்டுவிட்டு உங்கள் கருத்துகள் நன்றாக உள்ளது ஆனால் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் வளர்ந்தவுடன் இந்த உணவகத்தை அவனிடம் விட்டுவிட்டு பிறகுதான் முயற்சி செய்யமுடியும் என்றான்.

சரி பரவாயில்லை என்று சொல்லிய ஞானி அவனிடம் நான் பசியாக உள்ளேன் நான் உணவருந்தி ஓய்வெடுக்கவேண்டுமே என்றார்.

அதற்கு அவன் சொன்னான் அதற்கென்ன ஐயா, இதோ தெரு குழாயில் தண்ணீர் வருகிறது அதை குடித்துவிட்டு எதிரில் உள்ள மரத்தடியில் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான்.

சிரித்துகொண்டே தண்ணீரை குடித்துவிட்டு அவர் போய்விட்டார்.

ஆண்டுகள் கடந்தது அந்த வழியே மீண்டும் ஒருநாள் ஞானி வந்தார்.இப்பொழுது உணவகம் வளர்ந்திருந்தது.உரிமையாளர் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை போடப்பட்டு அதில் அவனுடைய மகனும் அமர்ந்து உணவகத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

ஞானியை பார்த்ததும் எழுந்து ஓடிவந்த முதலாளி.எனக்கு இன்னும் ஏதாவது ஞானக்கருத்துகள் சொல்லவேண்டும் என்றான்.அவரும் சொன்னார்.பதிலுக்கு அவன் சொன்னான் இப்பொழுது முடியாது என் மகனுக்கு தொழில் தெரியவில்லை கற்றுக்கொடுத்துவிட்டு பிறகு முயற்சி செய்கிறேன் என்றான்.

அவர் சரி பரவாயில்லை எனக்குபசியாக உள்ளது என்றார். அவன் குழாயடியையும்,மரத்தையும் காட்டினான்.தண்ணீரை குடித்து விட்டு போய்விட்டார்.

ஆண்டுகள் கடந்தது.மீண்டும் ஞானி வந்தார்.

முதலாளி இப்பொழுது கிழவன் ஆகிவிட்டான்.அவனுக்கு அவனுடைய மகன், உணவகத்தின் வெளியே ஒரு நாற்காலியை கொடுத்து உட்கார வைத்திருந்தான்.

ஞானியை பார்த்ததும் கிழவன் எழுந்து ஓடிவந்தான்.,ஐயா எனக்கு எதாவது ஞானக்கருத்துகள் சொல்லுங்கள் என்றான்,அவரும் சொன்னார்.இப்பொழுது முடியாது எனக்கு வயதாகிவிட்டது என்றான்.

மேலும் ஞானி கேட்கும் முன் குழாய் நீர்,மரத்தை சுட்டி காட்டினான்.

ஞானி போய்விட்டார்.

ஆண்டுகள் தாண்டி மீண்டும் வந்தார் ஞானி.முதலாளியை காணவில்லை.அவனுடைய புகைப்படம் மாலை போட்டு மாட்டப்பட்டிருந்தது.

மகன் ஒரு நாயை கல்லால் அடித்து விரட்டிவிட்டு உணவகத்திற்கு உள்ளே போனான்.

நாய் இவரை பார்த்ததும் ஓடி வந்து வாலை ஆட்டியது.

ஞானி அது யாரென்று புரிந்து கொண்டார்.தன்னிடம் இருந்த ஒரு தடியால் அதன் தலையில் ஒரு போடு போட்டார்.

நாய் இப்பொழுது பேசியது.

அய்யா முன்பு நீங்கள் சொன்னதை நான் கேட்காமல் போய்விட்டேன் இப்பொழுது என் மகனே என்னை கல்லால் அடிக்கிறான்.நான் விடுதலையாக எதாவது ஞான கருத்துக்கள் சொல்லுங்கள் என்றது.

ஞானி கருத்துக்கள் சொன்னார்.அதற்கு நாய் சொன்னது......... 

இப்பொழுது என்னால் முடியாது ஏனென்றால் இப்பொழுதுதான் எட்டு குட்டிகள் போட்டிருக்கிறேன் அது வளர்ந்தவுடந்தான் முயற்சி செய்யவேண்டும் என்றது.

தடியால் இன்னொரு அடி போட்டார்.

நாய் கத்திக்கொண்டே ஓடிசென்று குழாயடியில் வழிந்தோடும் நீரை குடித்துவிட்டு மரத்தடியில் படுத்துக்கொண்டது.

மனதின் மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்று ஒத்திப்போடுதல்.

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...